அன்புள்ள அம்மா -
நான், 27 வயது ஆண். தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். பெற்றோர், கிராமத்தில் உள்ளனர். எனக்கு ஒரு அக்காவும், தம்பியும் உள்ளனர். அக்காவுக்கு திருமணமாகி விட்டது. தம்பி, வெளி மாநிலத்தில் படித்துக் கொண்டிருக்கிறான்.
சென்னையில், விடுதி ஒன்றில் தங்கியுள்ளேன். என் அறையில், என்னுடன் இன்னும் இரண்டு பேர் தங்கியுள்ளனர்.
வார நாட்களில், வேலைக்கு செல்வது, ஹோட்டலில் சாப்பிடுவது என்றிருப்போம். வார இறுதி நாட்களில், சினிமா, பீச் அல்லது அருகில் இருக்கும் ஏதாவது ஒரு சுற்றுலா தலத்துக்கு காலையில் சென்று, மாலையில் திரும்பி விடுவோம்.
என் நண்பர்களில் ஒருவனுக்கு, பேய் என்றால் பயம். ஆனாலும், பேய் கதைகள் படிப்பது, பேய் படங்கள் பார்ப்பது என்றால், மிகவும் பிடிக்கும். தன் ஊரில் சொல்லப்படும் பேய் கதைகளை எங்களிடமும் விவரிப்பான்.
வெளிநாட்டு பத்திரிகைகளில் வரும் பேய் பற்றிய தகவல்களை விழுந்து விழுந்து படிப்பான். 'ஏலியன்'கள் பற்றி, 'நெட்'டில் தேடித் தேடி படிப்பான்.
'இதெல்லாம் பார்ப்பதை விடுடா...' என்று சொன்னால், 'தெரியாத ஏதோ ஒன்று நம்மை சுற்றி இருக்கிறதுடா... அது என்ன என்று அறிந்து கொள்ளத்தான்...' என்பான். 'ஆவிகளுடன் பேசுவது எப்படி?' போன்ற புத்தகங்களை வாங்கி படிப்பான்.
இப்போதெல்லாம், இரவில், திடீர் திடீரென அலறி எழுந்து உட்கார்ந்து விடுகிறான். எங்களையும் நிம்மதியாக துாங்க விடுவதில்லை.
அவனது பெற்றோரை வரவழைத்து, ஊருக்கு அனுப்பி வைத்தோம். மந்திரவாதியிடம் அழைத்து போய், பூஜை செய்து, மந்திரித்து கயிறு கட்டியுள்ளனர்.
சில நாட்களிலேயே சரியாகி விட்டதாக கூறி, திரும்பவும் எங்களுடன் வந்து தங்கினான்.
பேய் சம்பந்தப்பட்ட புத்தகங்களை படிப்பது குறைந்து விட்டது. 'டிவி'யில் பேய் படங்கள் போட்டால், வெளியே சென்று விடுகிறான். ஆனாலும், முன்பு போல் சுறுசுறுப்பாக இருப்பதில்லை.
வேலைக்கு போய் வருபவன், திடீரென்று, 'மூடு' சரியில்லை என்று விடுமுறை போட்டு, அறையிலேயே முடங்கிக் கிடப்பான்.
அவனது பெற்றோருக்கும் விபரம் போதாது. மருத்துவரிடம் செல்லலாம் என்று அழைத்தால், வர மறுக்கிறான். அவனை, சரியான நிலைமைக்கு எப்படி கொண்டு வருவது, அம்மா... நல்ல ஆலோசனை தருவீர்கள் என்று நம்புகிறேன்.
- இப்படிக்கு,
உங்கள் மகன்.
அன்பு மகனுக்கு -
ஐந்தில் இரண்டு அமெரிக்கர்கள், பேய் இருப்பதை நம்புகின்றனர். ஐவரில் ஒரு அமெரிக்கர், பேயை நேரில் பார்த்திருப்பதாக சத்தியம் செய்கிறார். அமெரிக்க ஜனத்தொகையில், 65 சதவீத பேர், பிற கிரக மக்கள், பூமிக்கு பறக்கும் தட்டுகளில் வந்து போவதை நம்புகின்றனர். இந்தியர்களுக்கும் ஆவிகள் பயம் அதிகம்.
பெரும்பாலான மனிதர்கள், மரணத்தை கண்டு அஞ்சுகின்றனர். மரணத்துக்கு பின் எதுவும் இல்லை என்பதை, நம்புவதில்லை.
உன் நண்பனுக்கு, 'பைபோலார் சைக்கோசிஸ்' - இருமுனை மனநோய் மற்றும் 'டில்யூஸன் மேனியா' என்ற மனநோயும் இருக்க வாய்ப்பிருக்கிறது.
மாயத்தோற்றங்களுடன் கடுமையான பித்து அல்லது மனச்சோர்வை ஒருவர் அனுபவிக்கும் போது, இருமுனை மனநோய் ஏற்படுகிறது.
'டில்யூஸன் மேனியா' என்பது உண்மையில்லாத, நடக்கவே வாய்ப்பில்லாத விஷயங்களை கண்மூடித்தனமாக நம்புவது. உன் நண்பனை சற்றும் தாமதிக்காமல் மனநல மருத்துவரிடம் அழைத்து செல்.
நோயறிதல் மற்றும் புள்ளியல் கையேட்டின் ஐந்தாம் பதிப்பை வைத்து, உன் நண்பனின் மனநோய் வீரியத்தை கணித்து, உளவியல் சிகிச்சை தொடர்வார், மருத்துவர். பேய்கள் மற்றும் பிற கிரக மனிதர்கள் இருப்பதாக, எந்த ஆதாரங்களை வைத்து, உன் நண்பன் நம்புகிறான் என்பதை, நைச்சியமாக கேள்.
'ஆவிகள் இருந்தால் அவை யாருக்கும் எந்த தீங்கும் செய்யாமல், இன்னொரு பரிமாணத்தில் நடமாடிக் கொண்டிருக்கும். பிற கிரக மனிதர்கள் நம்மை சந்தித்து அதிகார பூர்வமாய் ஒரு, 'ஹாய்' சொல்லட்டும். அதுவரை அவர்களை பற்றிய தேவையற்ற ஆராய்ச்சிகளை தவிர்ப்போம்...' எனக்கூறி, அவனை சாந்தப்படுத்து.
நிம்மதியான துாக்கம், சத்தான உணவு, தொடர் உடற்பயிற்சிகள் மற்றும் ஆக்கப்பூர்வமான பொழுபோக்குகள், உன் நண்பனை தைரியசாலி ஆக்கும். மனநல மருத்துவரும், நண்பர்களான நீங்களும் தொடர்ந்து செயல்பட்டு, உங்கள் நண்பனை முழுமையாக குணப்படுத்தி விடலாம்.
-
- என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்