எஸ். ராமதாஸ், புதுவை: 'இந்திய திருநாட்டையே ஆளும் திறமை கொண்டவர் அன்புமணி ராமதாஸ்...' எனக் கூறியுள்ளாரே, பா.ம.க., தலைவர், ஜி.கே.மணி...
'கட்சி ஆரம்பித்து, 32 ஆண்டுகள் ஆகியும் ஆட்சியை தமிழகத்தில் பிடிக்க முடியவில்லையே...' எனப் புலம்பியுள்ளார், அன்புமணி... இவரிடம் எங்கிருக்கிறது இந்திய திருநாட்டை ஆளும் திறமை?
எம். நிர்மலா ராமதாஸ், விழுப்புரம்: 'தேசிய கல்விக் கொள்கை மூலம், மருத்துவம், பொறியியல் படிப்புகளை தமிழ் மொழியில் படிக்க முடியும்...' என்று, பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறாரே... இது, சாத்தியமா?
மருத்துவ கல்வி சாத்தியமே அல்ல! மருத்துவ புத்தகங்களை தமிழில் மொழி பெயர்க்க வேண்டும்! தமிழறிஞர்கள் அத்தனை பேருக்கும் மருத்துவம் தெரியுமா? ஆங்கிலத்தில் இருந்து எப்படி மொழி மாற்றம் செய்வர்? மோடியின் சமாதான பேச்சு இது!
* தே. மாதவராஜ், கோவை: பஞ்சாப் அமைச்சர் கைது போல, பிற மாநிலங்களில், ஊழல் செய்யும் அமைச்சர்களை ஏன், கைது செய்யக் கூடாது?
அவசியம் கைது செய்ய வேண்டும்... அதேபோல் முதல்வர்களையும் விட்டு விடக்கூடாது!
ஆ. நவநீத கிருஷ்ணன், தென்காசி: என் மனசாட்சிபடி நடந்து கொள்வது எப்படி?
நீங்கள் எதைப் பற்றி தீவிரமாக நினைத்துக் கொள்கிறீர்களோ, கருதுகிறீர்களோ, அப்படியே மாறுவீர்கள்!
எம். லிங்கேசன், புதுவை: சிலரது கண் பார்வை புண்ணாக இருக்கிறதே... அப்படி இல்லாதவர் கண் பற்றி...
எவர், எவருக்கு கருணை உள்ளம் உள்ளதோ அவரது கண்ணே கண்... அது இல்லாதோர் கண் தான் புண் எனக் கொள்ள வேண்டும்!
சி. கார்த்திகேயன், சாத்துார்: சசிகலாவின் ஆன்மிக சுற்றுப் பயணம் அவருக்கு பலன் தருமா?
தரலாம்... அவர், 'சேர்த்து' வைத்துள்ள பணத்தை பாதுகாக்க... ஆனால், அ.தி.மு.க.,வில் அவரால் ஒன்றும் செய்து விட முடியாது!
அ. செந்தில்குமார், சூலுார்: நீங்கள் விரும்பி சாப்பிடும் வெளிநாட்டு உணவு எது?
'தாய் காம்போ' என்ற தாய்லாந்து நாட்டு உணவு தான்! இதில், சைவத்தை தான், நான் சாப்பிடுவேன்... லென்ஸ் பற்றி உங்களுக்கு தெரியுமே... இங்கிலாந்து பிரதமர் வீட்டு முகவரியுடன் சென்னையில் ஒரு, 'ரெஸ்டாரன்ட்' உண்டு... அதில் சாப்பிடுவோம்!
* சி.கொ.தி. முருகேசன், குன்னத்துார், திருப்பூர்: ஆம் ஆத்மி கட்சி தமிழகத்தில் வளரும் வாய்ப்பு உண்டா?
தமிழகத்தில், தமிழ் பேசும் பல கட்சிகளுக்கே வாய்ப்பு கிடைக்கவில்லை... இதில் ஹிந்தி பேசும் கட்சிக்கு இங்கு வாய்ப்பேது!