போக்குவரத்து தடை ஏற்படுத்திய சங்கடம்!
மதுரை, தமுக்கம் மைதானத்தில் முதல்முறையாக, காங்கிரஸ் அல்லாத மற்ற எதிர்க்கட்சிகள் இணைந்து பொதுக் கூட்டம் நடத்தின. வேறு காரணத்திற்காக மதுரை சென்றிருந்தபோது, 'உங்களால் முடிந்தால் இந்த கூட்டத்திற்கு சென்று முழுமையாக, 'கவர்' பண்ணுங்கள்...' என்று போன் செய்தார், ரா.கி.ரங்கராஜன்.
என் மனைவியின் அண்ணன் ராஜுவுடன் சேர்ந்து, அந்த கூட்டத்திற்கு சென்றேன். ஆரம்பிக்கும் முன்பே, நிறைய கூட்டம். லேசாக துாறல் போட்டது. பத்திரிகையாளர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்திலும் இடமில்லை. அப்போது, அங்கிருந்த முரசொலி மாறன், என்னைப் பார்த்து கையசைத்து உள்ளே வரச் சொன்னார்.
பத்திரிகையாளர் பிரிவில் முதல் வரிசையில் உட்கார வைத்தார்.
வாஜ்பாய், எல்.கே.அத்வானி, என்.டி.ராமாராவ், கருணாநிதி, முரசொலி மாறன் மற்றும் காங்கிரஸ் அல்லாத பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள், மேடையில் இருந்தனர். கூட்டத்தில் தலைவர்களும் சுவாரசியமாக பேசினர். அனைவரும் பேசுவதை குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்தேன்.
வாஜ்பாய், என்.டி.ராமராவ், கருணாநிதி இவர்களெல்லாம் பேசி முடிக்கும்போது, அதிகாலை, 1:00 மணி. மெதுவாக துாறல் போட்டுக் கொண்டிருந்தாலும், அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தனர், மக்கள்.
பத்திரிகையாளர் பிரிவில் சுதாங்கன் மற்றும் பாவை சந்திரன் ஆகியோரை சந்தித்தேன். கூட்டம் முடிந்து வீட்டுக்கு வரும்போது மிகவும் தாமதமாகி விட்டது.
ரா.கி.,க்கு போன் செய்து, 'கூட்டத்தில் குறிப்பெடுத்ததை எழுதிக் கொண்டிருக்கிறேன். எப்படியும் நாளை மறுநாள் காலை உங்களுக்கு கிடைக்கும்படி அனுப்பி விடுவேன்...' என்றேன்.
டி.வி.எஸ்., பஸ் சர்வீஸ் போல, அப்போது கே.பி., டிராவல்ஸ் இருந்தது. 'இரவு, 8:00 மணிக்குள் அவர்களிடம் கொடுத்து விட்டால், அடுத்த நாள் காலை, 6:00 மணிக்குள் சென்னை சேர்ந்து விடும்...' என, உறவினர்கள் கூறினர். கட்டுரை எழுதி, கே.பி., டிராவல்ஸ் மூலம் அனுப்பினேன்.
காலை, 7:00 மணிக்கு, 'குமுதம்' இதழ் அலுவலகத்திலிருந்து, சென்னையிலுள்ள, கே.பி., டிராவல் அலுவலகத்திற்கு சென்றிருக்கின்றனர்; பஸ் இன்னும் வரவில்லை என்ற தகவல் கிடைத்திருக்கிறது.
'கட்டுரை அனுப்பி விட்டீர்களா... அதற்கு இடம் ஒதுக்கி வைத்திருக்கிறோம்...' என்று, மீண்டும் போன் செய்தார், ரா.கி.,
மதியம் வரையும் பஸ், சென்னை சென்று சேரவில்லை. அனைவருக்கும் ஒரே குழப்பம். பிறகு தான், பா.ம.க.,வினர், தங்கள் போராட்டத்திற்காக விழுப்புரம் அருகே நெடுஞ்சாலைகளில் ஏராளமான மரங்களை வெட்டி சாய்த்து, போக்குவரத்தை தடை செய்த தகவல் கிடைத்தது.
திங்கட்கிழமை மாலைக்குள் என் கட்டுரை கிடைக்காததால், அந்த வார, 'குமுதம்' இதழில் சேர்க்க முடியவில்லை. விழா முடிந்து வந்த உடனேயே கட்டுரை எழுதி இருந்தால், காலை, 6:00 மணிக்கு, வைகை எக்ஸ்பிரசில் சென்ற, பாவை சந்திரன் அல்லது சுதாங்கன் மூலமாகவோ கொடுத்து அனுப்பி இருக்கலாம்.
ஆறு பக்கத்துக்கு மேல் இந்த கட்டுரைக்காக இடம் ஒதுக்கி இருந்தும், பயன் இல்லாமல் போனது. நான் மிகவும் சிரமப்பட்டு எழுதியதற்காக, அதற்கடுத்த வாரம் கட்டுரையை சுருக்கி, இரண்டு பக்கம் வெளியிட்டனர்.
நடுவில் நிறுத்தப்பட்ட கமல் பேட்டி கட்டுரை!
நடிகர் கமல்ஹாசன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள், திரையுலக அனுபவங்கள் ஆகியவற்றை, 'குமுதம்' இதழில், 'களத்துார் முதல் கல்யாணராமன் வரை' என்ற தலைப்பில், நீண்ட பேட்டி தொடர் எழுதும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
மற்றவர்களை பேட்டி எடுத்ததற்கும், கமலின் இந்தப் பேட்டிக்கும் ஒரு வித்தியாசம். மற்ற பேட்டிகளில் எதைப் பற்றிப் பேச வேண்டும் என்று, அந்த நட்சத்திரத்திடம் முதலில் தெளிவுபடுத்தி, பிறகு அவரை சொந்த பாணியில் பேசக் சொல்லி, 'டேப் ரிகார்டரில்' பதிவு செய்து, அந்தக் கட்டுரைகளை எழுதுவேன்.
கமலின் பேட்டிக்கு நான் கேட்கும் கேள்விகளுக்கு, அவர் நேரிடையாகவே உடனுக்குடன் பதில் சொல்லும் விதத்தில், அந்த கட்டுரை அமைந்திருந்தது. கேட்கும் கேள்விகளுக்கு தெளிவாக, சரளமாக ஆங்கிலத்திலும், தமிழிலும் பேசினார், கமல்.
'களத்துார் முதல் கல்யாணராமன் வரை' தொடர், 'குமுதம்' இதழில், முழுமையாக வர முடியவில்லை. இயக்குனர் பாலசந்தருக்கு அந்தத் தொடர் வருவதில் விருப்பமில்லை. 24 அத்தியாயங்களுடன் நிறுத்த வேண்டியதாயிற்று. அந்த தொடரை ஏன் நிறுத்துகிறேன் என்று, கடைசி வாரம் ஒரு விளக்கம் அளித்திருந்தார், கமல்.
போலி நிருபரால், கட்டுரையாசிரியருக்கு நேர்ந்த சங்கடம்...
ஒரு இனிய காலைப் பொழுதில், பிலிம் நியூஸ் ஆனந்தன், எங்கள் வீட்டுக்கு வந்தார்.
'சென்னை நகரில் உள்ள அனைத்து லயன்ஸ் கிளப்புகளின் கூட்டமைப்பு, இந்த ஆண்டு திரைப்பட விருதுகள் வழங்க இருக்கிறது. அதில் சிறந்த பத்திரிகையாளராக உங்களை தேர்ந்தெடுத்து உள்ளது. லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் உங்களை நேரில் வந்து அழைப்பர்...' என்றார்.
திரைப்பட விருதுகள் பரிசளிப்பு விழா, சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்றது. அமைச்சர் நாஞ்சில் மனோகரன் தலைமை வகித்தார். சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர், பாடலாசிரியர் என்று, பல விருதுகளுடன், சிறந்த பத்திரிகையாளர் விருதை எனக்கு அளித்தனர்.
கமலஹாசனின் முன்னாள் மனைவியும், பிரபல பரத நாட்டிய கலைஞருமான வாணி கணபதியை பேட்டி கண்டு, 'குமுதம்' இதழில், 'அவர்' என்ற தலைப்பில், 15 வார தொடர் கட்டுரை எழுதும் வாய்ப்பு கிடைத்தது. கமலுடன் அவரது வாழ்க்கை மற்றும் பிரிவு பற்றி உணர்வுபூர்வமாக பேட்டி அளித்திருந்தார்.
'கண்ணியமான பேட்டி; கண்ணியமான நபர் வாணி...' என்று, வாசகர்களால் பாராட்டப்பட்ட தொடர் இது.
— தொடரும்
எஸ். ரஜத்