எம்.சரவணன் எழுதிய, 'முயற்சி திருவினையாக்கும்' நுாலிலிருந்து:
ஒருமுறை, ஏவி.எம்.சரவணன், பெங்களூரு சென்றபோது, அங்கு, ஒரு டேபிள் வெயிட்டில்,
'முயற்சி எப்போதும் தோல்வி அடைவதில்லை' என்ற வாசகம் இடம்பெற்றிருந்ததை பார்த்தார். அதை வாங்கி வந்ததுடன், இந்த வாசகத்தை, தன்னுடைய லெட்டர் பேட் மற்றும் வாழ்த்து அட்டைகள் ஆகியவற்றிலும் அச்சடித்து பயன்படுத்தி வந்தார்.
இந்த வாசகம் கொண்ட வாழ்த்து அட்டையை, இயக்குனர் பாலச்சந்தருக்கு அனுப்பியிருந்தார்.
அந்த வாசகத்தை வெட்டி, தன் மேஜை கண்ணாடிக்கு அடியில் பத்திரப்படுத்தி வந்ததுடன், அதை ஆத்திச்சூடியாய் நினைத்து தினமும் மனதில் சொல்லிக் கொள்வார், பாலச்சந்தர்.
சிரிக்க, சிந்திக்க... நுாலிலிருந்து:
பிரெஞ்சு ஜனாதிபதி, அந்நாட்டு போலீஸ் டைரக்டர் ஜெனரலை பார்த்து, 'கடந்த, 10 நாட்களாக, கொலை, கொள்ளை, கற்பழிப்பு பற்றி ஒரு புகாரும் அரசுக்கு
வரவில்லையே... என்ன காரணம், அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லையா?' எனக் கேட்டார்.
'ஆம். ஒரு தவறுதலும் நடக்கவில்லை; காரணம்,
10 நாட்களாக போலீசார் அனைவரும் வேலை நிறுத்தம் செய்கின்றனர்...' என்றார், டைரக்டர் ஜெனரல்.
ஒருமுறை, ரஷ்யா சென்றார், பிரபல நாவலாசிரியரான பெர்னாட்ஷா. அவரிடம், 'என்ன பார்க்க வேண்டும்...' என கேட்டனர்.
'மாஸ்கோ, மத்திய சிறைச்சாலையை பார்க்க வேண்டும்...' என, ஷா கூற, அவரை, அங்கு அழைத்துச் சென்றனர்.
ஷாவை பார்த்து பலர், கைகளை ஆட்டி, தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.
அப்போது, 'அருமைத் தோழர்களே... மாபெரும் பாவங்களை செய்து கொண்டு, நாங்கள் வெளியே இருக்கிறோம். சின்ன சின்ன தவறுகளை செய்து விட்டு, நீங்கள் உள்ளே கிடக்கிறீர்கள்...' என்றார், ஷா.
கைதிகளுக்கு புரிந்ததோ இல்லையோ, ஷாவுடன் கூட வந்தவர்கள் நெளிந்தனர்.
நடுத்தெரு நாராயணன்