அழைப்பு மணி ஒலிக்க, துாக்கம் கலைந்து எழுந்து சென்று கதவைத் திறந்தேன்.
சென்னை வெயில் சுட்டெரிக்கத் துவங்கி விட்டது. கதவைத் திறந்ததும், வெளியே, கையில் ஒரு துணிப்பையுடன், வயதானவர் நின்றிருந்தார். வெயிலால் முகம் கன்றிப் போயிருந்தது. நிறமே சற்று கறுப்பு தான்.
'ஏதாவது யாசகத்திற்கு இருக்குமோ?' என்று நினைத்து, ''சாரி...'' என்று கூறி, கதவை அடைக்கும் முன், அவர் அவசரமாக ஆங்கிலத்தில், '' தொந்தரவுக்கு மன்னிக்கவும். நான் ஆறாம் நம்பர் கணேஷின் மாமனார்,'' என்றார்.
எங்கள் பிளாட்டில் ஆறாம் நமபரில் இருந்த கணேஷ், ஓர் உதவாக்கரை. பகலிலேயே தண்ணி அடித்து, தெருவில் அங்கும், இங்கும் சுற்றிக் கொண்டிருப்பான். கிட்டத்தட்ட, 'லுாஸ்' மாதிரி தோற்றம். நடை, உடை, சரியான வேலை கிடையாது. வேலை பார்க்கிறானா என்றும் தெரியாது.
அவன் மனைவி சரஸ்வதி தான், எங்கோ வேலைக்கு போய்க் கொண்டிருந்தாள். சிவப்பாக, ஒல்லியாக இருப்பாள். அவள் தான் மாதா மாதம், 'மெயின்டனன்ஸ்' கொண்டு வந்து கொடுப்பாள்.
அதற்குள் அவசரமாக அவரே, ''நான் உள்ளே வந்து பேசலாமா?'' என்று கேட்டார்.
''வாங்க!'' என்றேன்.
கையிலிருந்த, 'அம்மோனியா பிரின்ட்' அந்த காலத்து, 'பிளாட்' போட்ட பெரிய காகிதத்தை என்னிடம் காட்டினார். அது, 38 வருஷத்திற்கு முன் எங்கள் கட்டடம் கட்டியவர் கொடுத்ததன் நகல்.
''இதில் பின்புறம் கார்ப்பரேஷன், 'சீல்' இருக்குமாம். உங்கள் பிளானில் இருக்கிறதா?'' என்றார்.
''இல்லை. எதற்காக கேட்கிறீர்கள்?'' என்றேன்.
''என் பேரனை, மேல் படிப்புக்காக, யு.எஸ்., அனுப்ப, வங்கியில் கடன் கேட்டிருக்கிறோம். இந்த பிளாட் தான் அடமானம்,'' என்றார்.
எனக்குப் புரிந்தது. ஒரு வாரம் முன்புதான், இதே போல் மதிய துாக்கத்தில் என்னை எழுப்பி, மொட்டை மாடி சாவி கேட்டாள், சரஸ்வதி.
'கீழே வாட்ச்மேன் கிழவன் இருப்பானே... அவனிடம் தான் இருக்கிறது...' என்றேன்.
'அவனைக் காணவில்லை...' என்றாள், சரஸ்வதி.
அதில் ஆச்சரியம் இல்லை. கிழவன் பாதிப்பொழுது எங்கோ தொலைந்து போய் விடுவான். பேர் தான் வாட்ச்மேன்.
'அது சரி, நீங்கள் இங்கு இல்லையே... உங்களுக்கு, மாடி சாவி எதற்கு?' என்றேன்.
இப்போது அவர்கள் இங்கு இல்லை. வேறு இடம் போய், பிளாட்டை வாடகைக்கு விட்டிருந்தனர்.
'உள்ளே வந்து உட்காரலாமா?' என்று கேட்டு, வந்தமர்ந்தாள்.
'எங்க மகனை, யு.எஸ்.,க்கு மேல் படிப்புக்கு அனுப்ப போறோம். அதற்கு பணம் தேவை. இந்த பிளாட்டை வங்கியில் அடமானமாக வைத்து, பணம் வாங்க வேண்டும். வங்கி ஆசாமிகள் பிளாட்டை பார்க்க வந்துள்ளனர். குடித்தனக்காரர்கள் வீட்டில் இல்லை. அதனால், மொட்டை மாடிக்கு சென்று வீட்டின் விஸ்தீரணம் பார்க்க வேண்டும் என்கின்றனர்...' என்றாள்.
வீட்டு பத்திரத்தைத் தரப்போகின்றனர். நிச்சயம் இரண்டு உத்திரவாத மனிதர்களைக் கேட்பர். பிறகு எதற்காக,மொட்டை மாடிக்கு போய், அதுவும் அவர்கள் பிளாட்டின் விஸ்தீரணத்தை பார்ப்பதாவது?
'என்னிடத்தில் நிஜ சாவி இல்லை. இதில், மீட்டர் அறை, பம்ப் அறை சாவிகள் இருக்கின்றன. இதில் எதாவது ஒன்று திறக்கிறதா பாருங்கள்...' என்றேன்.
சாவிக் கொத்தை வாங்கிச் சென்றவள், அரை மணி நேரம் கழித்து, 'என் குடித்தனக்காரர்கள் வந்து விட்டனர். வங்கி ஆட்கள் உள்ளே போய் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்...' என்று, சாவிக் கொத்தைத் திருப்பி கொடுத்துச் சென்றாள்.
இப்போது சரஸ்வதியின் அப்பா. இந்த கிழவர். வேகாத வெயிலில் எதோ முத்திரை போட்ட பிளான் வேண்டுமென்று கேட்கிறார்.
வங்கிகளில் அத்தனை கறாராக இருக்கின்றனரா என்று, வியப்பு ஏற்பட்டது. குறைந்தபட்சம் மாதம் ஒருமுறை, தினசரி பத்திரிகைகளில் வீடு வாங்கவோ, கட்டவோ, வீட்டின் மீதோ கடன் வாங்கி, பணம் கட்டாதவர்கள் பட்டியல், இரண்டு மூன்று பக்கங்களுக்கு வருகிறது.
''எட்டாம் நம்பரில் கேட்கலாமே... அவரும் சொந்தக்காரர் தானே?'' என்றேன்.
''அவர் தன் பத்திரங்களை வங்கி லாக்கரில் வைத்திருப்பதாகக் கூறி விட்டார். அவர் தான் உங்களை பார்க்கச் சொன்னார்,'' என்றார், பெரியவர்,
வெளிநாடு சென்று தங்கி விடும் பிள்ளைகள் திரும்புவதில்லை, பெற்றோரை மதிப்பதில்லை என்று, கதை கதையாக வெளி வந்து, கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கின்றனர். இந்தக் கிழவரும், பெண்மணியும் உக்கிரமான வெயிலில், அருமை பிள்ளை, பேரனுக்காக கடன் வாங்க அலைகின்றனர்.
அந்தப் பிள்ளை கெட்டிக்காரனோ, அசடோ தெரியாது. பேசியதில்லை. சரியாகப் பார்த்ததும் இல்லை. ஒருநாள் அவன் பாட்டியிடம் ஏதோ கேட்ட போது, 'எனக்கு தெரியாது. என் பேரனுக்குத்தான் தெரியும். ஆனால், அவன் துாங்குகிறான். அவனை எழுப்ப முடியாது...' என்று நிர்தாட்சண்யமாய் கதவை மூடினாள். இத்தனைக்கும் அப்போது, காலை, 10:00 மணி.
செல்லப் பிள்ளை; செல்லப் பேரன்! அந்த அருமைப் பேரன், ஆசைப் பிள்ளையின் மேல் படிப்புக்காகத்தான் வீட்டை அடமானம் வைக்கப் போகின்றனர். இவர்களை ஏன் இப்படி அலைய விட வேண்டும்? அந்த பையனே வந்து பேசலாமே!
இது நடந்து ஒரு மாதமாகி இருக்கும்.
என் அலுவலக நண்பர் ஒருவரை, வங்கியில் எதேச்சையாகச் சந்தித்தேன். அவர் ஒரு சரியான சோம்பேறி ஆசாமி. ஆனால், அரசாங்க உத்யோகம் என்பதால், குப்பை கொட்டிக் கொண்டிருந்தார்.
எனக்கு பின்தான் ஓய்வு பெற்றிருக்க வேண்டும். என்னிடம் குசலம் விசாரித்தவர், ''என் பிள்ளை, வீடு வாங்கிண்டு, யு.எஸ்.,சில், 'செட்டில்' ஆயிட்டான்--. இனி இங்க வரமாட்டான். நாங்க இருந்த தி.நகர் வீட்டை விற்று, வேளச்சேரியில் பெரிய பிளாட்டுக்கு போய் விட்டோம். வரட்டுமா,'' என்று சிரித்தபடி சொன்னார்.
''நீங்கள் போகவில்லையா?'' என்று கேட்டேன்.
''ம்... போனோமே. ஆறு மாதம் தங்கி இருந்தோம். சூப்பராகத்தான் இருக்கிறது. ஆனால், இந்த ஊர் பழகியவர்களுக்கு அங்க நிரந்தரமா இருக்க முடியாது,'' என்றார். அதில், எனக்கு வருத்தம் ஒன்றும் தெரியவில்லை.
அடுத்த சில நாட்களுக்கு பின், நான் அடையாறில் வீட்டுக்கு அருகில் இருந்த ஹோட்டலில் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருந்தேன். எனக்கு சற்று தள்ளி அடுத்த மேஜையில் நான்கு இளைஞர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். -
''என்னடா... அமெரிக்கா யூனிவர்சிட்டியில படிக்க போறியாமே... பணம் எப்படிடா ஏற்பாடு பண்ணினே,'' என்று, கேட்டான் ஒருவன்.
வெளிநாடு செல்லும் அந்த இளைஞன் சிரித்தபடியே, ''என்னை விட எங்கம்மாவும், தாத்தாவும், நான் யு.எஸ்., போகணும்கறதிலே ஆர்வமா இருக்காங்க. அவங்களே அலைஞ்சு, திரிஞ்சு எங்க பிளாட்டை அடமானம் வச்சு, வங்கி கடனுக்கு ஏற்பாடு பண்ணிட்டாங்க... அப்புறம் என்ன?''
எனக்கு, சட்டென்று சரஸ்வதியின் மகன் நினைவு வந்தது. அவனா இவன்? தெரியவில்லை. நான் அந்த பையனை சரியாகப் பார்த்தது கிடையாது. அதனால், அவன் தான் என்று சொல்ல முடியவில்லை. மெல்ல அந்தப் பக்கம் பார்த்தேன்.
''உனக்கு உடனே ஸ்கலர்ஷிப் கிடைக்குமாடா?'' என்றான், மற்றவன்.
''தெரியாது. 'அப்ளை' பண்ணி இருக்கேன். பார்க்கலாம். இல்லாட்டா, எதாவது, 'பார்ட் டைம் ஜாப்' தான் தேட வேண்டும்.''
''வாங்கிய கடனை எப்படிடா திருப்பி கொடுப்பே?''
''ம்... உடனே கேட்க மாட்டாங்க. இரண்டு வருஷமோ என்னமோ டைம் இருக்கிறது. அதப்பத்தி இப்ப ஏன்டா கவலைப்படணும்... அப்படியே கேட்டாலும், இவங்க பார்த்துப்பாங்க,'' என்றான் அலட்சியமாக. எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
''எப்படி பார்த்துப்பாங்க?'' எனக் கேட்டான்.
''அதான், பிளாட் அடமானம் இருக்கே? அதை வித்து கொடுக்கட்டும்; எனெக்கென்ன. எனக்கு இந்தியா திரும்ப ஆசை எல்லாம் இல்ல,'' என்றான், அந்த இளைஞன்.
உபயோகமில்லாத தந்தை, உழைத்து குடும்பத்தை நடத்தும் தாய், ஒரு சிறிய பிளாட். இவை மட்டுமே இருந்தும், அந்த பையன் வேலைக்குச் சென்று கொஞ்ச நாட்கள் சம்பாதித்த பின் அலுவலகம் மூலமாகவே வெளிநாடு போகலாம். இன்று, அதற்கு வாய்ப்புகள் அதிகம். ஆனால், அந்த பிள்ளைக்கு அந்த எண்ணம் இல்லை.
எத்தனை காலமானால் என்ன? பெற்றோர் பெற்றோர் தான், பிள்ளைகள் பிள்ளைகள் தான். வெளிநாடு, குறிப்பாக அமெரிக்கா சென்று படிப்பதை, குடியேறுவதை, பிள்ளைகளை விட பெற்றோர் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர் என்பதில் என்ன சந்தேகம்!
தங்கள் தகுதிக்கு அதிகமாகவே, கடமையைச் செய்கின்றனர், பெற்றோர். எதிர்பார்த்தாலும், பார்க்காவிட்டாலும் பலன் கிடைப்பதில்லை.
யார் சொன்னது இந்தியா, தத்துவ ஞானம் சார்ந்த தேசம் இல்லை என்று!
தேவவிரதன்