நடிகை - பேட்மிண்டன் வீரரின் ஜாலி சந்திப்பு!
'குமுதம்' இதழுக்காக, -நவ., 8, 1978 புதன்கிழமை இரவு, 8:30 மணிக்கு, சென்னை தியாகராய நகர் உஸ்மான் ரோட்டில், இப்போது, முருகன் இட்லி கடைக்கு எதிராக இருக்கும் ஸ்ரீதேவி வீட்டிற்கு, இந்திய பேட்மிண்டன் சாம்பியன் பிரகாஷ் படுகோனே மற்றும் யூனியன் பேங்க் அதிகாரிகள் ஐந்து பேர், ஒரு காரில் வந்து இறங்கினர்.
நகைச்சுவையோடு பேசினார், ஸ்ரீதேவி.
'நீங்கள் பெரிய சாம்பியன். எனவே, நானும், 'குமுதம்' நிருபரும் டபுள்சாக சேர்ந்து கேட்கிற கேள்விகளுக்கு நீங்கள் சிங்கிள்சாக பதில் சொல்லணும்; ஓ.கே.,' எனக் கூற, அறையில் ஒரே சிரிப்பு.
அவர் எப்படி சாம்பியன் ஆனார், என்னென்ன சாதனைகள் படைத்திருக்கிறார் என்றெல்லாம் கேட்டறிந்தார், ஸ்ரீதேவி.
'உங்களுக்கு பெண் விசிறிகள் உண்டா?' என்று கேட்டார், ஸ்ரீதேவி.
'உண்டு. ஆங்கிலம், கன்னடத்தில் பாராட்டியும், விமர்சித்தும் கடிதம் வரும். 'ஆட்டோகிராப்' கேட்டும் வரும். கொஞ்சம், 'ஐ லவ் யூ'ம் வரும்...'
'பதில் கடிதம் 'டைப்' செய்து அனுப்ப சொல்வீர்களா?'
'இல்லை. நான் கையிலே தான் எழுதுவேன்...' என்ற, பிரகாஷ், 'உங்களுக்கும் ஏராளமான கடிதங்கள் வரும் இல்லையா?' என்று கேட்டார்.
'வரத் தானே செய்யும். 'டீசன்ட்' ஆக நடிப்பு மற்றும் மற்ற விஷயங்களைப் பற்றி எழுதின கடிதங்களுக்கு நானும் பதில் போடுவேன்...'
'ரொமான்ஸ், காதல் பற்றி உங்க அபிப்ராயம் என்ன?' என்று ஸ்ரீதேவி கேட்க, 'காதல் பற்றி யோசிக்க நேரமில்லை...' என்றார், பிரகாஷ்.
'என்னதான் பண்றீங்க ஆபீஸ்ல...' என, ஸ்ரீதேவி கேட்க, அனைவரும் சிரித்தனர்.
'உங்க காதல் அனுபவம்...' என, கேட்டார், பிரகாஷ்.
'சினிமா படப்பிடிப்பில் தினமும், 'லவ்' பண்ணிக்கிட்டு, பார்க், மரம், பீச் எல்லாம் விடாம சுத்திகிட்டு இருக்கிறேன்...' என்ற ஸ்ரீதேவி, 'அதிர்ஷ்டத்தில் உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா?' என்று கேட்டார்.
'அப்பப்போ நான், லாட்டரி டிக்கெட் வாங்குவேன். நிச்சயம் பரிசு கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு. அதுவும் இன்னைக்கு, செல்வத்தின் அதிபதியான ஸ்ரீதேவியை சந்தித்து இருக்கேன். நிச்சயம் பரிசு கிடைத்தே ஆகவேண்டும்...' என்றார், பிரகாஷ்.
'விஷ் யு ஆல் தி பெஸ்ட்...' என்று வாழ்த்தினார், ஸ்ரீதேவி.
இந்த பேட்டி கட்டுரை, நவ., 30, 1978, 'குமுதம்' இதழில் வெளியானது.
மூன்று விஷயங்கள்!
'குங்குமம், குங்குமச்சிமிழ், முத்தாரம், வண்ணத்திரை' ஆகிய நான்கு இதழ்களின் பொறுப்பாசிரியராக பணிபுரிந்தவர், பாவை சந்திரன்.
ஒருமுறை, பாவை சந்திரன் எனக்கு போன் செய்து, 'எம்.டி., உங்களுடன் பேச விரும்புகிறார்...' என்றார்.
'குங்குமம்' ஆபீசில் எம்.டி., என்றாலும், எம்.பி., என்றாலும், முரசொலி மாறனைத்தான் குறிக்கும். அவர் கேட்டுக் கொண்டபடியே சென்றேன்.
'என்னய்யா எங்க பத்திரிகையில எழுத மாட்டீங்களா?' என்று, தடாலடியாக கேட்டார், மாறன்.
'சொல்லுங்க சார். எழுத தயாரா இருக்கிறேன்...' என்றேன்.
ரஜினி நடித்த, தளபதி படம் வெளியாக இருந்த நேரம்.
'தளபதி படத்தின் நிறைய, 'ஸ்டில்'கள் போட்டு, அந்த படத்தை பற்றி நாலைந்து கட்டுரைகள், குறிப்பாக ரஜினியிடம் பிரத்யோக பேட்டி வேண்டும்...' என்றார்.
'சரிங்க சார்...' என்றேன்.
பிரம்ம பிரயத்தனம் செய்தபின், 'குங்குமம்' இதழுக்கு, ரஜினியும் பிரத்யேக பேட்டி தர ஒப்புக்கொண்டார். அதைத்தவிர, தயாரிப்பாளர் ஜி.வெங்கடேஸ்வரன், கேமராமேன் சந்தோஷ் சிவன் ஆகியோரிடமும் பேட்டி எடுத்தேன். தொடர்ந்து நான்கு வாரங்கள், 'குங்குமம்' இதழில், நான் எழுதிய தளபதி பற்றிய கட்டுரைகள் வெளியானது.
ராஜேஷ்குமாரின் தீர்க்க தரிசனம்!
கடந்த, 2001ல், 'தினமலர் - வாரமலர்' இதழில், 20 வாரங்களுக்கு, 'தெரியாத 10' என்ற தலைப்பில், ஒரு கட்டுரை தொடர் எழுதினேன்.
சுகி சிவம், ராஜேஷ்குமார், சுபா, திலகவதி, நல்லி குப்புசாமி, ஏ. நடராஜன், அசோகன், வலம்புரி ஜான் உட்பட, பலரை சந்தித்தேன். அதில் ஒரு கேள்வி, 'உங்களுக்கு மிகவும் பிடித்த நவீன சாதனம் எது?'
இந்தக் கேள்விக்கு எழுத்தாளர் ராஜேஷ்குமார் கூறிய பதில்: மொபைல் போன்!
'இன்னும், 10 ஆண்டுகளில் இப்போது பால் பாயின்ட் பேனா வைத்திருப்பது போல, ஒவ்வொருவரும் மொபைல் போனை பாக்கெட்டில் வைத்திருப்பர்...' என்றார்.
அவர் சொன்னது போலவே, 2010ம் ஆண்டுக்குள், கையில் மொபைல்போன் வைத்துக் கொள்ளாத ஆட்கள் இல்லை என்ற நிலைமை உருவாகி விட்டது.
ராஜேஷ்குமாரின் தீர்க்கதரிசனத்தை நினைத்து வியக்கிறேன்.
வங்கி மோசடி பற்றி எழுத போய், எஸ்.ஏ.பி.,யிடம் வாங்கி கட்டிக்கொண்டது...
— தொடரும்
'தினமலர் - வாரமலர்' இதழுக்காக பிரபல பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணனை பேட்டி எடுக்க சென்றேன். அப்போது, கோமகள் அனுபமா என்ற புகைப்படக்கார பெண், என்னுடன் வந்தார். பேட்டி முடிந்து கிளம்பும்போது, உன்னி கிருஷ்ணனிடம், 'எனக்காக ஒரு பாட்டு பாட முடியுமா?' என்று கேட்டார், அனுபமா.
காதலன் படத்தில் வரும், 'என்னவளே...' என்ற பாட்டுக்கு, பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஆனால், ஒரே ஒரு ரசிகைக்காக இந்தப் பாட்டை முழு உற்சாகத்தோடு அனுபவித்து பாடினார், உன்னி கிருஷ்ணன். அனுபமாவிற்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.
எஸ். ரஜத்