ஒரு துளி அமுதம்!
ஆசை
ஒரு ஆபத்தான மிருகம்
அதனிடம்
அகப்பட்டவர்கள் கதி
அதோகதி தான்!
ஆசை ஒரு
விசித்திர அமுதம்
உண்டவர்களையும் சாக விடாது...
தானும் எளிதில் சாகாது!
நிறங்கள்
இன்னதென்று
நிர்ணயித்து விடலாம்!
ஆசையை ஒருபோதும்
அளவிட முடியாது!
பார்க்கச் சிறியதாய்
பம்மியபடி இருந்தாலும்
வாய்ப்புக் கொடுத்தால்
வானுயர வளர்ந்து விடும்!
ஆசை
தேவைத்தோல்
போர்த்திய புலி
தேவையின் தேகம்
அது குடியிருக்கும் கூடு!
தித்திப்பால் வளர்கிற
சர்க்கரை வியாதி
மருந்துகளுக்கு அது
மட்டுப்படுவதில்லை
நம்மை
கடனாளியாக்க காத்திருக்கும்
கந்துவட்டிக்காரன்!
ஆசையெனும் மேனகை
ஆட வேண்டியதே இல்லை
முனிவர்கள் தான் இதனிடம்
ஆடிப்போய் விடுகின்றனர்!
இதை
கருவறுக்கும் களிம்பை
உள் மனம் ஒளித்து வைத்திருக்கிறது
போதும் என்பதே
ஆசையை அழிக்கும் மருந்து
அது காலாவதியாகும் முன்
ஆசை மேல் தெளித்து அழித்து
அல்லலில்லாமல்
அமைதியாய் வாழலாம்!
வ. ராதா கிருஷ்ணன்,
கோவை.