நெற்றியெங்கும் முத்து முத்தாய் பூத்து நின்ற வியர்வை மொட்டுக்களை சேலைத் தலைப்பால் ஒத்தியெடுத்தேன். 'ஸ்ஸ்ஸ்... யப்பா...' சலிப்பின் வடிகாலாய் பெருமூச்சு விட்டேன்.
வத்தக் குழம்பை இறக்கி வைத்து, அப்பளத்தை பொரித்தேன். வத்தக் குழம்பின் மணம், நாக்கில் நீர் சுரந்தது. என் மனம் மிகவும் பூரிப்புடன் இருந்தது.
இரண்டு மாதங்களுக்கு பிறகு, வீட்டிற்கு வந்திருக்கிறாள், மகள் திவ்யா. வந்தவளுக்கு வாய்க்கு ருசியாய், அவளுக்கு பிடித்த உணவு வகைகளை செய்து கொடுக்க வேண்டும் என்ற முனைப்போடு, வழக்கத்தை விட சற்று முன்னதாகவே சமையல் களத்தில் குதித்து விட்டேன்.
வத்தக் குழம்பு, அப்பளம் என்றால், திவ்யாவுக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால், மாப்பிள்ளை அதற்கு நேர் எதிர். அவருக்கு அசைவம் இல்லாமல் உணவே இறங்காது. எங்கள் வீட்டில் நாங்கள் அதெல்லாம் சமைக்க மாட்டோம் என்பதால், மாப்பிள்ளையை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று விடுவாள், திவ்யா.
தாயும், மகளுமாய் இருந்தபோதிலும், நானும் திவ்யாவும், சினேகிதிகள் போல் பழகுவோம்.
'ஹும்... அம்மா, பொண்ணு மாதிரியா இருக்கீங்க... நண்பர்கள் மாதிரில்ல பழகறீங்க... உங்க ரெண்டு பேரையும் பார்த்தா, பொறாமையா இருக்கு. இதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும்...' என்று காதுபட சொல்பவர்களை, சிறு புன்முறுவலோடு கடந்து விடுவேன்.
என் வாழ்க்கைதான் இப்படி ஆகிவிட்டது. மகள் வாழ்க்கையாவது நன்றாக இருக்கட்டும் என்று, அவள் விருப்பத்திற்கு விட்டு விட்டேன். காதலித்த பையனையே அவளுக்கு திருமணம் செய்து வைத்தேன்.
நானும், திவ்யாவோட அப்பாவும் பிரிந்து, கிட்டத்தட்ட, 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆம்பளைக்கு ஆம்பளையா, பொம்பளைக்கு பொம்பளையா இருந்து அவளை வளர்த்திருக்கிறேன். இந்த, 10 ஆண்டு காலமாக, எத்தனை வலிகளை தாங்கி வந்திருக்கேன் என்பது, எனக்கு மட்டுமே தெரியும்.
ஆம்பளை துணை இல்லாமல் வாழ்வது அவ்வளவு சுலபமில்லை. நம் சமுதாயம் அப்படி வாழத்தான் விட்டு விடுமா... அப்போதே விவாகரத்து செய்யுமாறு உறவினர்கள் கூறினர். ஆனால், திவ்யாவுக்கு கல்யாணம் என்றால், அப்பா வந்து நிற்க வேண்டாமா... எனவே, திவ்யாவின் கல்யாணத்துக்கு பின், அவரை விவாகரத்து பண்ணிவிட வேண்டும் என்பது, என் திட்டவட்டமான முடிவு.
அடுத்த நாள் திவ்யா, 'பியூட்டி பார்லர்' சென்றிருந்த நேரத்தில், ஓய்வாய் சோபாவில் தலை சாய்த்த மறு நிமிடம், வீட்டு அழைப்பு மணி அலறியது.
சோர்வோடு எழுந்து சென்று கதவை திறந்தபோது, பக்கத்து வீட்டு மாமி நின்றிருந்தாள். ஆத்திர அவசரத்துக்கு உதவி செய்பவள். அலுவலகத்திலிருந்து வருவதற்கு தாமதமானால், திவ்யாவுக்கு அடைக்கலம் கொடுப்பவள், இந்த மாமி தான்.
''வாங்க மாமி, உள்ளே வாங்க...'' என்று, என் வாய் அழைத்ததே தவிர, மனசு முழுவதும் பதற்றம் தொற்றிக் கொண்டது. காரணமில்லாமல் மாமி வரமாட்டாள். ஏதோ விஷயம் இருப்பதாக, என் உள் மனம் சொன்னது.
''ஏன்டியம்மா... உன் மகளுக்கும், அவ ஆத்துக்காரருக்கும் எதுனா பிரச்னையா... ஏன் கேட்கறேன்னா, அவளை நம்ம வக்கீல் வீட்டில் வச்சு பார்த்தேன். ஏதோ, 'டைவர்ஸ்' விஷயமா பேச வந்திருக்கிறதா, வக்கீல் சம்சாரம் சொன்னா... நோக்கு விஷயம் தெரியுமோன்னோ?''
பெரிய பாறாங்கல்லை துாக்கி என் நடு மண்டையில் போட்டது போல் இருந்தது. நிற்க முடியாமல் காலுக்கடியில் பூமி நழுவியது. சுவரை பற்றிக் கொண்டேன்.
''சரி சரி... 'டென்ஷன்' ஆகாதே. அவ வந்தா என்ன, ஏதுன்னு விசாரி. கல்யாணம் ஆகி நாலு மாசம் கூட முடியல, அதுக்குள்ள, 'டைவர்ஸ், கேசு'ன்னு இருக்குதுங்க. ஹும்... காலம் ரொம்ப கெட்டுப் போச்சு,'' என, முணுமுணுத்தபடியே வாசலில் இறங்கி நடந்தாள், மாமி.
'ஐயோ, என்ன கொடுமையிது... அப்படின்னா, மாப்பிள்ளை கூட சண்டை போட்டுக்கிட்டு தான் வந்திருக்கிறாளா... என்ன பிரச்னையாக இருக்கும். வக்கீல் வரைக்கும் போய் இருக்கிறவளுக்கு, இந்த அம்மாகிட்ட சொல்லணும்ன்னு தோணலையா... வரட்டும், என்ன, ஏதுன்னு விசாரிப்போம்...' படபடப்போடு காத்திருந்தேன்.
'பியூட்டி பார்லர்' போன திவ்யா, மாலையில் வீட்டுக்குள் நுழைந்தவுடன், விளக்கை போட்டு விட்டு என்னிடம் பேச்சுக் கொடுத்தாள். ''வெள்ளிக்கிழமையும் அதுவுமா இப்படி, 'லைட்' போடாமல் இருட்டுல ஒக்காந்திருக்கே... என்னாச்சும்மா உனக்கு?''
''எனக்கு ஒண்ணும் ஆகலை. நான் நல்லாத்தான் இருக்கேன். உனக்குத்தான் ஏதோ ஆகியிருக்கு,'' என்று கடுப்படித்து, மாமி சொன்ன விஷயத்தை பற்றி அவளிடம் கேட்டேன்.
எந்தவித பதற்றமும் இல்லாமல், ''ஆமாம்... எனக்கும், அவருக்கும் ஒத்துப் போகலை. யாரோ ஒரு பொண்ணு கூட கார்ல சுத்திக்கிட்டு இருக்காருன்னு சொன்னாங்க. ஆனா, அதை நான் நம்பலை. ஒருநாள், அவ கூட கார்ல போறதை நானே என் கண்ணால் பார்த்துட்டு, கேட்டேன். 'கல்யாணத்துக்கு முன்னாடியே பழக்கம்'ன்னு சாதாரணமாய் சொல்றார்.
''அப்படிப்பட்ட ஒரு ஆள் கூட என்னால எப்படிம்மா வாழ முடியும். அதுதான், 'உனக்கும், எனக்கும் ஒத்துப் போகாது, 'டைவர்ஸ்' பண்ணிடலாம்'ன்னு ஒரேயடியா முறிச்சுக்கிட்டு வந்துட்டேன். வக்கீலிடம் பேசிவிட்டு, அப்புறமா உன்கிட்ட சொல்லலாம்ன்னு பார்த்தேன். அதுக்குள்ள உனக்கே தெரிஞ்சிடுச்சு.''
''திவ்யா, நீ அவசரப்பட்டுட்டே.''
''யாரு, நானா... நான் நல்லா யோசிச்சு தான் முடிவு எடுத்திருக்கேன். உண்மையில் அவசரப்பட்டு முடிவெடுத்தது நானல்ல... நீ,'' சற்றும் தயங்காமல், 'வெடுக்'கென்று சொன்னாள், திவ்யா.
'இத்தனை நாளும் இப்படி பேசாதவ, முகத்துக்கு நேரா நீன்னு பேசுறா... ஹும் எல்லாம் என்னுடைய நேரம்...' மனசுக்குள் நொந்து கொண்டேன். ஆனாலும், என் மனச் சங்கடத்தை அவளுக்கு காட்ட விரும்பாமல், சட்டென முகம் மாறி, ''என் வாழ்க்கையை விடு; நான் வாழ்ந்து கெட்டவ. ஆனா, நீ அப்படி இல்ல.
''புதுசா கல்யாணம் ஆனவள். உன் கழுத்துல இருக்கிற மஞ்ச கயிறோட ஈரம் கூட இன்னும் காயலே. அதுக்குள்ள, 'டைவர்ஸ்'ன்னு வந்து நின்னா எப்படி திவ்யா... எனக்கு அப்புறம் உனக்கு யாரு இருக்கா?'' கொஞ்சம் தயவாகவே கேட்டேன். ஏனென்றால், அவளிடம் மிரட்டல், உருட்டல் எல்லாம் சரிப்பட்டு வராது என்பது தெரியும்.
''இனிமே, அவர் கூட போய் என்னால வாழ முடியாதும்மா. நான் உன் கூடவே இப்படியே இருந்துடுறேன்,'' அவள் பார்வை தரையில் நிலைகுத்தி இருந்தது.
''நான் வேணா மாப்பிள்ளைகிட்ட பேசி பார்க்கறேன்,'' என்றேன்.
''வேணாம்மா... நீ அவர்கிட்ட பேசினா, உன்னை அவமானப்படுத்துவார். புருஷனை விட்டு ஓடி வந்து என்னை வளர்த்தியாம். அதனால தான், நான் ஒழுங்கா வளரலையாம். உன் புத்தி தான் என்கிட்டேயும் இருக்காம். இப்படி அடிக்கடி குத்திக்காட்டிப் பேசுவார். அதனால, நீ அவர்கிட்ட அவமானப்படுறதுல எனக்கு விருப்பமில்லை.''
அன்று இரவு, எனக்கு துாக்கம் வரவில்லை. நானும், என் புருஷனும் பிரிந்ததற்கு காரணம் இதுவே தான். அவருடன் ஆபீசில் வேலை பார்த்த ஒரு பெண்ணுடன் அந்நியோன்னியமாக பழகியது; அவளை அழைத்து அங்கே இங்கேன்னு போனது, இதெல்லாம் என் கவனத்திற்கு வரவே, நான் அவரை விட்டு நிரந்தரமாய் பிரிந்தேன்.
'நீ நினைக்கிற மாதிரி தப்பான எண்ணத்தோட அவகிட்ட பழகல... அவ என் கூட பொறந்த தங்கச்சி மாதிரி... வெளியூரில் இருந்து மாற்றலாகி வந்திருக்காளேன்னு கொஞ்சம் உதவி செஞ்சேன் அவ்வளவுதான்...' என்று அவர் கடைசி வரைக்கும் காலில் விழாத குறையாய் கெஞ்சத்தான் செய்தார்.
என்னால் தான் அதை இயல்பாய் ஏற்க முடியவில்லை. என்னை மாதிரியே என் பெண்ணும் இருக்கிறாள். ஆனாலும், அவளுக்கு இவ்வளவு வீம்பு கூடாது. எப்படியாவது மாப்பிள்ளையுடன் சேர்த்து வைத்துவிட வேண்டும் என்ற சிந்தனையில், இரவெல்லாம் துாக்கமின்றி விழித்துக் கிடந்தேன்.
மறுநாள் காலையில் ஒரு முடிவுடன், மகளை அழைத்தேன்.
''இத்தனை நாளும் என் புருஷனை பிரிஞ்சு இருந்துட்டேன். அது தப்பு தான். இப்போ உணர்ந்துட்டேன். திரும்பவும் அவர் கூட போய் வாழப் போறேன். நீ, உன் புருஷன் கூட போற வழியப் பாரு. உன் வாழ்க்கையை நீ பார்த்துக்கோ; என் வாழ்க்கையை நான் பார்த்துக்கறேன். என்னை நம்பி இருக்காதே,'' என்று பட்டும் படாமல், அதே நேரத்தில் தெள்ளத் தெளிவாக சொன்னேன்.
திவ்யாவின் முகம் மாறியது.
விருட்டென்று என் அறைக்குள் சென்று கதவை தாழிட்டு, மொபைல் போனை எடுத்து, கணவரை அழைத்தேன். வெகுநேரம் இருவரும் பேசவே இல்லை. அமைதியாக இருந்தோம். பிறகு, நான் தான் முதலில் பேசினேன்.
''என்னை மன்னிச்சிடுங்க. இத்தனை நாளும் உங்களை சரியா புரிஞ்சுக்கல. இனிமேலாவது நாம ரெண்டு பேரும் விட்டுக்கொடுத்து சேர்ந்து வாழலாம். நம் பொண்ணோட வாழ்க்கை நல்லா இருக்கணும்ன்னா, நீங்களும் ஒரு படி கீழே இறங்கி வரணும்,'' என்றேன்.
ஒரு சில நிமிடங்களுக்கு பின், ''சரி, வீட்டுக்கு வரேன். கவலைப் படாதே,'' என்றார்.
என் மனம் தெளிவடைந்தது.
பத்து நிமிடங்களுக்கு பிறகு, மொபைலில் அப்பாவை அழைத்தாள், திவ்யா.
''அப்பா... அம்மா உங்ககிட்ட பேசினாங்களா?''
''இப்பதாம்மா பேசிட்டு வச்சா,'' விஷயத்தை திவ்யாவிடம் சொன்னார்.
''எப்படி நம்மளுடைய பிளான். என் கணவர் சொன்ன மாதிரி அதிரடியா இறங்கினேன். அம்மா ரொம்ப பயந்துட்டாங்க. ராத்திரியெல்லாம் துாங்கவே இல்லை; முழிச்சுக்கிட்டே இருந்தாங்க.
''காலங்கார்த்தால எழுந்து என்னை கூப்பிட்டு, 'இத்தனை நாளும் என் புருஷனை பிரிஞ்சு இருந்தது தப்பு தான். இப்போ உணர்ந்துட்டேன். திரும்பவும் நான், அவர் கூட வாழப் போறேன்...' அப்படி இப்படின்னு ஒரே டயலாக் தான்.''
''இதேபோல் தான் என்கிட்டேயும் சொன்னாள்.''
''ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா... அம்மாவும், நீங்களும் சேர்ந்து வாழணும்ப்பா. அப்பா... சொல்ல மறந்துட்டேன் பாருங்க, மதியம் என் கணவரும் வரேன்னு சொல்லியிருக்கார். நீங்களும் கொஞ்சம் சீக்கிரமா வந்துடுங்கப்பா. இன்னைக்கு, 'லஞ்ச்' நான் தயார் பண்றேன்பா... ஓ.கே.,வா பைப்பா...'' என்ற திவ்யா, போனை துண்டித்து, ஒரு துள்ளலோடு சமையலறையை நோக்கி விரைந்தாள்.
டெய்சி மாறன்