கடவுளுக்கு சர்க்கரை பொங்கல், பஞ்சாமிர்தம், வெண் பொங்கல் என்று, விதவிதமாக பிரசாதம் படைத்து வழிபடுவர். தஞ்சாவூர் மாவட்டம் அழகாபுத்துார் படிக்காசுநாதர் கோவிலில் உள்ள முருகப் பெருமானுக்கு துவரம் பருப்பு படைப்பது, வித்தியாசமாக உள்ளது.
இவ்வூரில் பிறந்த, புகழ்த்துணை நாயனார், இக்கோவிலிலுள்ள சிவலிங்கத்துக்கு தினமும் பிரசாதம் படைத்து, பூஜை செய்து வந்தார். சிவனடியார்களுக்கு தானமும் செய்வார்.
ஒரு கட்டத்தில் இவரது செல்வம் வற்றியது. சாப்பிடவே பணமில்லை. இருந்தாலும், மனம் தளராமல், தண்ணீரால் லிங்கத்துக்கு அபிஷேகம் செய்ய எண்ணி, ஒரு குடம் தண்ணீருடன் கருவறைக்குள் வந்தார். பசி மயக்கத்தில் தள்ளாடி கீழே சரிந்தார். சிவலிங்கத்தின் மீது குடம் விழுந்து, தண்ணீர் கொட்டி அபிஷேகம் ஆகி விட்டது. நாயனார் மயங்கி விட்டார்.
அப்போது சிவன் அங்கு தோன்றி, அவரை எழுப்பி, தன் மீது கொண்ட பக்தியை பாராட்டினார்.
'தினமும் ஒரு பவுன் தங்கக்காசை படியில் வைத்து விடுவேன். அதை வைத்து வறுமையைத் தீர்த்துக் கொள்...' என்றார். அதை தனக்கு மட்டுமின்றி, அடியார்களின் பசி தீர்க்கவும் பயன்படுத்திக் கொண்டார், நாயனார். இதன் அடிப்படையில், இந்தக் கோவிலில் ஒரு வழிபாட்டு பழக்கமும் ஏற்பட்டது.
கோவில் படியில் இரண்டு காசுகளை வைத்து, பூஜை முடிந்ததும், ஒன்றை எடுத்து, வீட்டில் பூஜை அறை அல்லது பீரோவில் வைப்பர், பக்தர்கள். இதனால், செல்வம் பெருகும் என்று நம்புகின்றனர்.
படிக்காசு கொடுத்த சிவன், படிக்காசுநாதர் எனப்படுகிறார். இந்த லிங்கத்தை குபேரலிங்கம் என்றும் சொல்கின்றனர். அம்பாள் சவுந்தர்ய நாயகி எனும் அழகம்மையிடம், மாங்கல்ய வரம் கேட்கின்றனர், பெண்கள்.
இங்குள்ள முருகன், வழக்கமான வேலுடன் சங்கு, சக்கரமும் ஏந்தியுள்ளது விசேஷம். ஒருசமயம் அசுர வதத்திற்கு கிளம்பிய போது, அனைத்து தெய்வங்களும் தங்கள் ஆயுதங்களை முருகனுக்கு வழங்கினர். சங்கு சக்கரத்தைக் கொடுத்தார், திருமால்.
பொதுவாக, முருகனின் மயில் வலப்பக்கம் திரும்பியிருக்கும். இங்கு, இடப்பக்கமாக இருப்பது மற்றொரு விசேஷம். இதை, இந்திர மயில் என்றும், மூலவரை கல்யாண சுந்தர சுப்பிரமணியர் என்றும் குறிப்பிடுகின்றனர்.
ராகு, கேது, செவ்வாய் தோஷத்தால் திருமணம் தாமதமானால், இவருக்கு, துவரம் பருப்பு அல்லது துவரம் பருப்பு சாதம் படைத்து வணங்குவர். இவர், துவரம் பருப்பு பிரியர் என்பதால், துவரம் பருப்பு படையல்.
இங்குள்ள நவக்கிரக மண்டபம் முன், ஒன்பது குழிகள் உள்ளன. முன்னோருக்கு தர்ப்பணம் செய்யாமல், பிதுர் தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இந்தக் குழிகளில் விளக்கேற்றினால் தோஷம் தீரும் என்பது நம்பிக்கை.
கும்பகோணம் - நாச்சியார்கோவில் சாலையில், 6 கி.மீ., துாரத்தில் அழகாபுத்துார் உள்ளது.
தி. செல்லப்பா