''வனஜா... நம் மகள் சுதா என்ன சொன்னா,'' என்றார், சடகோபன்.
''நாளைக்கு வீட்டுக்கு வர்றாளாம்!''
''ஹும், அப்போ விஷயம் தெரிஞ்சுதான் எல்லாரும் வர்றாங்கன்னு நினைக்கிறேன்.''
''இதுல சந்தேகம் வேறயா... மூத்த மகள் சஞ்சலா அதிசயமா போனில் பேசும்போதே நினைச்சேன். மகன் பாலுவும் பேசினானே.''
வனஜா திருமணமாகி வரும்போது, மாமனார் - மாமியார், இரண்டு நாத்தனார்கள், ஒரு தம்பி என்று கூட்டுக் குடும்பமாக இருந்தனர். வனஜா, பள்ளி ஆசிரியையாக இருந்ததால், ஏதோ வண்டி ஓடியது. கையிலிருந்ததை எல்லாம் செலவழித்து, பெரிய நாத்தனாரை திருமணம் செய்து அனுப்பிய சமயம், கர்ப்பமானாள், வனஜா.
இரண்டாவது நாத்தனாருக்கு வரன் பார்த்து முடிக்க, அடுத்த மகளை சுமந்து கொண்டிருந்தாள், வனஜா.
இரு நாத்திகளுக்கும், பிரசவம், சீமந்தம், காதுகுத்து எல்லாமும் முடிந்து, மூச்சு விடுகையில், மூன்றாவதாக மகன் வந்து விட்டான் வயிற்றில்.
கடன் வாங்குவதும், கட்டி முடிப்பதும், திரும்ப செலவு, கடன் என்று ஒரே ஓட்டம் தான்.
கொழுந்தன் வேலைக்குப் போனால் கொஞ்சமேனும் சமாளித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்திலும் மண் விழுந்தது. அவன் வடமாநில பெண்ணை காதலித்து, திருமணம் செய்து கொள்ள, ரெண்டு பட்டது வீடு. குடியிருந்த வீட்டை விற்று, தன் பங்கை வாங்கி போய் விட்டான்.
ஊரில் தலை காட்ட முடியாமல், சென்னைக்கு மாற்றலாகி வந்தனர். பள்ளி ஒன்றில் வேலைக்கு சேர்ந்தாள், வனஜா. அவளது பிள்ளைகளும் அதே பள்ளியில் படித்தனர். வீட்டில் பெரியவர்கள் இருக்க, ஒன்றிரண்டு, 'ஹோம் டியூஷன்' எடுத்தாள், வனஜா.
குழந்தைகள் வளர, பெரியவர்களும் ஒருவர் பின் ஒருவராக இறையடி சேர, வயசுப் பிள்ளைகளை கவனிக்க, டியூஷன்களை நிறுத்தினாள். வீட்டிலேயே தையல் மிஷின் வாங்கிப் போட்டு, அக்கம் பக்கம் தைத்துக் கொடுத்ததில், கொஞ்சம் காசு புழங்கியது. சீட்டு போட்டும், நகைச்சீட்டு கட்டியும் சிறுக சிறுக சேமிக்கவும் துவங்கினாள், வனஜா.
சடகோபன் ஆபிசில், நண்பர்கள் நாலைந்து பேர், சென்னை புறநகரில் மனை வாங்க முனைய, இவர்களும் வாங்கினர். சஞ்சலா எம்.சி.ஏ., முடிக்கும் முன்பே 'கேம்பஸ் இன்டர்வியூ'வில் தேர்வாகி, படிப்பை முடித்த கையோடு வேலையிலும் சேர்ந்தாள். பிடித்தம் போக, 60 ஆயிரம் ரூபாய் வர, நிம்மதி பெருமூச்சு விட்டார், சடகோபன்.
இரண்டு ஆண்டுகள் அவளது சம்பளத்தை சேமித்து, சிறுக சிறுகக் கட்டிய வீடும் முழுமை பெற, புது வீடு வந்து சேர்ந்தனர். சூட்டோடு சூடாக பெண்ணுக்கு திருமணமும் செய்து வைத்தனர்.
திருமணமான ஆறாம் மாதமே, மருமகனுக்கு வெளிநாட்டு உத்தியோகம் வர, சஞ்சலாவும் சேர்ந்தே விமானம் ஏறினாள். அவளுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தும், இந்தியா வரவில்லை.
வீடியோகாலில் மாதமொருமுறை பேசுவாள். அதுவும் குறைந்து, நின்றே போனது. அவளும் பெற்றோரையோ, உடன் பிறந்தவர்களையோ அங்கு அழைக்கவில்லை. ஆனால், சம்பந்தியம்மா மட்டும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை போய் வந்து பெருமையடித்துக் கொள்வதை, விசேஷ வீடுகளில் கேட்க நேர்ந்தது.
நான்கு ஆண்டுகளில் இரண்டாவது மகள் சுதாவுக்கு வரன் அமைய, எப்படியோ ஒப்பேற்றியாயிற்று. இவளின் புகுந்த வீடு தாம்பரத்தில் இருந்தது. அவளும், அவள் கணவனும் வாரக்கடைசியில் வீட்டுக்கு வந்து விடுவர். பொண்ணும் - மாப்பிள்ளையும் வருவது சந்தோஷம் தான். ஆனால், சுதா, ஒரு வேலையும் செய்ய மாட்டாள். சாப்பிட மட்டுமே அறையிலிருந்து வெளியே வருவர். இதனால், வாரக்கடைசியில், வனஜாவுக்கு ஓய்வென்பதே இல்லாமல் போனது.
வக்கணையாக, வகைதொகையாக வேண்டியதை கேட்டு, சமைத்துத்தரச் சொல்லி சாப்பிடுவார், சுதா புருஷன். பெற்றோருக்கோ, தம்பிக்கோ ஒரு வாழைப்பழம் கூட வாங்கி வரமாட்டாள், சுதா.
சுதாவுக்கு ஏழாம் மாதம் வளைகாப்பு நடத்தி வீட்டுக்கு அழைத்து வர, மாப்பிள்ளையும் கூடவே வந்துவிட்டார்; வனஜாவுக்கும், சடகோபனுக்கும் விழி பிதுங்கியது. பிள்ளை பெற்று மூன்றாம் மாதமே அனுப்பி வைக்க, கொஞ்சம் ஆசுவாசமானது. பின், குழந்தை ஓரளவு வளர்ந்ததும், திரும்ப பழைய கதை தான்.
பாலுவுக்கு திருமணமாகி, அவனும் டில்லியில் குடியேறி விட, சுதாவின் அட்டகாசம் மட்டும் முடியவில்லை.
வயிற்றுவலி என, மருத்துவமனைக்கு வனஜா போக, அவளது கருப்பையில் பிரச்னை என்பதால், உடனே நீக்க வேண்டும் என்று சொல்ல, திகைத்துப் போனார், சடகோபன்.
வனஜா படுத்து விட, சுதாவுக்கு விபரம் தெரிவித்தார், சடகோபன். வந்து பார்த்தவள், மறுநாளே, 'பெரிய மாமனார் வீட்டு விசேஷம். நான் ஊருக்குப் போயே தீரவேண்டிய கட்டாயம்...' என்று போனவள் தான், அத்துடன் வரவில்லை.
டில்லியிலிருந்து வந்த மகனும், இரண்டாம் நாளே விமானம் ஏறி விட்டான். சஞ்சலாவோ, அங்கிருந்தே, 'அட்வைஸ்' மழை பொழிந்ததோடு சரி.
'பணத்துக்கு என்ன செய்யப் போறீங்க; ஒத்தாசைக்கு யார் இருக்கிறாங்க...' என, யாருமே கேட்கவில்லை.
சடகோபனும், அக்கம் பக்கத்தவர்களும் துணை நிற்க, 'டிஸ்சார்ஜ்' ஆகி வீடு வந்தாள், வனஜா. ஒரு மாதமானபின், வந்த சுதாவையே சமைத்துக் கொள்ள சொல்லி, வனஜா படுத்து விட, கடுப்பானாள். சடகோபனும் மனைவியுடன் அறைக்குள்ளேயே இருந்து கொண்டார். அதன் பின், எப்போது வந்தாலும் இதுவே தொடர்ந்து நடக்க, சுதா வருவது நின்றது.
இன்னும், 10 நாளில் சடகோபன் ஓய்வு பெற உள்ளார். வனஜாவும் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்து, விடுமுறையில் இருந்தாள். எப்போதுமில்லா அதிசயமாக, பெற்ற மூன்றுமே அடுத்தடுத்து தொடர்பில் வர, இத்தனை நாளும் வாழ்ந்த வாழ்க்கையில் நிறையவே பாடம் கற்றுக் கொண்டதால், சில முடிவுகளை எடுத்திருந்தாள், வனஜா.
மகன், மருமகள், மகள்கள் மற்றும் மருமகன்கள் என, வீடு கலகலவென்றிருந்தது. பேரன் - பேத்திகளை அழைத்து வரவில்லை. முதல்நாளே அனைவரும் சுதா வீட்டுக்கு வந்து, அங்கிருந்து ஒன்றாக இங்கு வந்துள்ளது, அவர்கள் பேச்சிலிருந்து வனஜாவுக்கு புரிந்தது.
காபி மட்டுமே கலந்து தந்து, கணவனுக்கருகில் அமர்ந்து கொண்டாள், வனஜா.
தங்களால் வந்து உதவ முடியாமல் போனதற்காக அழகான சாக்கு போக்குகள் சொல்ல, வனஜாவும், சடகோபனும் ஏதும் பேசவில்லை.
''என்னம்மா ஸ்பெஷல் சமையல் இன்னிக்கு. எல்லாருமே அதிசயமா ஒன்றாக இருக்கோம்?'' என்றாள், சுதா.
''அதான் நீயே சொல்லிட்டியே அதிசயம்ன்னு.''
''எனக்கு, உன் கையால, பனீர் புலாவ் வேணும்மா... அவர் புறப்படும்போதே சொன்னார், அத்தை கையாலே அடையும், அவியலும் சாப்பிட்டு நாளாச்சுன்னு.''
சஞ்சலாவும், பாலுவும், தங்கள் விருப்ப மெனுவைத் தெரிவிக்க, புன்னகை மாறாமல், ''அதிலென்னம்மா... ஸ்விகி நம்பர் இருக்கா... இல்லைன்னா நான் தரேன். வேண்டியதை, 'ஆர்டர்' பண்ணினா, 10 நிமிஷத்துலே சுடச்சுட வந்திடுமே,'' என்றாள், வனஜா.
ஆறு பேருமே வாயடைத்து, அவளைப் பார்க்க, அமைதியாக இருந்தார், சடகோபன்.
''அம்மா, உன் கையால சாப்பிடணும்ன்னு வந்தோம்மா.''
''ப்ச்... இவ்ளோ பேருக்கு விதவிதமா, இழுத்துப் போட்டு செய்ய உங்கம்மாவாலே முடியாதே,'' என்றார், சடகோபன்.
அப்பா நீங்களுமா என்பது போல, பார்வையோடு பேரமைதி நிலவியது.
''அதனாலென்ன சாப்பாடா முக்கியம். அதான் முடியலைன்னு சொல்றாங்களே... அப்போ, நாம நினைச்சது சரிதானே... எதுக்கு உடம்பு முடியாம வயசானவங்க தனியா இருக்கணும். மாமா நாங்க எல்லாரும் ஒரு முடிவெடுத்திருக்கோம். சொல்லுங்க சகலை,'' என்றார், பெரிய மாப்பிள்ளை.
''மாமா, இந்த வீட்டை வித்துட்டதா, சுதா புருஷன் சொன்னாரு. அதான் என்ன விஷயம்ன்னு தெரிஞ்சுகிட்டு போகலான்னு வந்தோம்,'' பட்டென்று உடைத்தாள், மருமகள்.
''அதில்லைப்பா, ரெண்டு பேருமே, 'ரிடையர்ட்' ஆகப்போறீங்க... எதுக்கு தனியா இருந்துட்டு. மூணு பேரோடையுமே நாலு நாலு மாசம் இருங்களேன்,'' என்றான், பாலு.
''ஆமாம் மாமா... பாலு சொன்னாப்புலே இருந்தா, ஊருக்கு ஊரும் பார்த்தா மாதிரியிருக்கும்; பேரன் பேத்திகளோடு பொழுதும் கழிஞ்சா மாதிரியிருக்கும். ஏய் சஞ்சு, சொல்லேன்!'' என்றார், பெரிய மாப்பிள்ளை.
''அதான் எல்லாரும் சொல்லியாச்சே. அப்பா, இதான் எங்க முடிவு. வீடு வித்த காசை மூணாப் போட்டு எங்களுக்கு கொடுங்க; அப்புறம் உங்களுக்கு சேர வேண்டிய ஆபிஸ் பணத்திலும் எங்க பங்கை கொடுத்திடுங்க. நானும், யூ.எஸ்.,ல வீடு கட்டிட்டு இருக்கேன். பணமுடையாயிருக்கு,'' என்றாள், சஞ்சலா.
எல்லாருமே ஒவ்வொரு காரணம் சொல்ல, வாயைத் திறக்கவேயில்லை, வனஜா.
வெளியில் வாங்கி சாப்பிட்டு முடித்தனர். மாலைப்பொழுது கவிழ்ந்தது.
வாசற்புறம் வனஜா யாரையோ வரவேற்பது கேட்டது.
''வாங்க சார்... ஒரு மாசத்துலே காலி பண்ணிடுவேன்!''
''இருக்கட்டும்மா. நான் மிச்சப் பணத்தை, உங்க வங்கிக் கணக்குக்கு, 'டிரான்ஸ்பர்' பண்ணிட்டேன்,'' என்று கூறி, அவர் கிளம்பி விட, மீண்டும் கூட்டம் கூடியது.
''இவர்தான் வீட்டை வாங்கியவரா... அம்மா, இது கோடிக்கணக்கில் போகுமே... எவ்வளவுக்கு விலை பேசுனேம்மா?'' என்றாள், சுதா.
''வனஜா... நாம் போற ஹோம்லருந்து மேனேஜர் பேசினார். ஒரு வாரத்திலே தயாராகிடுமாம். நடுவிலே ஒருமுறை வந்து பார்க்க சொன்னார். ஏதாவது, மாற்றம் செய்யணும்னா செய்து தரேன்னு சொன்னார்.''
''சரிங்க... இவங்க கிளம்பினதும், போய் வரலாம்.''
'என்னம்மா நடக்குது இங்கே? நீங்க ஹோம்லயா தங்கப் போறீங்க? எங்களோடு வரலையா... அப்போ பணம்?' என, ஆளாளுக்கு கேள்வி எழுப்பினர்.
''நாங்க எங்கேயும் வரலை,'' என்றார், சடகோபன்.
''அப்போ எங்க பணத்தை எங்களுக்குத் தந்திடுங்க,'' என்றான், பாலு.
''உங்க பணமா, எப்போ என்கிட்டே கொடுத்தீங்க?''
''அப்பா விளையாடாதீங்க... வீடு வித்தது, ஆபிசுலருந்து வந்தது எல்லாமே கோடியைத் தாண்டுமே... அதை மூணாப் போடுங்கப்பா,'' என்றாள், சஞ்சலா.
''அப்புறம்?''
''அப்புறமென்ன, அதான் எங்களோடு வச்சுக்கறோம்ன்னு சொல்றோமே அதைவிட என்ன வேணும்?'' என்றாள், சுதா.
''நிம்மதி வேணும். கடைசி காலத்திலாவது, எந்த அக்கு தொக்குமில்லாம, கடன் உடன் இல்லாம இருக்கணும். எதுக்கு நாங்க உங்க கூட இருக்கணும். உங்க புள்ளைகளை காவல் காக்கவா... வேலைக்காரர்களாவா?''
''என்னப்பா என்னென்னவோ பேசுறீங்க... இந்த வீடு எங்களுக்கும் சொந்தம்தானே. அது வித்த காசுலே பாத்யதை இல்லையா?'' என்றான், பாலு.
''எப்படி சொந்தம்... இது, எங்க சொந்த உழைப்புல கட்டின வீடு. இதுலே உங்களுடைய பங்கு என்ன? இதை விக்கறதோ, வைத்துக் கொள்வதோ எங்க இஷ்டம். இதுல பங்கு கேட்க நீங்க யாரு?''
''என்னப்பா... பெத்த பிள்ளைகளுக்கு, அப்பா சொத்துலே உரிமையில்லையா?''
''சொத்துல உரிமை கொண்டாடத் தெரியிற உங்களுக்கு, உங்க கடமை என்னன்னு தெரியாதா?''
''எங்க கடமையைத்தான் செய்றோம். நாங்க உங்களை எங்களோடு வச்சிக்கிடுறோம்ன்னு சொல்றோம்.''
''எப்படியெப்படி... நாலு நாலு மாசம் நாடோடி மாதிரி, 'டென்ட்' துாக்கிட்டு அலைய சொல்றியா?''
''அப்பா, எங்க வேணாலும் இருங்க. ஆனா, பணத்தை பங்கு போட்டுக் குடுங்க.''
''எதுக்கு கொடுக்கணுங்கிறது தான் கேள்வி... நானும், என் மனைவியும் வியர்வை சிந்தி வாங்கின வீட்டை வித்தாச்சு. எனக்கும், என் மனைவிக்கும் ஏற்பட்ட மருத்துவ செலவுக்காக பட்ட கடனையும் தீர்த்தாச்சு. இதுவரையிலும் நீங்க தம்பிடி காசு தந்ததில்லே. நாங்களும் கேட்டதுமில்லை.
''நாங்க ஒரு ஹோமுக்குத் தான் போறோம். நாலு பேரோடு பேசலாம். ஆன்மிகச் சுற்றுலான்னு நாலு இடம் போய் வரலாம். கல்யாணமானது முதல் உங்கம்மாவும், நானும் எங்கேயும் போனதில்லை. வனஜாவுக்கு ஆபரேஷன் ஆன சமயம் தான், எனக்கு ஞானமே வந்தது.''
''பெத்த பிள்ளைகளுக்கு பைசா தரமாட்டேன்னு சொல்ற அப்பா, அம்மாவை இப்போதான் பார்க்கிறேன்,'' என்றாள், சுதா.
''மாப்பிள்ளைகள் வந்தாலுமே, 'ஸ்விகிலே ஆர்டர் பண்ணிக்கிடுங்க'ன்னு சொன்னவங்களாச்சே உங்கம்மா,'' துள்ளினார், மாப்பிள்ளை.
''இப்போ என்னப்பா பணம் தர மாட்டீங்களா... இதை எப்படி வாங்கணும்ன்னு தெரியும். கேஸ் போட்டா, உங்க பேர் நாறிடும்,'' என்றான், பாலு.
''சபாஷ்... அப்படி சொல்லுங்க, நான் பெற்ற செல்வங்களே. இது ஒண்ணும் உங்க பாட்டன் சம்பாதிச்சது இல்லை. முழுக்க முழுக்க எங்களுடையது. ஆபிசிலிருந்து வர்ற பணமும், எங்க வியர்வைக்கானது. கேஸ் போடுங்களேன், இனிமே பேரு நாறிப் போக என்ன இருக்கு.
''பெத்த தாய், மேஜர் ஆபரேஷன் பண்ணி இருக்கிறாளேன்னு வந்து பார்த்தீங்களா... உடம்பாலோ இல்லை, பணமாகவோ தான் தந்தீங்களா? 'ஸ்விகிலே ஆர்டர்' பண்ண சொல்லிட்டேன்னு பேசறவருக்கு, கல்யாணமான தினத்திலிருந்து எத்தனை வகை சலிக்காமல் ஆக்கிப் போட்டேன். சீரு வாங்கிப் போக மட்டும் சிலுப்பிக்கிட்டு வரும் சுதாவுக்கு, அம்மா வீடு ஒரு வழிப்பாதையாத்தானே இருந்தது.
''ஏன், கல்யாணம் பண்ணி ஆறாம் மாசம் விமானம் ஏறுன என் மூத்த மகளும் - மருமகனும் தான் எட்டிப் பார்த்தாங்களா? அட, மருமகளும் என்ன குறைஞ்சவளா. விடுமுறை நாளில் அம்மா வீடு வரத் தெரிஞ்சவளுக்கு, மாமியாரை எட்டிப் பார்க்க மனசு இருந்ததா? பெத்த மகனே கிட்ட வரலை. யாரோ பெத்ததை சொல்வானேன்.
''இதுவரையும் எங்க கை சாப்பாடு தான் சாப்பிட்டிருக்கோம். இனியும் அப்படித்தான். செத்தாலும் இப்போ எல்லாம் கொள்ளி போடணுங்கிற அவசியமில்லே. ஸ்விட்சை போட்டா சாம்பல் தான். நீங்க கிளம்பலாம். எங்களுக்கு நிறைய வேலையிருக்கு,'' என்றாள், வனஜா.
அம்மாவின் இந்த விசுவரூபம் அனைவரின் வாயையும் அடைத்து விட்டது.
காலம் மாறிப் போச்சு. அம்மான்னா தன் சுயத்தை அழிச்சுக்கிட்டு மெழுகுவர்த்தியாகத்தான் உருகி நிக்கணுமா என்ன? தன் சுயத்தையும் செம்மைப்படுத்திக் கொள்வதில் தவறென்ன இருக்கு?
வனஜாவைத் தட்டிக் கொடுத்தார், சடகோபன்.
ஜே. செல்லம் ஜெரினா