ஜூன் 24, கண்ணதாசன் பிறந்தநாள்
''கவிஞர் கண்ணதாசனிடம் கண்டதும், கேட்டதும்' நுாலிலிருந்து:
நிகழ்ச்சி ஒன்றுக்காக திருச்சிக்கு புறப்பட்டார், கண்ணதாசன். சென்னையிலிருந்து திருச்சிக்கு செல்லும் நெடுஞ்சாலையில் தொழுதுார் என்ற சிறு கிராமம் குறுக்கிடும். அங்கு ரயில்வே கிராசிங் உண்டு.
அங்கே வயதான மூதாட்டிகளும், சிறுவர்களும் தலையில் சிறு பானைகள் சுமந்து, நீர் மோர் வியாபாரம் செய்து கொண்டிருப்பர்.
அவ்வழியே செல்லும்போது, காரை நிறுத்தி, முதலில் கண்ணில் தென்படும் மோர் விற்கும் ஒருவரை கூப்பிட்டு, இரண்டு குவளை மோர் வாங்கி பருகுவார், கவிஞர். காரில் உள்ள மற்றவர்களுக்கும் கொடுக்கச் சொல்வார். அவ்வளவு தான். மோர் விற்றுக்கொண்டிருக்கும் அனைவரும் அங்கு கூடி விடுவர்.
அங்கிருந்து புறப்படுவதற்கு முன், ஒவ்வொரு மோர் கலசத்திற்கும், 10 ரூபாய் வீதம் கொடுத்து அனைத்தையும், வாங்கி, காருக்கு+ள் வைக்கச் சொல்வார்.
'என்ன கவிஞரே, இந்த தண்ணீர் மோருக்கா இவ்வளவு பணம் கொடுத்தீங்க... இவ்வளவு மோரையும் என்ன பண்றது...' என்றார் வியப்போடு, கூட வந்த ஒருவர்.
'இன்னிக்கு முழுதும் வித்தாக்கூட பானை முழுவதையும் விற்க முடியாது. பாவம், இதில் தான் அவங்க பிழைப்பு நடக்குது. நாம எவ்வளவோ சம்பாதிக்கிறோம்.
10 ரூபாயை இவங்களுக்கு கொடுக்கிறதாலயா நமக்கு குறையப் போகிறது... இன்னைக்கு இவங்க எல்லாம் எவ்வளவு சந்தோஷமா இருப்பாங்க... கொஞ்சம் யோசிச்சு பாருங்க...' என்றார், கவிஞர்.
அந்த நண்பர் மீண்டும் பேசவில்லை.
இப்படி வாங்கிய மோர் வீணாவதில்லை. சாலையில் ஆங்காங்கே களைப்புடன் நடந்து வருவோருக்கெல்லாம், காரை நிறுத்தி, கொடுக்கச் சொல்வார். திருச்சி சென்றடைவதற்குள், மோர் கலசங்கள் தீர்ந்து போய் விட்டது.
'கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்' நுாலிலிருந்து:
முதன்முதலில் ஒரு பத்திரிகையில் வேலைக்கு சேர்ந்தபோது, 'உனக்கு புரூப் பார்க்கத் தெரியுமா?' என்று கேட்டனர்.
உண்மையில் எனக்கு தெரியாது. ஆனாலும், துணிந்து, 'தெரியும்...' என்று கூறி விட்டேன்.
நேரே அச்சகத்திற்கு போனேன்.
முன்பு திருத்தப்பட்ட புரூப்களைப் பார்த்தேன். உடனே, நானும் திருத்த ஆரம்பித்து விட்டேன்.
அந்த கலையில் எனக்கு வெகு நாளாக பயிற்சி இருப்பது போல், பத்திரிகை அதிபருக்கு தோன்றிற்று.
பிறகு, 'தலையங்கம் எழுத தெரியுமா?' என்றார்.
'தெரியும்...' என்றேன்; எழுதியும் விட்டேன்.
'அற்புதம் அற்புதம்...' என்றார், பத்திரிகை ஆசிரியர்.
அதன் பலன், ஆசிரியருக்கு வேலை போய் விட்டது; நான், ஆசிரியனாகி விட்டேன்.
நடுத்தெரு நாராயணன்