அன்பு சகோதரி பிளாரன்ஸ்...
நான், 30 வயதான பெண்; திருமணமாகி, மூன்று ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு வயதில், ஆண் குழந்தை உள்ளது. அவனுக்கு பெரிய சட்டி மாதிரி வயிறு இருக்கிறது; முகம் வெளிறி இருக்கிறது. எப்போதும், பின்புறத்தை சொறிந்தபடியே இருக்கிறான்; கடுமையான வயிற்றுப் போக்கால் அவதிப்படுகிறான்.
மலத்தில், ரத்தமும், சளியும் வெளியேறுகிறது. வெளியில், விளையாட விட்டால், மண்ணை தின்கிறான். அக்கம் பக்கத்தவர், 'மருத்துவரிடம் போவதை விட, மந்திரித்து கயிறு கட்டினால் சரியாகி விடும்...' என கூறுகின்றனர். என்ன செய்யலாம் சகோதரி...
- இப்படிக்கு,
ம.ராஜம்.
அன்பு சகோதரிக்கு...
மகனுக்கு நீங்கள் குறிப்பிடும் அறிகுறிகள் தவிர, கீழ்க்கண்ட அறிகுறிகளும் இருக்கும்...
அடி வயிற்றில், வலி, வாந்தி, மயக்கம், வாயு பிரிதல், எடை குறைவு.
வேறொன்றும் இல்லை; அவனுக்கு வயிற்றில் பூச்சிகள் இருக்கும் என நினைக்கிறேன்.
சரிவர சமைக்காத, மாட்டு, பன்றி இறைச்சி சாப்பிடுவதால் இது போன்று ஏற்படும். சுகாதாரமற்ற சூழ்நிலை, சுய சுத்தம் பேணாமை, சுத்தமில்லாத நீரை குடிப்பது மற்றும் மண்ணில் விளையாடுவதால் இது போன்று ஏற்படலாம்.
உலகில், 10 சதவீதம் பேர் வயிற்றில் பூச்சி பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு, மந்திரித்து தாயத்து கட்டினால் குணமாகாது; மருத்துவரிடம் தக்க ஆலோசனை பெற வேண்டும்.
மலப்பரிசோதனை, ஸ்காட்ச் டேப், ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே, சி.டி., ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ., ஸ்கேன் மூலம், வயிற்றில் புழுக்கள் இருப்பதை உறுதி செய்யலாம்.
மனித வயிற்றில், பல வகை புழுக்கள் தொற்றி வசிக்கின்றன.
அது பற்றிய விபரம்...
* உருண்டைப் புழு - மெபென்டஸோல் அல்லது அல்பென்டஸோல் மாத்திரைகள் சாப்பிட்டு, இவற்றை ஒழிக்கலாம்
* தட்டைப்புழு - பில்ட்ரைசைடு வாய் வழியாக எடுத்து, இப்புழுக்களை ஒழிக்கலாம்
* கொக்கிப்புழு - இரும்புசத்து மாத்திரைகளுடன், அல்பென்டசோல் எடுத்து ஒழிக்கலாம்.
கீழ்க்குறிப்பிடும் வைத்தியங்கள் செய்தாலும், வயிற்றில் புழுக்களை அழிக்கலாம்.
* நசுக்கிய தேங்காய் சாப்பிட்ட, மூன்று மணி நேரத்திற்குப் பின், வெதுவெதுப்பான பாலுடன், இரண்டு தேக்கரண்டி விளக்கெண்ணெய் கலந்து குடிக்கலாம்
* மோரில், ஒரு தேக்கரண்டி மஞ்சள் துாள் கலந்து குடிக்கலாம்
* வெறும் பூண்டை மெல்லலாம்; பூண்டு டீ குடிக்கலாம்
* கிராம்புகளை நசுக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி குடிக்கலாம்
* வெறும் வயிற்றில், காரட் சாப்பிடலாம்
* ஆப்பிள் சிடார் வினிகரை, தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.
மகனை, மண்ணில் விளையாட விட வேண்டாம். ஒவ்வொரு வாரமும், அவன் நகங்களை வெட்டி சீர்படுத்தி சுத்தமாக்கவும்.
வெறும் காலில் நடக்க வைக்க வேண்டாம்; மாமிசங்களை நன்கு வேக வைத்து சாப்பிட கொடுக்கவும். மலஜலம் கழித்த பின், மகனின் கைகளை டெட்டால், திரவ சோப்பு போட்டு கழுவவும்.
இரண்டே மாதத்தில், பானை வயிறு மறைந்து, முழு ஆரோக்கியமாகி விடுவான் மகன். கவலைப்பட வேண்டாம்.
- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்!