முன்கதைச் சுருக்கம்: தருணுக்கு போன் செய்த நர்ஸ், அவனை பார்க்க புவனேஷ் ஆவலாக இருப்பதாக தெரிவித்தாள். கமிஷனரை பார்க்க வந்த ஜி.ஹெச்., சீப் டாக்டர் சுகன்யா, இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார் -
டாக்டர் சுகன்யா சொன்னதைக் கேட்டு, வெகுவாய் முகம் மாறிப் போனவராய் நிமிர்ந்தார், ஏ.சி.பி., செழியன்.
''மேடம், நீங்க என்ன சொல்றீங்க, இன்ஸ்பெக்டர் முத்துக்குமரனின் மரணம் ஒரு கொலையா?''
''ஆமாம்.''
''அவரோட உடம்பை, 'போஸ்ட்மார்ட்டம்' பண்ணின, டாக்டரின் அறிக்கையில், இது கொலையாய் இருக்கலாம்ன்னு குறிப்பிடலையே?''
''நான் தான் ரிப்போர்ட்ல அப்படி குறிப்பிட வேண்டாம்ன்னு சொல்லிட்டேன்.''
''ஏன்?''
''விபத்துன்னு எல்லாரும் நம்பிவிட்டதாய் கொலையாளி நினைக்கும் போது, அவன் தைரியமாக வெளியே வந்து, அலட்சியமாக இருக்க வாய்ப்பு அதிகம். அந்த அலட்சியத்தை சரியான முறையில் போலீஸ் பயன்படுத்தி, மறைமுக விசாரணை மூலம் கொலையாளியை நெருங்க முடியும்.''
''நீங்க சொல்வது கரெக்ட், டாக்டர். இன்ஸ்பெக்டரோட மரணம், விபத்தால் ஏற்பட்டதில்லை என்ற முடிவுக்கு வர, உங்களுக்கு எந்த ஒரு தடயம் காரணமாய் இருந்ததுன்னு சொல்ல முடியுமா?''
''நிச்சயமாய் சொல்ல முடியும்,'' என்று, நாற்காலியின் நுனிக்கு நகர்ந்தபடி குரலைச் சற்றே தாழ்த்தினாள், சுகன்யா.
''எதிர்பாராவிதமாய் ஒரு விபத்து ஏற்படும்போது, மனிதனின் உடலில் ஏற்படுகிற காயத்துக்கும், வேறு ஒரு நபரால் அவன் தாக்கப்பட்டு, அதனால் ஏற்படுகிற காயத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். அப்படிப்பட்ட வித்தியாசத்தை திறமைசாலியான டாக்டர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.
''விபத்தில் இறந்து போன ஒரு நபரை, 'போஸ்ட்மார்ட்டம்' செய்யும்போது, காயங்களை மேலோட்டமாய் பார்த்தால், எந்த ஒரு வித்தியாசமும் தெரியாது. ஆனால், அந்த காயங்களை உன்னிப்பாய் கவனித்தால் மட்டுமே விபத்தாலா அல்லது வேறு வகையால் ஏற்பட்டதா என்று தெரியும்.
''ஒரு மனிதனுக்கு ஏற்படுகிற காயங்களை மருத்துவம் அஞ்சு வகையா பிரிச்சிருக்கு. 'அப்ரேஷியன், அவுல்சியான், இன்னிசியான், லேசிரேஷன்' மற்றும் 'பங்க்சர்' என்று, நாங்கள் அதை சொல்வோம். இன்ஸ்பெக்டர் பைக்ல போகும்போது, 'ஸ்கிட்' ஆகி கீழே விழுந்து அவர் இறந்திருந்தால், 'அப்ரேஷியன்'னு சொல்லப்படுகிற ரத்தச் சிராய்ப்புகள் கைகளிலும், கால்களிலும் ஏற்பட்டிருக்கும்.
''ஆனால், அவரோட உடம்பில் சின்னதாய் ரத்தச் சிராய்ப்பு கூட இல்லை. அதேசமயம், ஒரே ஒரு ரத்தக் காயம் மட்டும் அவரோட பின் மண்டையில் ரொம்பவும் ஆழத்தோடு இருந்ததைப் பார்க்க முடிந்தது. ஏதோ ஒரு கனமான ஆயுதத்தால இன்ஸ்பெக்டரை தாக்கி இருக்கலாம். அப்புறம், இன்னொரு முக்கியமான விஷயத்தையும் இங்கே சொல்ல வேண்டியிருக்கு.''
''என்ன?''
''ராத்திரி, 8:00 - 9:00 மணிக்குள்ளே இன்ஸ்பெக்டர் இறந்திருக்கார். அதாவது, கொலை செய்யப்பட்டிருக்கார். ரத்த உறைவை வெச்சுப் பார்க்கும்போது, அந்த முடிவுக்குத்தான் வர வேண்டிருக்கு,'' என்றபடி, தன் கையில் வைத்திருந்த பிரவுன் நிற கவரை நீட்டினார், டாக்டர் சுகன்யா.
''சார்... இதுதான் இன்ஸ்பெக்டரோட உண்மையான, 'போஸ்ட்மார்ட்டம்' அறிக்கை. இதைக் கொடுத்துட்டு, தகவலையும் சொல்லிட்டுப் போகத்தான் நான் வந்தேன்.'' கவரை வாங்கிக் கொண்டார், கமிஷனர் பொய்யாமொழி.
''தேங்க்யூ டாக்டர்.''
''இது என்னுடைய கடமை. எந்த காரணத்தை முன்னிட்டும் உண்மையான குற்றவாளி, சட்டத்தோட பிடியிலிருந்து தப்பிச்சுடக் கூடாது என்ற எண்ணத்துல தான், உண்மையான, 'போஸ்ட்மார்ட்டம்' அறிக்கையோடு உங்களைப் பார்க்க வந்தேன்.
''இப்போதைக்கு இந்த விஷயம், 'மீடியா'க்களுக்கு போகாம, விசாரணையை இலைமறைவு காய் மறைவாய் நடத்தினால், குற்றவாளிகளைக் கண்டிப்பா மடக்கிடலாம். நான் வர்றேன் சார்,'' என்று அங்கிருந்து வெளியேறினார், டாக்டர் சுகன்யா.
'குட் ஹோப் ஹாஸ்பிடல் பார்க்கிங் ஏரியா'வில், காரை நிறுத்திவிட்டு, புல்வெளியை ஒட்டிய பாதையில் நடந்தபடி, மணிக்கட்டிலிருந்த வாட்ச்சைப் பார்த்தான், தருண்.
சரியாய், 11:00 மணி.
முற்பகல் சூரியன் கோபப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தாலும், கோவைக்கே உரித்தான குளிர் காற்று வெயிலின் கடுமையைக் குறைத்து வைத்திருந்தது.
ஹாஸ்பிடலின் அகலமான வாசல் க்ரானைட் படிகளில் தருண் ஏறிக் கொண்டிருந்தபோது, 'குட் ஆப்டர் நுான்...' என, பின்னால் குரல் கேட்டது.
திரும்பிப் பார்க்க, படியேறி வந்து கொண்டிருந்தாள், தீப்தி. வயலெட் நிற சுடிதார், கருப்பு துப்பட்டாவின் கூட்டணியில், அவளுடைய பொன்னிறம் ஒரு படி துாக்கலாய் தெரிந்தது.
ஒரு ரெடிமேட் புன்னகையை உதட்டுக்குக் கொடுத்தபடி, ''உன்னோட அம்மாவுக்கு இப்போ எப்படியிருக்கு?'' கேட்டான், தருண்.
''மறுபடியும் ஒரு எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுக்கச் சொல்லிட்டாங்க. இது நாலாவது தடவை. இந்த ஹாஸ்பிடலுக்கு ஏன் வந்தோம்ன்னு இருக்கு. ஹாஸ்பிடலுக்கு,
'குட் ஹோப்'ன்னு பேரை வெச்சுக்கிட்டு, ஏன்தான் இப்படி கொள்ளை அடிக்கறாங்களோ தெரியலை. சரி அதைவிடு, உன்னோட நண்பர் புவனேஷ் இப்போ எப்படி இருக்கார்?''
''நினைவு வந்து, இப்ப நார்மல் ஆயிட்டான். அவனைப் பார்க்கத்தான் போயிட்டிருக்கேன்.''
''அவர் கல்யாணம் பண்ணிக்க இருந்த முகிலா கிடைச்சுட்டாளா?''
தருண் முகம் மாறி மவுனிக்க, தன் ஆட்காட்டி விரலால் அவனுடைய தோள்பட்டையை லேசாய்த் தட்டி, ''என்ன பதிலையே காணோம்?'' என்றாள், தீப்தி.
''அவளைப் பத்தி இதுவரைக்கும் உபயோகமான ஒரு தகவல் கூட கிடைக்கலை.''
''போலீஸ் என்ன சொல்றாங்க?''
''அவங்களும் ஆனவரைக்கும், முயற்சி பண்ணிட்டுதான் இருக்காங்க.''
''என்ன தருண், முகிலா காணாம போன விஷயத்துல இவ்வளவு அலட்சியமா இருக்கே. உனக்குத்தான், டி.ஜி.பி.,யை நல்லாத் தெரியுமே... அவரோட கவனத்துக்கு இந்த விஷயத்தை கொண்டு போக வேண்டியது தானே!''
''அவர், 'ரிடையர்' ஆயிட்டார்.''
''ரிடையர் ஆனா என்ன... அவரோட வார்த்தைக்கு என்னிக்குமே ஒரு மதிப்பு இருக்குமே?''
''இனிமேத்தான் பேசிப் பார்க்கணும்.''
''என்னது பேசிப் பார்க்கணுமா?'' தீப்தியின் இரண்டு புருவங்களும் வியப்பில், 'ஸ்லோமோஷனில்' உயர்ந்தன.
''தருண், நீ இப்படி பேசிட்டிருக்கிறது எனக்கு ரொம்பவும் ஆச்சர்யமாயிருக்கு. உன்னோட உயிர் நண்பன், புவனேஷ். தான் காதலிச்ச பெண்ணை கல்யாணம் பண்ணிக்கப் போற நேரத்துல, அவ காணாம போன சம்பவம் அவருக்கு எவ்வளவு பெரிய அதிர்ச்சியாய் இருக்கும். நினைச்சுப் பார்த்தியா?''
''எனக்கும் அதிர்ச்சி தான்... இந்த விஷயத்துல நான் மட்டும் என்ன பண்ண முடியும். முகிலா இருக்கிற இடத்தை கண்டுபிடிக்க, 'சைபர் க்ரைம்' மூலமாய் எவ்வளவோ முயற்சி பண்ணியும் முடியலை.''
''முகிலாவுக்கு என்ன நடந்திருக்கும்ன்னு நினைக்கிறே?''
''எனக்கு ஜோசியம் தெரியாது. கத்துகிட்டு வந்து சொல்றேன்.''
''நீ எதுக்காக இப்ப இவ்வளவு, 'டென்ஷன்' ஆகிறே?''
''இதோ பார் தீப்தி, இது, 'டென்ஷன்' கிடையாது; வருத்தம். கடந்த ரெண்டு நாளா நான் படற மன வேதனை எனக்குத் தான் தெரியும்.''
''இட்ஸ் ஓ.கே., நீ, 'எமோஷனல்' ஆக வேண்டாம். முதல்ல புவனேஷை போய் பாரு... நான் சாயந்தரமா உனக்கு போன் பண்றேன். அம்மாவுக்கு இந்நேரம், எம்.ஆர்.ஐ., எடுத்து முடிச்சிருப்பாங்க. நான் போய்ப் பார்க்கணும்,'' என்று நகர முயன்ற தீப்தி, தயக்கத்தோடு நின்று, ''அப்புறம் ஒரு விஷயம்,'' என்றாள்.
''என்ன?''
''நேத்திக்கு ராத்திரி அம்மாகிட்ட பேசிட்டிருக்கும்போது, நம் காதல் விஷயத்தை, 'டிக்ளேர்' பண்ணிட்டேன். இனி, அப்பாகிட்ட சமயம் பார்த்து அம்மா சொல்லிடுவா.''
''கல்யாணத்துக்கு ஏன் இவ்வளவு அவசரப்படறே?''
''இது, அவசரமில்லை; அவசியம். விஷயத்தை அவங்க காதுல போட்டு வெச்சாத்தான் எனக்கு வெளியே மாப்பிள்ளை பார்க்க மாட்டாங்க.''
தருண், அவளை கோபமாய் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அவனை புன்னகையால் நனைத்தபடி நகர்ந்து போனாள், தீப்தி.
சில விநாடிகள் வரை அங்கேயே நின்று கொண்டிருந்தான், தருண். பிறகு, பெருமூச்சொன்றை வெளியேற்றியபடி, ஐ.சி.யூ., நோக்கி மெல்ல நடந்தான். கண்ணாடிக் கதவைத் திறந்து உள்ளே போக, நர்ஸ் ஞானம் எதிர்ப்பட்டாள்.
''சிஸ்டர்...'' என்று சொல்லி பேச முயன்றவனை கையமர்த்தினாள், நர்ஸ். அவளுடைய கண்களில் ஒரு கலவரம் தெரிந்தது.
''வாங்க, வெளியே போய் பேசலாம்.''
''என்ன விஷயம் சிஸ்டர், ஏதாவது பிரச்னையா?''
''வாங்க சொல்றேன்.''
இருவரும் வெளியே வந்தனர். தருணை சுவரோரமாய் கொண்டு போய் நிறுத்தி, குரலைத் தாழ்த்தினாள், நர்ஸ் ஞானம்.
''இப்ப நீங்க புவனேஷை பார்க்கத்தானே வந்திருக்கீங்க?''
''ஆமா சிஸ்டர்... நீங்க தானே எனக்கு போன் பண்ணி, புவனேஷ் என்கிட்ட ஏதோ பேச விரும்பறதாய் சொன்னீங்க. அதனால தான் புறப்பட்டு வந்தேன்.''
''புவனேஷை இப்ப நீங்க பார்க்க முடியாது.''
''ஏன்?''
''அவர் இப்போ உயிருக்கு ஆபத்தான நிலையில், 'க்ரிட்டிகல் இன்டென்சிவ் கேர் யூனிட்'ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.'' விழிகள் விரிய அதிர்ந்தான், தருண்.
''என்ன சொல்றீங்க சிஸ்டர். புவனேஷ் நார்மலுக்கு வந்துவிட்டதாகவும், சாதாரண வார்டுக்கு மதியத்துக்கு மேல மாத்திடுவோம்ன்னு நீங்க போன்ல சொன்னீங்களே?''
''நான் அப்படி சொல்லும் போது நல்லாத்தான் இருந்தார். அதுக்கப்புறம் ஒரு அரைமணி நேரம் கழிச்சு அவருக்கு பொருத்தியிருந்த, 'ஐ.வி., ட்ரிப் செட்'டை மாத்தறதுக்காக போனபோது, சுய நினைவு இல்லாம இருந்தார். தோளைத் தொட்டு கூப்பிட்டுப் பார்த்தேன். கொஞ்சம் கூட அசைவில்லை.
''மூக்கிலிருந்து லேசாய் ரத்தம் வந்துட்டிருந்தது. நான் பதறிப் போய், உடனே டாக்டருக்கு தகவல் கொடுத்தேன். டாக்டர் வந்து பார்த்துட்டு, புவனேஷை, 'க்ரிட்டிகல் கேர் யூனிட்'டுக்கு மாத்தச் சொல்லிட்டார். சிகிச்சை நடந்துட்டு இருக்கு. நாடித்துடிப்பு ரொம்ப குறைவா இருக்கு; உயிர் பிழைக்க வாய்ப்பு ரொம்பவும் கம்மி,'' என்றாள், நர்ஸ் ஞானம்.
— தொடரும்
ராஜேஷ்குமார்