எம். கல்லுாரி ராமன், கரிசல்புலி, ராமநாதபுரம்: 'நான் தான், அ.தி.மு.க.,வின் பொதுச் செயலர்...' என்று, சசிகலா கூறியுள்ளாரே?
அவர் சொல்வது போலவே, 'லெட்டர் பேட்' அச்சடித்து வைத்துக் கொண்டு விட்டாரோ என்னவோ...
எஸ். குமார், காரைக்குடி: வாழ்க்கையில், முயற்சி அவசியமானதா?
முயற்சி செய்யும் ஒருவருக்கு, செல்வம் வந்தடையும்... அது இல்லாதவர்களுக்கு வறுமை தான் கிடைக்கும்!
ஆர். சுப்புத்தாய், விருதுநகர்: பொது இடங்களில் புகைப் பிடிப்பவர்களுக்கு, 2,000 ரூபாய் அபராதம் விதிக்க, மத்திய அரசு சட்டம் இயற்றி இருப்பதை, வரவேற்கிறீர்களா?
நல்ல சட்டம் தான்... இச்சட்டத்தால் எனக்கு ஒரு பிரச்னையும் இல்லை... லென்ஸ் மாமா போன்றோருக்குத் தான் அவஸ்தை!
* த. மூக்கையா, சென்னை: 'பா.ம.க., ஆட்சிக்கு வந்தால், முதல் கையெழுத்து, மது விலக்கு அறிவிப்பு தான்...' என்கிறாரே, தலைமை ஏற்றுள்ள அன்புமணி ராமதாஸ்...
'டாஸ்மாக்' பிரியர்கள் தமிழகத்தில், மிக மிக அதிகம்... அவர்களின் ஓட்டு, அன்புமணிக்கு கிடைக்காது... அதனால், பா.ம.க.,வும் ஆட்சியை பிடிக்க முடியாது!
எம். மகேஸ்வரன், பழனி: தர்மம் என்றால் என்ன? அது, என்ன சொல்கிறது?
'மற்றவர்களுக்கு சேவை செய்கிறபோது, நீ, உனக்கே சேவை செய்து கொள்கிறாய்... பிற உயிர்களுக்கு தீங்கு செய்கிறபோது, நீ உனக்கே தீங்கிழைத்துக் கொள்கிறாய்... பிறருக்கு தொண்டு செய்வதன் மூலம், நீ, உன் உள்ளத்தையே துாய்மைப்படுத்திக் கொள்கிறாய்...' என்று சொல்கிறது!
ஆர். பிரசன்னா, ஸ்ரீரங்கம், திருச்சி: ஊழல் செய்யும் அரசு அதிகாரிகளை, பணியிட மாறுதல் செய்வதால், அவர்கள் திருந்தி விடுவரா?
நிச்சயம் திருந்த மாட்டார்கள்... அவர்களை பணி நீக்கம் செய்வதுடன், 'கம்பி' எண்ணவும் வைத்தால், மற்ற அரசு ஊழியர்கள் திருந்துவர்!
எம். அர்ஜுன், விருதுநகர்: ஒருவரின் மனம் எப்படி இருக்க வேண்டும்?
மிக உயர்ந்த எண்ணங்களுடன் இருக்க வேண்டும்... அப்படி இருந்தால் அது மதிக்கப்படுகிறது... தாழ்ந்த எண்ணங்களில் விழும்போது, மிதிக்கப்படுகிறது!
* என். ராமானுஜம், திருச்சி: நன்மைகள் செய்வதை எந்த வயதில் ஆரம்பிக்க வேண்டும்?
பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் என, எப்போது தோன்ற ஆரம்பிக்கிறதோ, அப்போதிலிருந்தே ஆரம்பித்து விடுங்கள்... ஏனென்றால், வாழ்நாள் கழிந்துகொண்டே இருக்கும்... அதனால், தோன்றும்போதே, ஆரம்பித்து விடுங்கள்!