அன்புள்ள அம்மாவுக்கு —
நான், 34 வயது ஆண். படிப்பு: எம்.ஏ., எனக்கு இரு அக்காக்கள். இருவருக்கும் திருமணமாகி விட்டது. என் தந்தை, தாசில்தாராக இருந்தார். பணி ஓய்வுக்கு பின் சென்னையில் என்னுடன் தான் இருக்கிறார். அம்மா, இல்லத்தரசி. நான், மாநில அரசு பணியில் உள்ளேன்.
என் அக்காக்களுக்கு திருமணம் முடிந்ததுமே, எனக்கு திருமணம் செய்து வைக்க, பெண் பார்த்தனர்.
எத்தனையோ பெண்ணை பார்த்தும், ஏதும் சரியாக அமையவில்லை.
எனக்கு, முன் தலை வழுக்கை விழுந்திருக்கும். இதனால், வயதானவர் போல் தோற்றமளித்ததால், பெண்கள் என்னை நிராகரித்துள்ளனர் என்று தோன்றுகிறது.
சமீபகாலமாக எனக்கு இன்னொரு பிரச்னை ஏற்பட்டுள்ளது. தலைமுடி, கொஞ்சம் கொஞ்சமாக கொட்டி, மொட்டை தலையாகி விட்டது.
எத்தனையோ மருத்துவர்களை பார்த்தாகி விட்டது. இது, பரம்பரையாக வந்திருக்கும் என்று கூறிவிட்டனர். இத்தனைக்கும் என், அம்மா - அப்பாவுக்கு, வெளுத்திருந்தாலும் தலை நிறைய
முடி இருக்கும்.
கடைசியாக, ஒரு மருத்துவர் தான், 'இது ஒருவிதமான நோய். இனி, முடி வளருவது கஷ்டம்; இதற்கு மருந்து ஏதும் இல்லை...' என்று கூற, மனம் நொந்து விட்டேன்.
திரைப்படங்களில் வேண்டுமானால், 'மொட்டை பாஸ்' என்று அடைமொழியில் அழைத்து, சகஜமாக இருப்பது போல் காட்டுவர். நிஜ வாழ்க்கையில், நான் எவ்வளவு அவமானங்களை சந்தித்துள்ளேன் என்பது, எனக்கு மட்டும் தான் தெரியும்.
'விக்' வைத்தும் பார்த்து விட்டேன். நமைச்சல் ஏற்பட்டு, தலை புண்ணாகியது தான் மிச்சம். தொப்பி அணிந்து சென்றால், வில்லனை பார்ப்பது போல் பார்க்கின்றனர். உயரதிகாரி முன், தொப்பி அணிந்து சென்றால், மரியாதை குறைவாக கருதுகிறார். நான் என்ன செய்யட்டும், அம்மா?
— இப்படிக்கு,
உங்கள் மகன்.
அன்பு மகனுக்கு —
பொதுவாக வழுக்கைத் தலை ஆண்கள் அறிவாளிகளாகவும், தாம்பத்யத்தில் கில்லாடிகளாகவும் இருப்பர் என, ஒரு பொய்புனைவு (?) கூறுகிறது. 87.5 சதவீதப் பெண்கள், வழுக்கைத் தலை ஆண்களை விரும்புவதாக, ஆய்வு தெரிவிக்கிறது.
ஹாலிவுட்டில் சீன் கானரி, புரூஸ் வில்லிஸ், பென் கிங்ஸ்லி, யூல் பிரின்னர், ஜேஸன் ஸ்டாத்தம் போன்ற வழுக்கைத் தலை, 'ஹீரோ'கள் மிகவும் புகழ்பெற்றவர்களாக திகழ்கின்றனர்.
இங்கிலாந்து முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், மஹாத்மா காந்தி கூட வழுக்கைத் தலை ஆண்களே. நடிகர் சத்யராஜ், கம்பீரமான வழுக்கைத் தலை ஆண்.
உலகின் மிகவும் கவர்ச்சிகரமான வழுக்கைத் தலை ஆண், பிரிட்டன் இளவரசர் வில்லியம்ஸ். உலகின் பணக்கார தனி நபர், வழுக்கைத் தலை ஜெப் பெஸோஸ்.
பரம்பரை முடி உதிர்தல் காரணமாக வழுக்கைத் தலை ஏற்படுவதை, 'ஆன்ட்ரோ ஜெனிடிக் அலோபிசியா' என்பர். 'செபோரிக் டெர்மடிஸ்' என்ற தோல் நோய் மூலமும் முடி உதிரும்.
'ஸ்கேரிங் அலோபிசியா' எனும் உதிர்வுநோய், 7 சதவீத ஆண்களுக்கு ஏற்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி தவறுதலாக உடலின் சில பாகங்களை தாக்குவதால், 'அலோபிசியா ஏரியேட்டா' பீடிக்கிறது. 'அலோபிசியா யுனிவர்சலிஸ்' வந்தால், உடலின் அனைத்து ரோமங்களும் உதிர்த்துவிடும்.
வயது, பரம்பரை, புற்றுநோய், ஹார்மோன் ஏற்ற இறக்கம், ரோம வேர்க்கால் நோய் தொற்று, பால்வினை நோய்கள், தைராய்டு, மன அழுத்தம், ரத்தசோகை, வைட்டமின் மற்றும் புரோட்டீன் குறைபாடு, முரட்டுத்தனமான தலை வாரல்கள் முடி உதிர்வை ஏற்படுத்துகின்றன.
பெரும்பாலும் உதிர்ந்த முடிகள் மீண்டும் முளைக்க வாய்ப்புள்ளது.
விலை உயர்ந்த, ஒவ்வாமை ஏற்படுத்தாத, 'விக்' பொருத்திக் கொள்ளலாம். தொடர்ந்து தொப்பி அணிந்து வந்தால், அதுவே உன் தனிப்பட்ட ஆளுமையாகிவிடும். உதாரணம், பாலுமகேந்திரா.
எந்த முயற்சியும் பலிக்காவிட்டால், கவலைப்படாதே. வழுக்கைத் தலையை அப்படியே விடு. 'மெட்ரிமோனியல்'கள் மூலம் வரன் பார். விரும்பி வருகிற வரன் வரட்டும்.
ரோம பிரச்னையை மண்டைக்குள் ஏற்றாமல், அரசு பணியில் தங்க முத்திரை பதி.
வரும் மனைவியிடம் காதலாய் அனுசரணையாய் நடந்து பார். 'உலகின் தலைசிறந்த ஆண்' என, மனைவி உன்னை கொண்டாடுவாள்.
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.