கேரள மாநிலம், திருச்சூர், கண்டசாம்கடவு என்ற ஊரை சேர்ந்தவர், டெலிஷி டேவிட் என்ற பெண்.
இவரது தந்தை, டேங்கர் லாரி ஓட்டுனர். சிறு வயது முதலே, தன் தந்தையுடன், பல இடங்களுக்கும் லாரியில் பயணித்துள்ளார். அது முதலே லாரி ஓட்டுனராக வேண்டும் என்ற லட்சியம் கொண்டார். முதுகலை பட்டம் பெற்றதும், லாரி ஓட்டும் பயிற்சி எடுத்து, லைசன்சும் பெற்றார்.
'பட்டப் படிப்பு படித்து, லாரி ஓட்டுவதா...' என்று, உறவினர்களும், நண்பர்களும் கிண்டல் செய்தபோதும், அதை பொருட்படுத்தாமல், டேங்கர் லாரியை ஓட்ட ஆரம்பித்தார்.
படிப்பு, அழகு எல்லாம் இருந்தும், இவரை திருமணம் செய்து கொள்ள யாரும் முன்வரவில்லை. லாரி ஓட்டுவதை விட்டு விட்டால், திருமணம் செய்து கொள்வதாக சிலர் முன் வந்தனர். ஆனால், டெலிஷியோ, 'என் தொழிலை விரும்பும் ஒருவர் வரும் வரை காத்திருப்பேன்...' என்கிறார்.
அரபு நாட்டில், அதிக சம்பளத்துடன் டேங்கர் லாரி ஓட்டும் பணி கிடைக்கவே, தற்சமயம், அங்கு சென்றுள்ளார். அங்கு, 18 சக்கர எரிபொருள் டேங்கர் லாரியை ஓட்டி, பார்ப்பவர்களை அசத்தி வருகிறார்.
— ஜோல்னாபையன்