நிலவுக்கும் நெருப்பென்று பேர்! (20)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2022
08:00

முன்கதைச் சுருக்கம்: அபாயக் கட்டத்திற்கு சென்றான், புவனேஷ். புவனேஷின் இந்த நிலைக்கு தான் தான் காரணம் என, தருணிடம் போனில் தெரிவித்தான், இக்பால் -

தீப்தியை பார்த்ததுமே, தருணின் மூளைப் பிரதேசத்தில் இருந்த ஒட்டுமொத்த நியூரான்களும் உஷார் நிலைக்கு வந்தன.
மொபைல்போனின் மறுமுனையில் இருந்த இக்பாலிடம் கிசுகிசுப்பான குரலில், ''அப்புறம் பேசறேன்,'' என்றவன், ''என்ன தீப்தி... உன்னோட அம்மாவுக்கு இப்போ எப்படியிருக்கு... டாக்டரைப் பார்த்துட்டியா?'' எனக் கேட்டான்.

''அம்மாவுக்கு இப்போ பரவாயில்லை. முழங்கால்ல ஊசி போட்டிருக்காங்க. ஆர்த்தோ சீப் டாக்டர் வந்து பார்த்த பின்தான் வீட்டுக்குப் போகணுமாம். அவர், 'என்டோக்ரினோலஜி டிபார்ட்மென்ட்'டில் இருப்பார்ன்னு, டியூட்டி டாக்டர் சொன்னார்.
''அவரைத் தேடிக்கிட்டு இந்தப் பக்கமா வந்தேன்; உன்னைப் பார்த்தேன். ஆமா, இவ்வளவு மறைவான இடத்துல நின்னுகிட்டு, சினிமாவில் வர்ற வில்லன் மாதிரி யார்கிட்ட, என்ன பேசிட்டிருக்கே?''
''போன்ல வேற யாருமில்ல, என்னோட நண்பன் இக்பால் தான். புவனேஷ் எப்படியிருக்கான்னு கேட்டுக்கிட்டு இருந்தான். டவர் சரியா கிடைக்காததால இப்படி ஓரமா வந்து...'' அவன் பேசப் பேச, கையமர்த்தினாள், தீப்தி.
''தருண்!''
''என்ன?''
''நான் சொன்னதையே சொல்றேன்னு தப்பா நினைக்காதே. அந்த இக்பால், ஜோஷ் ரெண்டு பேருமே சரியில்லை... ஒரே ஒரு தடவை தான், 'பன் மாலில்' அவங்களைப் பார்த்தேன். நீதான் அறிமுகம் பண்ணி வெச்சே... அப்படி அறிமுகப்படுத்தி வெக்கும்போதுகூட நீ, நான் தீப்தியை காதலிக்கிறேன்னு சொல்லாம, துாரத்து சொந்தக்கார பொண்ணுன்னு சொன்னே.
''அந்தச் சமயத்துல அவங்க ரெண்டு பேரும் என்னைப் பார்த்த பார்வை இருக்கே... அதில் இருந்த விரசம் ஒரு பெண்ணுக்குத்தான் தெரியும், தருண். அவங்க உனக்கேற்ற நண்பர்கள் கிடையாது. இக்பால், பெரிய பணக்காரனா இருக்கலாம். ஜோஷ், ஐ.டி., கம்பெனியோட,'கீ போஸ்ட்'ல இருக்கலாம். என்னைப் பொறுத்தவரைக்கும் ரெண்டு பேரும் தப்பானவங்க. நீ அவங்களை விட்டு விலகி வரணும்.''
''சாரி.''
''எதுக்கு சாரி?''
''நீ நினைக்கிற மாதிரி அவங்க தப்பானவங்க இல்லை... கொஞ்சம் ஜோவியலா இருப்பாங்க... அவ்வளவுதான். நான் ஒண்ணும் சின்னக் குழந்தை கிடையாது. யார் நல்லவங்க, யார் கெட்டவங்கன்னு பிரிச்சுப் பார்க்க எனக்குத் தெரியும். இந்த விஷயத்துல, நீ எனக்கு புத்தி சொல்ல வேண்டிய அவசியமில்லை. எனக்கு அவங்க கூட பேசப் பிடிக்குது; பழகப் பிடிக்குது; அவங்க கூடவே இருக்கணும்போல் தோணுது. நான் அப்படித்தான் இருப்பேன்.''
''நீ இப்ப எதுக்காக இவ்வளவு கோபப்படறே?''
''இதோ பார்... இக்பால், ஜோஷ் இவங்களைப் பத்தி யாராவது தப்பா சொன்னா, எனக்குப் பிடிக்காது. நீ, உன்னோட வேலையை மட்டும் பாரு. நீ பார்க்க வேண்டிய டாக்டர், அதோ, அங்கே தான் இருப்பார். பார்த்துட்டு கிளம்பு. நானா உனக்கு போன் பண்ணுற வரைக்கும் நீ எனக்குப் பண்ணக் கூடாது. அதையும் மீறி பண்ணினா, நான், 'அட்டெண்ட்' பண்ண மாட்டேன்.''
அடிக்குரலில் கர்ஜிக்காத குறையாய் தருண் பேசிவிட்டு, அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான். திகைத்துப் போனவளாய் சில விநாடிகள் வரை நின்று, அனலாய் பெருமூச்செறிந்தபடி, அங்கிருந்து நடந்தாள், தீப்தி.
எதிரே ஒரு நர்ஸ் வர நிறுத்தி, ''எக்ஸ்க்யூஸ்மீ... டாக்டர் யாதகிரியைப் பார்க்கணும். அவர் எந்த அறையில இருப்பார்?''
''இதோ பக்கத்து அறை தான்.''
நர்ஸ் அறையை சுட்டிக்காட்டி நகர்ந்துவிட, பாதி திறந்திருந்த கதவை மெல்லத் தட்டி, ''மே ஐ கம் இன் டாக்டர்,'' என்றாள், தீப்தி.
''எஸ்...'' உள்ளேயிருந்து கனமான குரலொன்று வெளிப்பட்டு, உத்தரவைக் கொடுக்க, உள்ளே போனாள்.
நீள் சதுரமான கண்ணாடி மேஜைக்குப் பின், 60 வயதை நெருங்கிக் கொண்டிருந்த டாக்டர் யாதகிரி, தெலுங்கு வாசனையடிக்கும் முகத்தோடு பார்வைக்குத் தட்டுப்பட்டார்.
கையில் வைத்திருந்த, 'ரிப்போர்ட்'டை பைலுக்குள் வைத்து மூடியவர், தீப்தியை ஏறிட்டார். தீப்தி ஆங்கிலத்தில் ஏதோ பேச முயற்சித்த விநாடி, அவர் மெலிதாய் சிரித்தார்.
''உட்காரும்மா... நான் ஆந்திரா தான். இருந்தாலும், தமிழ் எனக்கு நல்லாவே தெரியும். நீ பேஷன்ட் திலகவதியோட பொண்ணு தானே?''
''ஆமா டாக்டர்.''
''அம்மாவுக்கு இப்போ, ஊசி போட்டிருக்கு. எப்ப வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்ன்னு கேட்க வந்திருக்கே. நான் சொன்னது சரியா?''
''அதேதான் டாக்டர்.''
''அரை மணிநேரம் கழிச்சு கூட்டிட்டு போம்மா... உன்னோட அம்மாவுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. எல்லா, 'ஸ்கேன் ரிப்போர்ட்'டையும் நான், 'சிஸ்டம்'லேயே பார்த்துட்டேன். அவங்களுக்கு எதுவும் இல்லை. இந்த வயசுல பெண்கள் எல்லாருக்கும் வரக்கூடிய,
'ஆர்த்தரைடிஸ்' பிரச்னை தான்
உன் அம்மாவுக்கும் வந்திருக்கு...
''தினசரி ரெண்டு டம்ளர் பால், வாரத்துக்கு ரெண்டு தடவை மத்தி மீன் சாப்பிட்டா, எலும்போட தேய்மானம் கட்டுப்பாட்டுக்குள்ளே இருக்கும். ஒரே ஒரு மருந்து மட்டும் தான் எழுதிக் கொடுத்திருக்கேன். அதை மட்டும் சாப்பிட்டா போதும். இனிமேல் எந்த, 'கன்சல்டேஷனும்' அவங்களுக்கு வேண்டியதில்லை.''
''தேங்க்ஸ் டாக்டர்...'' என்றபடி எழ முயன்ற தீப்தியை கையமர்த்தினார், டாக்டர் யாதகிரி.
''ஒரு நிமிஷம் உட்காரும்மா... உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.''
முகம் நிறைய கேள்விக்குறிகளால் நிரப்பி, தயக்கத்தோடு உட்கார்ந்தாள், தீப்தி.
''என்ன பேசணும் டாக்டர்?''
''கொஞ்ச நேரத்துக்கு முந்தி, சீப் டாக்டர் அறைக்கு முன்புறம் இருக்கிற வராந்தா பில்லர் மறைவில், ஒரு இளைஞனோடு பேசிட்டிருந்ததை நான் பார்த்தேன். அந்தப் பையன் யாரும்மா?''
''அது... வந்து டாக்டர்...''
''எனக்குப் புரியுது... அவனை நீ காதலிக்கிறே... ஏம் ஐ கரெக்ட்?''
''ஆமா டாக்டர்.''
''அந்தப் பையன் பேர் என்ன?''
''தருண்.''
''தருணைப் பத்தின விபரங்களை நான் தெரிஞ்சுக்கலாமா?''
குழப்பத்தோடு யாதகிரியைப் பார்த்தாள், தீப்தி.
''டாக்டர்... எதுக்காக இப்ப அவரைப் பத்தி விசாரிக்கறீங்க?''
''நான் கேட்ட கேள்விக்கு நீ மொதல்ல பதில் சொல்லும்மா.''
''அவருக்கு சொந்த ஊர் பாண்டிச்சேரி. வீட்டுக்கு ஒரே பையன். அவரோட அம்மாவும் - அப்பாவும் பாண்டிச்சேரியில் தான் இருக்காங்க. இவர் மட்டும் இங்கே கோயமுத்துார்ல இருக்கார். வங்கியில, அசிஸ்டென்ட் மானேஜரா வேலை பண்றார். வீடு, உக்கடம் ஏரியாவில். ரெண்டு நண்பர்களுடன் தங்கியிருக்கார்.''
''தருணோட பழக்கவழக்கமெல்லாம் எப்படி?''
''கொஞ்சம் பிடிவாத குணம். கூடவே முன்கோபம்.''
''உனக்குத் தெரிஞ்ச விபரங்கள் இவ்வளவுதானா... இல்லை இன்னும் ஏதாவது இருக்கா?''
''இவ்வளவு தான் டாக்டர்.''
''எதையும் மறைக்கலையே?''
''எதுக்காக மறைக்கணும்.''
''சாரிம்மா... ஒரு முக்கியமான விஷயம் உனக்குத் தெரியலை போலிருக்கு.''
தீப்தியின் கண்களில் கலவரம் பரவியது.
''டாக்டர்... நீங்க இப்ப என்ன சொல்ல வர்றீங்க?''
சில விநாடிகள் மவுனம் அனுஷ்டித்த டாக்டர் யாதகிரி, தன் இரண்டு முழங்கைகளையும் மேஜையின் மேல் ஊன்றி குரலைத் தாழ்த்தினார்.
''ஆந்திரா மாநிலம், 'ஹனம்கொண்டா மென்டல் ஹெல்த் நியூரோ சயின்ஸ் ஹால்பிடல் இன்டென்சிவ் வார்டில்' தருண், ஒரு வருஷம் மனநோயாளியாய் இருந்ததும், சிகிச்சைக்கு பிறகு, அந்த மனச்சிதைவு நோயிலிருந்து அவன் மீண்டதும், எனக்குத் தெரியும். உனக்குத் தெரியுமா?''
தீப்தியின் ஒட்டுமொத்த உடலும் அதிர்ச்சிக்கு உட்பட, பார்வை நிலைகுத்திப் போனவளாய் டாக்டரையே வெறித்தாள்.
யாதகிரி பேச்சைத் தொடர்ந்தார்...
''சொல்லு... உனக்கு இந்த விஷயம் தெரியுமா, தெரியாதா?''
''தெரியாது டாக்டர்,'' தீப்தியின் தலை தன்னிச்சையாய் பயத்தில் ஆடியது.
''நான் இந்த ஹாஸ்பிடலுக்கு டாக்டராய் வருவதற்கு முன், ஆந்திரா, வாரங்கல் நகரில் ஒரு பிரபலமான ஹாஸ்பிடலில், 'ஆர்த்தோ சர்ஜனாய்' இருந்தேன். அங்கிருந்து, 9 கி.மீ., துாரத்தில் ஹனம்கொண்டா மென்டல் ஹாஸ்பிடலில், சீப் சைக்யாட்ரிஸ்ட்டாய் இருந்த பூர்ணசந்தர்ராவ் என்னோட நண்பர். அவரைப் பார்த்து பேசறதுக்காக மாசத்துக்கு ஒரு முறையாவது அங்கே போயிடுவேன்.
''ஒருநாள் முழுவதும் அவரோடு ஹாஸ்பிடல்ல இருந்துட்டு, மறுநாள் வாரங்கல்லுக்கு வந்துடுவேன். அந்த சமயத்துல தான் நான், தருணை அங்கே பார்த்தேன். பார்க்கிறதுக்கு சினிமா, 'ஹீரோ' மாதிரி இருக்கிற தருணுக்கு, என்ன பிரச்னைன்னு என்னோட நண்பர் பூர்ணசந்தர்ராவ்கிட்ட கேட்டேன். தருணுக்கு, 'பை போலார் டிஸ்ஆர்டர்' என்ற மனச்சிதைவு நோய் இருக்கிறதா, அவர் சொன்னார்.''
யாதகிரி பேசப் பேச, தீப்தி குறுக்கிட்டு, ''தருணுக்கு, உங்களைத் தெரியுமா டாக்டர்?''
''தெரியாது... நான் அந்த ஹனம்கொண்டா ஹாஸ்பிடலுக்கு வந்துட்டு போனதை, அவன் கவனிச்சிருக்க வாய்ப்பில்லை. ஏன்னா, அவன் சிகிச்சை எடுத்துட்டிருந்த, 'இன்டென்சிவ் வார்டு'க்கும், டாக்டர் பூர்ணசந்தர்ராவ் அறைக்கும் இடையே, 100 மீட்டர் துாரமாவது இருக்கும்.''
''தருணைப் பார்த்தா, மனநோயாளி மாதிரி தெரியலையே, டாக்டர்?''
''தெரியாது... அதுதான், 'பை போலார் டிஸ்ஆர்டர்' என்ற மனச்சிதைவு நோயின் மிகப்பெரிய பலவீனம். நோயாளி குணமாயிட்ட மாதிரி தெரியும். ஆனா, உள்ளுக்குள்ளே நீறுபூத்த நெருப்பாய் அந்த நோயோட தாக்கம் இருந்துட்டே இருக்கும்.
''தமிழ்ல இதுக்குப் பேரு, இருமுனைக் கோளாறு. இந்த நோயால் ஒருத்தர் பாதிக்கப்பட்டா, அது வாழ்நாள் முழுவதும் இருக்கும் என்கிறது, இன்றைய மருத்துவம். எப்படிப்பட்ட நவீன சிகிச்சை எடுத்துக்கிட்டாலும் சரி, நோயை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியுமே தவிர, முற்றிலும் குணப்படுத்த முடியாது.
''இது ஒரு வகையான, ஹைபோமேனியா... இதுக்கு மேல நான் எதை எதையோ சொல்லி, உன்னை பயமுறுத்த விரும்பலை. தருண் பற்றி தெரிஞ்ச உண்மையை உன்கிட்ட சொல்லணும்ன்னு நினைச்சேன், சொல்லிட்டேன்.''
தீப்தி அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் உறைந்து போய் உட்கார்ந்திருக்க, ''உனக்கும், தருணுக்கும் இடையில் எப்படி இந்தக் காதல் வந்ததுன்னு தெரிஞ்சுக்கலாமா?'' என்றார், யாதகிரி.
''அவர் வேலை செய்யற வங்கிக்கு, நான் ஒரு வாடிக்கையாளர். வாரத்துக்கு ரெண்டு மூணு தடவையாவது வங்கிக்கு போவேன். 'லோன்' வாங்கற விஷயத்துல அவர் எனக்கு ரொம்பவும் உதவி பண்ணினார். அந்த நெருக்கம் தான் போகப்போக காதலா மாறியது.''
''தருணோட நடவடிக்கையில் உனக்கு எந்த ஒரு சந்தேகமும் வரலையா?''
''வரலை... ஆனா, சமீபகாலமாய் ஒரு நெருடல் எட்டிப் பார்க்க ஆரம்பிச்சது.''
''என்ன நெருடல்?''
''இந்த காதல் விவகாரத்தில் எனக்கு இருந்த உறுதிப்பாடு, அவருக்கு இல்லை. என்னைக் காதலிக்கிற விஷயம் வெளியே யாருக்கும் தெரியக் கூடாதுன்னு நினைக்கிறார். நினைக்கிறார்ன்னு சொல்றதை காட்டிலும் பயப்படறாருன்னு, சொல்றதே சரியாய் இருக்கும்.''
''இப்ப நீ சொன்ன இந்த பயம் சம்பந்தப்பட்ட விஷயம் தான், 'பை போலார் டிஸ்ஆர்டர்' நோயாளிகளுக்கே உரித்தான முக்கியமான அறிகுறி. இப்படிப்பட்டவங்களுக்கு எந்த அளவுக்கு பயம் இருக்குமோ, அந்த அளவுக்கு மூர்க்கத்தனமான தைரியமும் இருக்கும்.
''அதாவது, தனக்குப் பிடிக்காத ஒரு நபரை, 'டார்ச்சர்' பண்ணியே கொலை செய்யக் கூடிய அளவுக்கு இருக்கும். இந்த பயம் மாதிரியே வேறு எந்த ஒரு உணர்ச்சியாக இருந்தாலும்
சரி, அது ஒரு பக்கம் குறைவாகவும், இன்னொரு பக்கம் அதிகப்படியாகவும் இருக்கும்.''
வியர்த்த முகமாய் பய எச்சிலை விழுங்கிவிட்டு, ''இப்ப நான் என்ன செய்யலாம், டாக்டர்?'' என்றாள், தீப்தி.
''நீ அவன்கிட்டயிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் விலகணும். அப்படி நீ விலகிப் போறதை அவன் கண்டுபிடிச்சுடவும் கூடாது. அப்படி அவன் கண்டுபிடிச்சுட்டா, அது உன்னோட உயிருக்கும் ஆபத்தாக முடியவும் வாய்ப்பிருக்கு.''
தொடரும்
ராஜேஷ்குமார்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chennai sivakumar - chennai,இந்தியா
19-ஜூன்-202217:51:31 IST Report Abuse
chennai sivakumar அதிரடி திருப்பங்கள். சூப்பர் ராஜேஷ் சார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X