உஷார் நடவடிக்கை!
நெல்சன் இயக்கத்தில், விஜய் நடித்த, பீஸ்ட் படம் தோல்வி அடைந்ததால், அவர் இயக்கத்தில் நடிக்க யோசித்தார், ரஜினி. இப்போது, நடிக்க முடிவெடுத்தாலும், அவரது திரைக்கதை மீது, ரஜினிக்கு நம்பிக்கை இல்லை. அதனால், நெல்சன் தனக்காக எழுதியுள்ள கதையை, திரை வடிவமைக்க, கே.எஸ்.ரவிக்குமாரிடம் ஒப்படைத்திருக்கிறார்.
மேலும், படையப்பா மற்றும் முத்து படங்கள் போன்று, இந்தப் படமும் ஒரு மெகா ஹிட் கமர்ஷியல் படமாக இருக்க வேண்டும் என்று, கேட்டுக் கொண்டுள்ளார். ரஜினியின் இந்த புதிய படத்தை, இன்னொரு படையப்பாவாக கொடுக்க, வரிந்து கட்டி களம் இறங்கியுள்ளார், ரவிக்குமார்.
— சினிமா பொன்னையா
ராஷ்மிகா மந்தனாவின், பலே திட்டம்!
தமிழில், சுல்தான் படத்தில் அறிமுகமான, ராஷ்மிகா மந்தனாவிற்கு அந்தப்படம் வெற்றியை கொடுக்காத போதும், தற்போது, தமிழ், தெலுங்கில், விஜய் நடித்து வரும், 66வது படத்தில் அவருக்கு ஜோடி ஆகிவிட்டார்.
இதனால், மிகுந்த உற்சாகத்தில் இருக்கும், ராஷ்மிகா, இந்த படம் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து இழுத்து விட வேண்டும் என்பதற்காக, தெலுங்கில் புஷ்பா படத்தில், தான் நடித்த, சாமி பாடலை போன்று, இந்தப் படத்திலும், ஒரு அதிரடியான பாடலை தனக்குக் கொடுக்குமாறு, இயக்குனர்களிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்.
அதோடு, 'அந்த பாடலில், புஷ்பா பட பாடல் போன்று, வித்தியாசமான நடனத்தை வெளிப்படுத்தி, ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும், என் நடனத்திற்கு சரண்டர் ஆக்க, பலே திட்டம் போட்டுள்ளேன்...' என்கிறார்.
எலீசா
சாய் பல்லவியின், அடுத்த ரவுசு!
தமிழக நடிகையாக இருந்த போதும், தெலுங்கு தேசத்தில்தான் கொடிகட்டி பறக்கிறார், சாய்பல்லவி. இந்நிலையில், சில ஆண்டு இடைவெளிக்குப் பின், தற்போது தமிழில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
தனுஷ் நடித்த, மாரி 2 படத்தில் இடம்பெற்ற, ரவுடி பேபி பாடல் மிகப்பெரிய, 'ஹிட்' அடித்ததால், இந்த படத்திலும் அது போன்ற குத்து பாடலை தனக்குக் கொடுக்குமாறு இயக்குனரை கேட்டுக் கொண்டுள்ளார். அதோடு, அந்த பாடலில் குச்சிப்புடி, பரதநாட்டியம், பாலே மற்றும் கதகளி என, பல நடன அசைவுகளையும் கலந்துகட்டி அடிப்பதற்கும் தயாராக இருப்பதாக கூறுகிறார்.
எலீசா
கமல் போடும் புதிய, 'அக்ரிமென்ட்!'
அரசியல் கைவிட்டு விட்டதால், தற்சமயம் சினிமாவில் கூடுதல் கவனம் செலுத்துகிறார், கமலஹாசன். ஒரு பக்கம் தனக்கான கதைகளை தேர்வு செய்பவர், இன்னொரு பக்கம், தான் தயாரிக்கும் படங்களுக்காகவும் கதை கேட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது, தன் பேனரில், சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் தயாரித்து வரும், கமலஹாசன், அடுத்தபடியாக, விஜய், அஜித் என,
முன்வரிசையில் இருக்கும், 'ஹீரோ'களை வைத்தும் படங்கள் தயாரிப்பதற்கு, தயாராகி விட்டார். இதனால், கமலின், ராஜ்கமல் பிலிம்சிற்கு படம் இயக்க, ஏராளமான இளவட்ட இயக்குனர்கள் படையெடுக்கத் துவங்கியுள்ளனர்.
— சினிமா பொன்னையா
சினி துளிகள்!
* திருமணத்துக்கு பிறகு, பல நடிகையர் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதை குறைத்து வரும் நிலையில், ஹிந்தி நடிகை, தீபிகா படுகோனே, மற்ற நடிகர்களுடன், 'லிப் - லாக்' காட்சிகளிலும் நடிக்கிறார். இது குறித்து விமர்சனங்கள் எழுந்தபோது, 'நான் அப்படி நடிப்பதை, என் கணவர் ரன்வீர் சிங்கே பெருமையாகத்தான் நினைக்கிறார்...' என்று சொல்லி, தன்னை விமர்சிப்பவர்களின் வாயை அடைத்து விட்டார்.
* இசை படத்திற்கு பிறகு, நடிப்பில் முழுவீச்சில் இறங்கி விட்ட இயக்குனர், எஸ்.ஜே.சூர்யா, 'பல ஆண்டு இடைவெளிக்கு பின், தற்போது, கில்லர் என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கி, நடிக்கப் போகிறேன். இந்த படத்தின் பிரதான வேடத்தில் நடிக்கும் ஒரு காரை ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்ய உள்ளேன்...' என்கிறார்.
* இதுவரை காமெடி வேடங்களில் மட்டுமே நடித்து வந்துள்ள, கோவை சரளா, தற்போது, செம்பி என்ற படத்தில், சீரியசான ரோலில் நடித்து வருகிறார். இப்படத்தை, பிரபுசாலமன் இயக்குகிறார்.
அவ்ளோதான்!