நிலவுக்கு நெருப்பென்று பேர்! (21) | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
நிலவுக்கு நெருப்பென்று பேர்! (21)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2022
08:00

முன்கதைச் சுருக்கம்: இக்பால் மற்றும் ஜோஷுடன் பழக வேண்டாம் என, தீப்தி கூற கோபமடைந்தான், தருண். 'போலார் டிஸ்ஆர்டர்' நோயாளியான தருணிடமிருந்து விலகி விடுமாறு, தீப்தியிடம் எச்சரித்தார், டாக்டர் யாதகிரி.

கமிஷனர் பொய்யாமொழியின் கண்களில், கனல் பறந்தது. தனக்கு முன் உட்கார்ந்திருந்த அசிஸ்டென்ட் கமிஷனர் செழியனை, குத்தீட்டி பார்வையால் துளைத்தபடி, பேசிக் கொண்டிருந்தார்.
''மிஸ்டர் செழியன்... புவனேஷ் - முகிலா திருமணம் நடக்காம போனதுக்குக் காரணம், ஒரு சாதாரண விஷயமாகத்தான் இருக்கும்ன்னு நினைச்சேன். ஆனா, இப்ப நடந்துட்டு இருக்கிற சம்பவங்களைப் பார்த்தா, அப்படி தோணலை. இந்த கேசுக்குள்ளே விபரீதமான ஏதோ ஒரு விஷயம் இருக்கலாம்ங்கிறது என்னோட எண்ணம். நீங்க என்ன நினைக்கறீங்க?''

''இருக்கலாம் சார்!''
''என்ன இருக்கலாம்... அப்படியொரு விபரீதமான விஷயம் இருக்கப் போய்த்தான் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் கொலை செய்யப்பட்டிருக்கார். இப்போ, ஹாஸ்பிடலில், ஐ.சி.யூ.,வில் சிகிச்சை எடுத்துகிட்டு இருந்த புவனேஷுக்கு ஒரு தப்பான, 'ஐ.வி., இன்செக் ஷனை' போட்டு கொல்லப் பார்த்திருக்காங்க...
''எல்லாத்துக்கும் மேல, காணாம போன முகிலா, இந்த நிமிஷம் வரை எங்கே, எப்படி இருக்கான்னு நம்மால, கண்டுபிடிக்க முடியலை. அந்த ரெண்டு குடும்ப உறுப்பினர்களிடமும் முழுமையா விசாரணை பண்ணீங்களா இல்லையா?''
''விசாரணை பண்ணினேன், சார். புவனேஷ் - முகிலாவோடு சம்பந்தப்பட்ட நபர்கள் யாரையுமே சந்தேகப்பட முடியலை. புவனேஷின் அண்ணன் மகேந்திரன், அண்ணி சுவர்ணா, முகிலாவோட அப்பா ரத்தினம், புவனேஷோட நண்பன் தருண், இவங்க எல்லாருமே சாதுவானவங்க.''
''அதாவது, இந்த நாலு பேர் மீதும் சந்தேகப்பட முடியாத அளவுக்கு அவங்க நடவடிக்கைகள் இருக்குன்னு சொல்ல வர்றீங்க?''
''ஆமா சார். முகிலாவோட அப்பா ரத்தினம், கடந்த ரெண்டு நாளா சரியா சாப்பிடாம, துாங்காம அழுதுகிட்டே இருக்கார். நேத்து ஒரு தடவை மயக்கமாயிட்டார். அதே மாதிரி தான் புவனேஷோட அண்ணன், அண்ணியும் மனசளவில் உடைஞ்சு போய், வீட்டுக்குக் கூட போகாம, ஐ.சி.யூ.,க்கு வெளியிலேயே இருண்டு போன முகங்களோடு மணிக்கணக்கா உட்கார்ந்துட்டிருக்காங்க...
''ஐ.சி.யூ.,வில் இருந்து எந்த நர்ஸ் வெளியே வந்தாலும், அவங்க பின்னாடியே ஓடிப்போய், 'புவனேஷுக்கு எப்படியிருக்கு'ன்னு கேட்டுக்கிட்டு இருக்காங்க.
''தருணைப் பத்தி சொல்லவே வேண்டாம். தான் வேலை பார்க்கிற வங்கியில எவ்வளவு பிரச்னை இருந்தாலும், அதையும் பார்த்துகிட்டு, கிடைக்கிற நேரத்துல ஹாஸ்பிடலுக்கு வந்து, புவனேஷுக்கு வேண்டிய மருந்துகளை வாங்கிக் குடுத்துட்டு, உள்ளே போய் ஆறுதல் சொல்கிறார்... ரியலி ஹி ஈஸ் கிரேட் சார்!''
ஒரு பெருமூச்சோடு நிமிர்ந்தார், கமிஷனர் பொய்யாமொழி.
''சாரி, மிஸ்டர் செழியன். எனக்கு வேண்டியது விளக்கம் இல்லை. இந்த வழக்குல, இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் கொலை செய்யப்பட்டிருக்கார். புவனேஷைக் கொல்ல முயற்சி நடந்திருக்கு. இந்தச் சம்பவங்கள் நடக்க யார், என்ன காரணம் என்ற கேள்விக்கான பதில் மட்டுமே வேண்டும். எனக்கு எப்போ கிடைக்கும்?''
''இன்னும் ஒரு நாலைஞ்சு நாள் டைம் குடுங்க சார்!''
''ஒரு வாரமே எடுத்துக்கலாம். அடுத்த தடவை என்னைப் பார்க்க வரும்போது ஒரு உபயோகமான தகவலோடு வந்து, 'சல்யூட்' வையுங்க. நீங்க கிளம்பலாம்.''
புயலடிக்கிற உள்ளத்தோடு நாற்காலியை விட்டு எழுந்தார், செழியன்.

கோவையின் மேற்கு வானம், ரத்த சிவப்போடு ஒரு போர்க்களம் போல் தெரிய, உக்கடம் பைபாஸ் ரோட்டில் சீரான வேகத்தில் விரைந்து கொண்டிருந்தது, போலீஸ் ஜீப். பின்பக்க இருக்கையில் உட்கார்ந்திருந்த செழியன், டிரைவரின் தோளைத் தொட்டு, ''ஞானவேல்,'' என, சற்றே கனமான குரலில் கூப்பிட்டார்.
''சார்!''
''நீ சொன்ன யோசனை நல்ல பலனைக் கொடுக்குமா?''
''கண்டிப்பா கொடுக்கும் சார்!''
''அவன் பேர் என்ன?''
''நுாருல்லா சார்!''
உக்கடம் ஏரியாவின் உட்பகுதியில் இருந்த அன்பு நகரின் எல்லைக்குள், 'யூ டர்ன்' அடித்து நுழைந்தது, ஜீப்.
ஜீப்புக்குள் இருந்து எட்டிப் பார்த்தபடி, ''இந்த ஏரியா நாளுக்கு நாள் நல்லா, 'டெவலப்' ஆயிட்டு வருது இல்லையா?'' கேட்டார், செழியன்.
''ஆமா சார்... 10 வருஷத்துக்கு முந்தி இந்த ஏரியா, பார்த்தீனிய காடு மாதிரி இருக்கும். இன்னிக்கு, 'மினி சிட்டி'யா மாறிடுச்சு. இங்கே ஒரு கிரவுண்ட் நிலம் வாங்கி, வீடு கட்டணும்ன்னா, ஒரு கோடி ரூபாயாவது வேணும் சார்!''
''ஏரியாவைப் பார்த்தாலே தெரியுதே,'' என, செழியன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஜீப்பின் வேகம் குறைந்தது.
''சார்... 'ஸ்பாட்'டுக்கு வந்துட்டோம். அதோ அந்த ரோடு முனையில தெரியுதே அதுதான் நுாருல்லாவோட பானிபூரி கடை,'' என்றார், ஞானவேல்.
குனிந்து முன்புறக் கண்ணாடி வழியே பார்த்து, ''கடையில கூட்டமே இல்லையே,'' என்றார், செழியன்.
''இப்ப மணி, 7:00 கூட ஆகலை சார். இரவு, 8:00 மணிக்கு மேலத்தான், 'டாஸ்மாக்' தேசத்து குடிமக்கள், கூட்டம் கூட்டமா வர ஆரம்பிப்பாங்க. பானிபூரி வியாபாரம், 11:00 மணி வரைக்கும் ஜோராயிருக்கும்.''
வேகத்தை வெகுவாய் குறைத்து, சாலையோரமாய்ப் போய் நின்றது, ஜீப்.
''சார்... அதோ, அவன் தான் நுாருல்லா. நான் மொதல்ல போய் அவன்கிட்ட சொல்லி வைக்கிறேன். நீங்க, அஞ்சு நிமிஷம் கழிச்சு, கடைக்கு வாங்க,'' என சொல்லிவிட்டு, நுாருல்லாவின் பானிபூரி கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தார், ஞானவேல்.
ஜீப்பின் பின் சீட்டுக்கு சாய்ந்து உட்கார்ந்தார், செழியன். சரியாய் ஐந்து நிமிஷம் கழித்து, ஜீப்பிலிருந்து இறங்கி கடையை நோக்கி நடந்தார், செழியன்.
பதட்ட நடையோடு, வேகவேகமாய் எதிர்கொண்டு, ''வணக்கம் சார்,'' என, பவ்யமாய் கும்பிடு போட்டான், நுாருல்லா.
''உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.''
''வாங்க சார்.''
கடையின் உள்ளே அழைத்து போய், ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டான்.
''எத்தனை வருஷமாய் இந்த பானிபூரி வியாபாரம்?'' கேட்டார், செழியன்.
''கடந்த அஞ்சு வருஷமா சார்.''
''அதுக்கு முந்தி?''
''அதுக்கு முந்தி...''
''நான் சொல்றேன். ஒரு அரசியல் கட்சியின் ஆசீர்வாதத்தோட ரவுடியிசம் பண்ணிட்டிருந்தே. பெட்ரோல் ஊத்தி பஸ்சை கொளுத்தின குற்றத்துக்காக, நாலு வருஷம் ஜெயில்ல இருந்தே. சரியா?'' என்றார், செழியன்.
''இப்ப நான், அந்தக் கட்சியில் இல்ல சார். சிறை வாழ்க்கை எனக்கு எவ்வளவோ நல்ல விஷயங்களைக் கத்து கொடுத்தது. அதுல ஒரு விஷயம், சொந்தமா உழைச்சு சம்பாதிக்கிற காசு தான் என்னிக்குமே நிலைக்கும்ங்கிறது. அதனால தான், ஜெயில்லயிருந்து வந்ததும், இந்த இடத்துல பானிபூரி கடை போட்டேன். அல்லாவோட அருளால வியாபாரம் நல்லா போயிட்டிருக்கு சார்.''
''சரி, நான் இப்ப கேட்கிற கேள்விக்கு நீ உண்மையான பதிலைச் சொல்லணும்.''
''கேளுங்க சார்.''
''இந்த ஏரியாவில் பழைய குற்றவாளிகள் நிறைய பேர் இருக்கிறதாய் கேள்விப்பட்டேன்; உண்மையா?''
''உண்மைதான் சார்.''
''அவங்க யார் யார்ன்னு தெரியுமா?''
''ஓரளவுக்கு தெரியும் சார்... கேபிள் பாலு, வொர்க் ஷாப் காதர், சிக்கன் கடை சேது, கெத்து செல்வம், பங்க் ராபர்ட், வெல்டிங் முத்து, உக்கடம் துரை. இப்படி சிலரை மட்டும் சொல்ல முடியும் சார்!''
''இந்த ஏரியாவில் இருக்கிற பழைய குற்றவாளிகளைப் பார்க்கிறதுக்காக சில போலீஸ் அதிகாரிகள் இங்கே வர்றதாய் கேள்விப்பட்டேன். அது உண்மையா?''
நுாருல்லாவின் முகம் மாறியது.
''அது வந்து சார்...''
''இதோ பார் பொய் சொல்லக் கூடாது. நான் இங்கே வந்ததே, ஒரு முக்கியமான கேசுக்கு பின்னாடி இருக்கிற உண்மைகளைக் கண்டுபிடிக்கிறதுக்காகத் தான். நீ, இப்ப என்கிட்ட பேசப் போகிற ஒவ்வொரு வார்த்தையிலும் உண்மை மட்டுமே இருக்கணும். சொல்லு, இங்கே இருக்கிற பழைய குற்றவாளிகளை பார்க்க வர்ற போலீஸ் அதிகாரிகள் யார் யாரு?''
''எனக்குத் தெரிஞ்சு ஒருத்தர் மட்டும் தான் வருவார். ரெண்டு நாளைக்கு முன்ன கூட ராத்திரி, 8:00 மணிக்கு மப்டியில் வந்தார். பைக்கை நம்ம கடை வாசல்ல நிறுத்தி, 'உக்கடம் துரை வீடு எது'ன்னு கேட்டார்.''
செழியனின் முதுகுத்தண்டுவடம் தன்னிச்சையாய் நிமிர்ந்தது.
''அந்த போலீஸ் ஆபீசரோட பேர் தெரியுமா?''
''பேர் தெரியாது சார். ஆனா, அவர் இன்ஸ்பெக்டர்ன்னு தெரியும்.''
செழியன் தன் சட்டைப் பாக்கெட்டில் வைத்திருந்த முத்துக்குமரனின் போட்டோவை எடுத்துக் காட்டி, ''நீ பார்த்த இன்ஸ்பெக்டர் இவர் தானா?'' என்றார்.
''ஆமா சார். இவரே தான்,'' என்றான், நுாருல்லா.
''உக்கடம் துரையோட வீடு எதுன்னு காட்டினியா?''
''ஆமா சார்... இதே குறுக்கு ரோட்ல நேராப் போனா அஞ்சாவது வீடுன்னு சொன்னேன். அவரும் கிளம்பி போனார்.''
''அவர் உக்கடம் துரையைப் போய் பார்த்தாரா?''
''தெரியலை சார். ஆனா...''
''என்ன ஆனா?''
''ராத்திரி, 11:00 மணிக்கு மேல நான் கடையை மூடிட்டு வீட்டுக்குப் போகும்போது, இன்ஸ்பெக்டரோட பைக்கை, இதே ரோட்ல கடைசி வீட்டுக்கு முன்புறம் இருக்கிற வேப்ப மரத்துக்கு கீழே நின்னுட்டிருந்ததைப் பார்த்தேன்.''
''அது உக்கடம் துரையோட வீடா?''
''இல்ல சார்.''
''அப்புறம் யார் வீடு?''
''தெரியலை சார்.''
''உக்கடம் துரையோடு உனக்கு பழக்கம் இருக்கா?''
''பெரிசா பழக்கம் கிடையாது, சார். என்னிக்காவது ஒருநாள் இங்கே பானிபூரி சாப்பிட வருவார். பொதுவா ரெண்டொரு வார்த்தை பேசுவார். அவ்வளவு தான்...''
''துரையோட போன் நம்பர் தெரியுமா?''
''தெரியாது சார்.''
''யார்கிட்டே கேட்டா, அவன் போன் நம்பர் கிடைக்கும்?''
''துரை குடியிருக்கிற வீட்டு ஓனர் பழனியப்பன்கிட்ட கேட்டா, நம்பர் கிடைக்கலாம், சார்.''
''இதே ரோட்ல அஞ்சாவது வீடா?''
''ஆமா சார்.''
கடையை விட்டு வெளியே வந்து, ஐந்தாவதாய் இருந்த வீட்டை அடைந்து அழைப்புமணியை அழுத்தினார், செழியன். 70 வயது பழனியப்பன், பனியன், நாலு முழ வேஷ்டி அணிந்திருந்தார். தான் யார் என்பதை அடையாள அட்டையைக் காட்டி அறிமுகப்படுத்திக் கொண்டதும், பதட்டமடைந்தார்.
''சார், ஏதாவது பிரச்னையா?''
''பிரச்னை தான்... துரை உங்க வீட்டு மாடியில் தானே குடியிருக்கான்?''
''ஆமா சார்.''
''இப்ப மாடியில் ஆள் இருக்கானா?''
''ரெண்டு நாளைக்கு முன் வெளியே போனவன், இன்னமும் வீட்டுக்கு வரலை சார்!''
''துரையோட போன் நம்பர் தெரியுமா?''
''தெரியாது சார்... ரெண்டு மூணு தடவை கேட்டுப் பார்த்தேன், அவன் தரலை. அவனோட நடவடிக்கை சரியில்லாததால, வீட்டை காலி பண்ணச் சொல்லியிருக்கேன்.''
''சரி, இந்த ரோட்டோட கடைசியில் வேப்ப மரத்துக்கு எதிர்ல ஒரு வீடு இருக்கே... அந்த வீட்ல யார் இருக்காங்கன்னு உங்களுக்கு தெரியுமா?''
''தெரியும் சார். மூணு பசங்க குடியிருக்காங்க.''

- தொடரும்
ராஜேஷ்குமார்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X