ப
தங்களுக்கு பிடித்த தலைவர்கள் அல்லது பிரபலங்களின் பெயர்களை, தங்கள் குழந்தைகளுக்கு சூட்டுவது பல பெற்றோர்களின் வழக்கம். இப்படி வைக்கப்படும் பெயரால், சில சமயம் குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் தர்மசங்கடத்துக்கு உள்ளாவது உண்டு.
அமெரிக்காவை சேர்ந்த ஒருவர், பிரபல ஆங்கில நாவலாசிரியரான, வில்லியம் ஷேக்ஸ்பியர் மீது மிகுந்த அபிமானம் கொண்டிருந்தார். அதன் காரணமாக, தன்னுடைய ஆண் குழந்தைக்கு, வில்லியம் ஷேக்ஸ்பியர் என்று, பெயர் சூட்டி விட்டார்.
குழந்தையாக இருக்கும்போது, அவ்வளவாக பிரச்னை எழவில்லை. வளர்ந்து பெரியவனானதும், தன்னுடைய பெயரால் எவ்வளவு சிரமங்கள் ஏற்பட்டன என்று, 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' ஆங்கில இதழுக்கு கட்டுரையாக எழுதி அனுப்பியுள்ளார். அக்கட்டுரை, இதழில் வெளியாகி பலரது அனுதாபங்களை பெற்றுள்ளது.
அகராதி மற்றும் லென்ஸ் மாமா உதவியுடன் அக்கட்டுரையை படித்து, ரசித்தேன். அதன் சுருக்கம் தான் இது:
* என்னை, ஒருவரிடம், 'வில்லியம் ஷேக்ஸ்பியர்' என, அறிமுகம் செய்து வைத்தனர். அடுத்த நிமிடம் அவர், 'நீங்க அந்த ஷேக்ஸ்பியருக்கு உறவா...' என்று கேட்டு, நெளிய வைத்தார்
* பள்ளியில் படித்த காலத்தில், என்னுடைய தேர்வு பேப்பரை திருத்திய ஒரு ஆசிரியர், 'ஷேக்ஸ்பியர் பெயரை வெச்சுக்கிட்டு, இப்படி மோசமா எழுதியிருக்கியே...' என்றார்
* அமெரிக்காவின் ப்ரிவில்லி நகர் ரயில் நிலையத்தில், வேலை பார்த்தேன். அப்போது, ஒரு ஸ்கூல் டீச்சர், மூடியிருந்த டிக்கெட் கவுன்டரை பலமாக தட்டி, 'நியூயார்க்குக்கு ஒரு டிக்கெட் கொடுங்க...'ன்னு கேட்டார். 'டிக்கெட் நான் தர முடியாது. ஏஜன்ட் வருவார், அவர் தருவார்...' என்றேன்.
அவருக்கு கோபம் வந்தது, 'யார் நீ... உன் பேர் என்ன... எனக்கு டிக்கெட் இல்லேங்கிற...' என கொதித்தெழுந்தார்.
'நான், வில்லியம் ஷேக்ஸ்பியர்...' என்றேன்.
நான், கிண்டலாக பதில் சொல்வதாக நினைத்தாரோ என்னவோ, இடத்தை காலி செய்து விட்டார். இரண்டு வாரத்தில் எனக்கு வேலை மாறுதல் உத்தரவு வந்தது. அந்த டீச்சர், அமெரிக்க ஜனாதிபதிக்கு உறவினராம். அவரிடம், புகார் செல்ல, விசாரணை நடந்தது.
என் பக்க விளக்கத்தை சொன்னேன். புரிந்து கொண்டனர். ஆனால், பெரிய இடமாம். ஏதாவது, 'ஆக் ஷன்' எடுத்தே ஆகணும் என, என்னை வேறு டிவிஷனுக்கு மாற்றி விட்டனர்
* ஒருமுறை, 'வாஷிங்டன் மவுன்ட் ஆல்டே' என்ற மருத்துவமனையில், சின்ன விபத்துக்காக, சிகிச்சைக்கு சேர்ந்தேன். ஆண்டுக்கு ஒருநாள் வெள்ளை மாளிகைக்கு, குறிப்பிட்ட சிலருக்கு அழைப்பு அனுப்பி, விருந்தளிப்பார், ஜனாதிபதி.
சிகிச்சையில் இருந்த நானும் அந்த பட்டியலில் இருக்க, அங்கு அனுப்பப்பட்டேன். ஜனாதிபதியிடம் அறிமுகப்படுத்தப்பட வேண்டியவர்களின் வரிசையில் நானும் நின்றிருந்தேன்.
ஜனாதிபதிக்கு முன், ராணுவ மேஜர் நின்று, அருகில் வந்தவரின் பெயரை கேட்டு, அவரிடம் சொல்லி அறிமுகப்படுத்தினார். என் முறை வந்தது, ராணுவ மேஜரிடம், என் பெயரை சொன்னேன். திகைத்தவருக்கு, சிரிப்பு வந்து விட்டது. அருகில் இருந்தவரிடம், என் பெயரை சொல்லி, 'ஜனாதிபதியிடம், நீயே இவரை அறிமுகப்படுத்து...' என கூறி, பின்புறம் சென்று விட்டார். என் பெயரை கேட்ட ஜனாதிபதியின் முகம் அஷ்ட கோணலாகியது.
நான், அவரை கடந்து செல்லும்போது, 'இப்படியும் சில கேஸ்கள்; வருத்தமா இருக்கு...' என்றார்
* ஒருமுறை, மன நோயாளி நண்பரை பார்க்க மருத்துவமனை சென்றிருந்தேன். அச்சமயம் அங்கு, ஜெனரல் ஹைன்ஸ் எனப்படும், வி.ஐ.பி., ஒருவர், மருத்துவமனையை பார்வையிட வந்திருந்தார். ஒரு மன நோயாளி, அவர் தோளைத் தட்டி, 'நீ யார்?' என கேட்க, 'நான் ஜெனரல் ஹைன்ஸ்...' என்றார்.
'ஓ நரகமே... இன்னும் இரண்டு வாரத்தில் இதிலிருந்து விடுபட்டு விடுவீர்கள்...' என்றார், அந்த மன நோயாளி. நர்ஸ் ஒருவர் குறுக்கிட்டு, ஜெனரல் ஹைன்ஸ்சை வெளியே அழைத்துச் சென்று விட்டார். நானும் வேகமாக வெளியே வந்தேன். 'உன் பெயர் என்ன...' என, என்னிடம் கேட்டார், ஜெனரல்.
என் நிஜ பெயரை சொல்லி, இவர் ஏதாவது நினைத்துக் கொண்டால் என்ன செய்வது என, பதில் சொல்லாமல், நழுவி விட்டேன்
* 'பர்மிட்' இல்லாமல், வாஷிங்டனில் காரை ஓட்டிச் சென்று, போலீசிடம் பிடிபட்டேன். கைது செய்து, ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றது, போலீஸ்.
அங்கு, என் பேரை கேட்டபோது, நான் சொல்ல, அவர், 'அட புத்திசாலியே... நீயே வந்து மாட்டிக்கிட்டியா... ராத்திரி முழுவதும் இங்கேயே இரு...' என கூறி விட்டார். அடுத்த நாள், உதவிக்கு வந்த நண்பர்கள், என்னை மீட்டுச் சென்றனர்
* அரசு அலுவலக கட்டடத்தின் லிப்டில், நானும், நண்பரும் நுழைந்தோம். அப்போது அங்கு, கவர்னர் வர, அவருடன் சேர்ந்து லிப்டில் பயணித்தோம். அவரிடம், என்னை அறிமுகப்படுத்தினான், நண்பன்.
அடுத்த நிமிடம் கவர்னரிடமிருந்து, 'ஹஹ்ஹா...' சிரிப்பு. அத்துடன், 'என்கிட்டேயே ஜோக்கா... ஷேக்ஸ்பியர் இறந்துட்டார்ன்ல நினைச்சேன்; இல்லையா...' என, கூறியபடியே வெளியேறினார்
* வெளியூர் சென்றபோது, ஒரு ஹோட்டலில் அறை கேட்டபோது, ரிஜிஸ்டரை கொடுத்து பெயரை எழுதச் சொன்னார், ரிசப்ஷன் கிளார்க். மனைவியும் கூட இருந்ததால், 'திரு - திருமதி வில்லியம் ஷேக்ஸ்பியர்' என, எழுதினேன்.
ரிஜிஸ்டரை பார்த்தவருக்கு திகைப்பு. பெயரையும், என்னையும் திரும்பத் திரும்ப பார்த்தார். பிறகு, 'ரூம் பாயை' கூப்பிட்டு, அறை சாவியை கொடுத்தனுப்பினார்.
சில நிமிடங்களில், மீண்டும் அவரை கடந்தபோது, அருகிலிருந்த டெலிபோன் ஆபரேட்டரிடம், 'நம்மை ஏமாத்தறதா நினைச்சுகிட்டு, இஷ்டத்துக்கு பெயர் எழுதறான்ங்க சார்...' என்றார், ரிசப்ஷன் கிளார்க்.
டெயில் பீஸ்:
அமெரிக்காவில், How many of me.com என்ற பெயரில் ஒரு, 'வெப்சைட்' உள்ளது. இதை திறந்தால், பிரபலமானவர்களின் பெயர்களை வைத்துள்ளவர்கள் எத்தனை பேர் என்று குத்துமதிப்பாக தெரிந்து கொள்ளலாம். அமெரிக்காவில் மொத்தம், 19 பேர் தான், வில்லியம் ஷேக்ஸ்பியர் என, பெயர் வைத்துள்ளனர். 3,961 பேர் - எலிசபெத் டெய்லர்; 3,399 பேர் - ஜெனிபர் லோபெஸ்; 10,323 பேர் - மைக்கேல் ஜாக்சன்; 892 பேர் - ஜார்ஜ் வாஷிங்டன் என்ற பெயரிலும் உள்ளனர்.
இப்படி சென்றது அக்கட்டுரை.
ஆகவே, பெற்றோர்களே... பிரபலங்களின் பெயர்களை குழந்தைகளுக்கு வைக்கும் முன், ஒருதடவைக்கு பலமுறை யோசியுங்கள்!