சிறுதானிய தினை உற்பத்தியில் இந்தியா உலகளவில் முதலிடம் வகிக்கிறது. 3000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தினை சாகுபடி செய்யப்படுகிறது. குறைவான 'கிளைசிமிக் இன்டெக்ஸ்' உள்ளதால் ரத்தத்தின் சர்க்கரையின் அளவை குறைக்கும். அதிகளவில் 'டிரிப்டோபேன்' இருப்பதால் உடலில் கொழுப்பு சேர்வதை குறைக்கிறது. எலும்பு, தசைகளுக்கு வலுவளிக்கிறது. இது 3 மாத பயிர்.
கார்த்திகை, தை, சித்திரைப்பட்டம் ஏற்றது. வேளாண் பல்கலை வெளியிட்டுள்ள கோ 6, 7 ரகங்கள் மகசூல் தரக்கூடியது. வடிகால் வசதியுடைய மணற்பாங்கான மண்வகை சாகுபடிக்கு ஏற்றது.
உழும் போது இரண்டு சால் சட்டி கலப்பையில் குறுக்கு நெடுக்காக உழ வேண்டும். ஏக்கருக்கு 5 டன் தொழுஉரம் இட வேண்டும். ஏக்கருக்கு தேவையான 4 கிலோ விதையை 10 கிலோ மணலுடன் கலந்து விதைக்க வேண்டும். விதைத்த பின் கொக்கி கலப்பை கொண்டு மீண்டும் உழ வேண்டும்.
மண்ணிலுள்ள ஈரப்பதத்திலேயே 7ம் நாளில் பயிர் முளைக்கும். மழை இல்லாத போது ஈரப்பதத்தை பொறுத்து 15 முதல் 20 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் கட்டவேண்டும். விதைத்த 20ம் நாளில் களை எடுக்க வேண்டும். அதன்பின் பயிர் வளர்ந்து நிலத்தை மூடுவதால் களை வளராது.
களை எடுத்தபின் 20, 40, 60ம் நாட்களில் 6 லிட்டர் ஜீவாமிர்த கரைசலை 60 லிட்டர் தண்ணீரில் கலந்து வயல்முழுவதும் தெளிக்க வேண்டும். தனியாக உரமிட வேண்டாம். தினையில் பூச்சிநோய் தாக்குதல் குறைவு.
மகாலட்சுமி, விதைப்பரிசோதனை அலுவலர்
லயோலா அன்புக்கரசி, சரஸ்வதி
வேளாண்மை அலுவலர்கள்,
விதைப்பரிசோதனை மையம்,
சிவகங்கை 99422 71485