பா - கே
'மணி... இவர் (பெயர்) என் நண்பர். கால்நடை மருத்துவர், விலங்கு ஆர்வலரும் கூட. ஆப்ரிக்க காடுகளில் பல மாதங்கள் தங்கி, விலங்குகளின் இயல்பை துல்லியமாக அறிந்து, பல நுால்கள் எழுதியுள்ளார். அவரிடம் பேசிட்டு இரு... இதோ இப்போது வருகிறேன்...' என்று, கூறி சென்றார், லென்ஸ் மாமா.
நாய், பூனை என்றாலே எனக்கு பயம். இவரிடம் காட்டு விலங்குகளை பற்றி என்ன கேட்பது என்று தயங்கிக் கொண்டிருந்தேன்.
நல்லவேளை... கால்நடை மருத்துவரான அவரே, ஆப்ரிக்க காடுகளில் அலைந்து திரிந்ததை பற்றியும், விலங்குகளின் இயல்பு பற்றியும் கூற ஆரம்பித்தார்.
அவர் கூறியது:
காட்டில் ஓரிடத்தில், வரிக்குதிரைகள் மேய்ந்து கொண்டிருந்தன.
இந்த சமயம் பார்த்து பசியோடு அந்த பக்கமாக வந்த ஒரு சிங்கம், வரிக்குதிரைகளை பார்த்ததும், விரட்ட ஆரம்பித்தது.
கூட்டம் சிதறி ஓடியது. அந்த சிங்கம் ஒரே ஒரு வரிக் குதிரையை மட்டும் பிடித்து கொண்டது. அவ்வளவு தான்.
அதன்பிறகு மற்ற வரிக் குதிரைகள் எல்லாம் கொஞ்சம் கூட பயமில்லாமல், வழக்கம்போல் மேய ஆரம்பித்து விட்டன. பயந்து இடத்தையே காலி பண்ணவில்லை.
மனிதனுக்கு ஆறு அறிவு என்கிறோம். விலங்குகளுக்கு ஐந்து அறிவு என்கிறோம். இருந்தாலும், மிருகங்களிடமிருந்து, மனிதன் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் நிறைய உண்டு.
விலங்குகளுக்கு பயம் என்பது மிகவும் குறைவு; மனிதனுக்கு பயம் அதிகம்.
மனிதன் எதற்கெடுத்தாலும் பயப்படுகிறான்; நடந்ததை நினைத்து, மற்றவர்களை பார்த்து, மரணத்தை நினைத்து பயப்படுகிறான்.
ஆனால், விலங்குகள் அப்படி இல்லை. தங்கள் உயிருக்கு ஆபத்து வருமோ என்ற நிலையில் தான் பயப்படுகின்றன. ஆபத்து சூழ்நிலை விலகியவுடன், அவற்றின் பயமும் விலகி விடுகிறது. அதன் பிறகு கவலைப்படாமல், எப்போதும் போல வாழ ஆரம்பித்து விடுகின்றன.
இரண்டாவது பாடம்: தோல்வியை கண்டு பயப்படுவதில்லை, விலங்குகள். மனிதன் அப்படி இல்லை. தவற விட்ட பேருந்துக்காக, தலையில் கையை வைத்து வருந்துகிறவர்களும் உண்டு.
தேர்வில் தோல்வியா, கவலை. தேர்தலில் தோல்வியா, கவலை. ஏதாவது ஒரு வாய்ப்பு கை நழுவிப் போய் விடுகிறதா, உடனே கவலை.
எலியை துரத்துகிறது, பூனை. அந்த எலி சாமர்த்தியமாக வளைக்குள் புகுந்து தப்பித்து விடுகிறது. அதற்காக, அந்த பூனை, 'ஐயோ... ஏமாந்து போனோமே...' என்று அழாது. போகிறவர்கள், வருகிறவர் களிடம் எல்லாம் அதைச் சொல்லி புலம்பாது. மறுபடியும் வேட்டையாடி, தனக்கு தேவையான எலியை பிடித்துக் கொள்ளும்.
மூன்றாவது பாடம்: தங்களின் குழந்தைகளை முறையாக வளர்க்கின்றன, விலங்குகள். இதுவும் ஒரு வியப்பான செய்தி தான்.
விலங்குகள், அவற்றின் குட்டிகளுக்கு ஆரம்பத்தில், உணவு கொண்டு வந்து கொடுக்கின்றன. குட்டி கொஞ்சம் வளர்ந்த பிறகு, எப்படி வேட்டையாடுவது, எப்படி நீந்துவது, எப்படி ஓடுவது என்பதையெல்லாம் கற்றுக் கொடுத்து விடுகின்றன.
அதன் பிறகு, தன் குட்டிகள் தாமாகவே பிழைத்துக் கொள்ளட்டும் என்று முடிவு செய்து, அவற்றை தனியே விட்டு விடுகின்றன. குட்டிகளும் திரும்பிக்கூட பார்க்காமல், தனித்து போராடி, வாழ்ந்து காட்டுகின்றன.
மனிதன் அப்படியில்லை.
மகனையும் விட மாட்டான்;
பேரனையும் விட மாட்டான்.
'அப்படி செய், இப்படி செய்...' என்று ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பான்.
'உனக்கு அனுபவம் பத்தாது. பெரியவங்க சொல்றதைக் கேள்...' என்பான்.
இப்படியாக அடுத்த தலைமுறையின் சுயமான வளர்ச்சிக்கும், முயற்சிக்கும் முட்டுக்கட்டை போடுவது, மனிதனின் இயல்பு.
நான்காவது பாடம்; எதிர்காலத்தை நினைத்து அஞ்சுவதில்லை, விலங்குகள்.
நாளைக்கு நல்லபடியாக விடிய வேண்டுமே என்ற கவலை நமக்கு தான்.
எதிர்காலம், அடுத்த தலைமுறை, இப்படி கற்பனை பண்ணி பயந்து, அதற்காக சேர்த்து வைக்க வேண்டுமே என்று, இன்றைக்கு படாத பாடுபடுகிறவன், மனிதன்.
பசி எடுத்த பிறகு தான் இரை தேடவே ஆரம்பிக்கிறது, சிங்கம். அவ்வளவு தன்னம்பிக்கை.
மழைக் காலம் வந்து விட்டால் தேவைப்படுமே என்பதற்காக மட்டும் கொஞ்சம் சேர்த்து வைப்பதுண்டு, பறவைகள். எப்பவோ வரப்போகிற தேவையை எண்ணி, இப்பவே நடுங்குகிற பழக்கம் விலங்குகளிடம் இல்லை.
ஐந்தாவது பாடம்: விலங்குகள் அவையும் வாழும் - அடுத்ததையும் வாழ விடும்.
எலியும் - பூனையும், சிங்கமும் - மானும் எதிரிகள் தான்.
இருந்தாலும், பசி அடங்கியதும், எந்த விலங்கையும் அவை கொல்வதில்லை.
காடுகளில் எல்லா விலங்குகளும் வாழ முடிவதற்கு இந்த சகிப்புத் தன்மைதான் காரணம்.
ஆக, இவையெல்லாம் நாம் விலங்குகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்.
- இவ்வாறு கூறி முடித்தார்.
'இவ்வளவு விஷயம் இருக்கிறதா?' என்று ஆச்சரியமடைந்தேன்.
ப
நம் ஊரில் சில பேர், ஓட்டு கேட்கிற விதமே தனி. ரொம்ப சாமர்த்தியமாக ஓட்டு கேட்பார், ஒருத்தர். எப்படி தெரியுமா?
ஒரு வீட்டுக்கு போவார். அந்த சமயத்தில் அந்த வீட்டுக்காரர் என்ன வேலை செய்து கொண்டிருக்கிறாரோ, அதே வேலையை இவரும் கொஞ்ச நேரம் அவருக்கு உதவுவது மாதிரி செய்வார். அப்புறம் மெதுவாக பேச்சு கொடுப்பார். ஓட்டு கேட்பார்.
இது அவருடைய பாணி.
ஒருமுறை இவர் போனபோது, அங்கே ஒருவர் வீட்டுக்கு பின்புற மாட்டுக் கொட்டகையிலே பால் கறந்து கொண்டிருந்தார்.
இவரும் ஓடிப்போய் ஒரு சொம்பை எடுத்துக் கொண்டு, அதே மாட்டுக்கு இன்னொரு பக்கம், அதாவது, ஏற்கனவே பால் கறந்து கொண்டிருக்கிறாரே அவருக்கு எதிர் பக்கம் உட்கார்ந்து பால் கறக்க ஆரம்பித்தார்.
கொஞ்ச நேரம் ஆயிற்று. இவர், மெதுவாக அவரிடம் பேச்சு கொடுத்தார்.
'நான் எலக் ஷன்லே நிற்கிறேன். நீங்க ஓட்டு போடணும்...'
'அது முடியாதுங்களே...'
'ஏன் அப்படி சொல்றீங்க?'
'நீங்க நினைக்கிற மாதிரி நான், இந்த வீட்டுக்காரன் இல்லீங்க...'
'அப்புறம்?'
'நானும் உங்களை மாதிரி ஓட்டு கேட்க வந்தவன் தான்...' என்றார்.
எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.