மாத்தி யோசிப்போம்!
சமீபத்தில், என் நண்பனுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமணத்திற்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருந்த நிலையில், வழக்கம் போல் அவன், வேலைக்கு போயிருக்கிறான். வழியில், சிறு விபத்து ஏற்பட்டு, காலில் லேசான எலும்பு முறிவு ஏற்படவே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
அவனை காண வந்த உறவினர்களோ, 'பெண்ணை நிச்சயம் செய்த நேரத்தில், உனக்கு இப்படியொரு விபத்து ஏற்பட்டிருக்கிறது. இன்னும் திருமணமாகி, புகுந்த வீட்டிற்குள் அவள் காலடி எடுத்து வைத்தால், யார் யாருக்கு என்னென்ன தீமைகள் ஏற்படுமோ... அதை நினைத்தாலே குலை நடுங்குகிறது.
'இப்போதும் ஒன்றும் கெட்டுப் போய் விடவில்லை. அந்தப் பெண்ணை நிராகரித்து, வேறு பெண்ணை பார்த்துக் கொள்ளலாம்...' என்றனர்.
அதற்கு நண்பனோ, 'பெண் வீட்டாரிடம் உங்கள் கருத்தை தெரிவித்தால், அவர்கள் எவ்வளவு வேதனைப் படுவர்; அவளும் உயிரை மாய்த்துக் கொள்ள வாய்ப்புள்ளது. மாறாக, எனக்கு ஒரு பெரிய விபத்து ஏற்பட இருந்தது. இவளை நிச்சயம் செய்ததன் நற்பலனாக அது சிறு விபத்தோடு முடிந்து விட்டது.
'அதாவது, தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போனது என்று நேர்மறையாக ஏன் நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது?' என, பதிலளித்து, அந்த பெண்ணின் வாழ்க்கையை காப்பாற்றினான்.
மனிதர்கள் தம் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளுக்கு, பிறர் மேல் பழி போடுவதே வழக்கமாகி விட்டது. அதிலிருந்து எப்போதுதான் வெளிவரப் போகின்றனரோ!
- கே. ஜெகதீசன், கோவை.
சமையல்காரரின் சாமர்த்தியம்!
உறவினர் மகன் திருமணத்திற்கு, குடும்பத்துடன் சென்றிருந்தேன். இரவு, திருமண பந்தியில், ஏகப்பட்ட உணவு வகைகளுடன், தடபுடலான விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
ஒவ்வொரு பந்தி முடிந்த பிறகும், சாப்பிடும் அனைவரிடமும், கேட்டரிங் பணியாளர்கள், ஒரு சிறிய புத்தகத்தை வழங்கினர். அதை பிரித்து படித்ததும், 'ஒரே கல்லில் இரண்டு மாங்காய்' என்பது போன்ற, சமையல்காரரின் சாமர்த்தியத்தை எண்ணி வியந்தேன்.
அந்த புத்தகத்தில், இரவும், காலையும் வழங்கப்படும் உணவு வகைகளின் சமையல் செய்முறைகளை அச்சடித்திருந்தனர். புத்தகத்தின் முதல் பக்கத்தில், மணமக்களுக்கான திருமண வாழ்த்துகளையும், கடைசி பக்கத்தில், அவர்களுடைய கேட்டரிங் நிறுவன விளம்பரத்தையும் போட்டிருந்தனர்.
இது, திருமணத்திற்கு வந்திருந்த அனைவருடைய பாராட்டுதல்களுடன், புதிய, 'ஆர்டர்'களையும் அவர்களுக்கு பெற்றுக் கொடுத்தது.
போட்டி நிறைந்த இவ்வுலகில், எதிர்நீச்சல் போட்டு முன்னேற, செய்யும் தொழிலில் புதுமையாக யோசித்து செயல்படத்தான் வேண்டும். அப்போதுதான், வெற்றி பெறவும் முடியும்; பெற்ற வெற்றியை தக்க வைத்துக் கொள்ளவும் முடியும்.
- டி. பிரேமா, மதுரை.
தொழில் ரகசியம்!
சமீபத்தில், என் உறவுக்கார பெண்ணை பார்க்க, அவள் வீட்டுக்கு சென்றிருந்தேன். வீட்டில், தையல் மிஷின் வைத்து, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு ஜாக்கெட் தைத்து கொடுக்கிறாள்.
அவள் வசிக்கும் அதே தெருவில், மேலும் சில பெண்கள், தையல் தொழிலை செய்து வந்தாலும், மற்றவர்களை விட இவளுக்கு வேலை அதிகம் வரும்.
நான் வீட்டுக்குள் நுழைந்தபோது, ஒரு பழைய ஜாக்கெட்டுக்கு கொக்கி வைத்து தைத்துக் கொண்டிருந்தாள். அதை பார்த்ததும், 'ஏன், புது துணிகள் எதுவும் இல்லையா... இதை தைத்துக் கொண்டிருக்கிறாயே...' என்று கேட்டேன்.
அதற்கு, 'இல்லையம்மா, புதிய வேலைகள் நிறைய இருக்கிறது. இது, அளவுக்காக கொடுத்த ஜாக்கெட். இதில் கொக்கிகள் அறுந்துள்ளன. அவைகளை எடுத்து விட்டு, புதிய கொக்கிகள் வைத்து தைத்து கொடுக்கிறேன். அளவுக்காக வரும் ஜாக்கெட் கிழிந்திருந்தாலும், அதில் தையல் போட்டு கொடுத்து விடுவேன். இதற்காக கட்டணம் எதுவும் வாங்குவதில்லை.
'இதனால், என்னிடம் வரும் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். மற்றவர்களிடமும் இதை சொல்லி, என்னிடம் துணிகள் தைக்க பரிந்துரை செய்கின்றனர். எனவே, எனக்கு எப்போதும் வேலை இருந்து கொண்டே இருக்கும்...' என்றார்.
அப்போதுதான் எனக்கு புரிந்தது, அவளின் தொழில் ரகசியம். அவளை பாராட்டி விட்டு வந்தேன்.
- அ. ஆரிபாபேகம், மதுரை.