மிரட்டும் எஸ்.ஜே.சூர்யா!
இயக்குனர் மற்றும் 'ஹீரோ' என்று பயணித்து வந்த, எஸ்.ஜே.சூர்யா, வில்லனாக நடித்த, மாநாடு படம், அவரது மார்க்கெட்டை உயர்த்தியது.
இருப்பினும், தொடர்ந்து வில்லனாக நடிப்பதில் உடன்பாடு இல்லாதவர், மீண்டும் 'ஹீரோ'வாக நடிக்க தயாராகி, தன்னை அதிரடி வில்லனாக நடிக்க வைக்க கதையுடன் முற்றுகையிடும் இயக்குனர்களிடம், 'வில்லன் வேண்டாம். 'ஹீரோ'வாக நடிப்பதற்கு கதை சொல்லுங்கள்...' என்று கேட்கிறார்.
அவர்கள் தயங்கினால், 'உங்களிடம் உள்ள அதே கதையில், ஹீரோ - வில்லன் என, நானே இரட்டை வேடம் போடுகிறேன். நீங்கள் ஏற்கனவே, ஒப்பந்தம் செய்துள்ள, 'ஹீரோ'வை கழட்டி விடுங்கள்...' என்று, வில்லன் தொனியில் பேசுகிறார்.
'கொஞ்சம் விட்டால், டைரக் ஷனும் நானே செய்கிறேன் என்று சொல்லி, நமக்கே, 'ஆப்பு' வைத்து விடுவார் போலிருக்கே...' என்று, மிரண்டு போயுள்ளனர், இயக்குனர்கள்.
— சினிமா பொன்னையா
பூஜா ஹெக்டேவை காலி பண்ணிய, பிரியங்கா மோகன்!
பூஜா ஹெக்டேவுக்கு, தெலுங்கில் நடித்த, ராதே ஷ்யாம் மற்றும் ஆச்சார்யா போன்ற படங்கள் அடுத்தடுத்து அதிர்ச்சி தோல்வியை கொடுத்து விட்டது. அதனால், புதிய படங்களுக்கு அவரை ஒப்பந்தம் செய்ய தயங்குகின்றனர், தயாரிப்பாளர்கள்.
எனவே, பூஜாவின் இடத்தை பிடித்து விடுவதற்காக, அவரை வைத்து படம் இயக்க இருக்கும் இயக்குனர்களுக்கு துாது விட்டார், ராஷ்மிகா மந்தனா. ஆனால், தமிழில் சில படங்களில் நடித்துள்ள, பிரியங்கா மோகனை, மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக தற்போது ஒப்பந்தம் செய்து விட்டனர்.
இதனால், எதிர்பாராத இன்ப அதிர்ச்சி அடைந்துள்ள பிரியங்கா மோகன், இந்த தருணத்தை பயன்படுத்தி, பூஜா ஹெக்டேயின் இடத்தை தான் பிடிக்க வேண்டும் என்று, கோதாவில் இறங்கியடிக்கத் தொடங்கி விட்டார்.
— எலீசா
அதிதி ஷங்கருக்கு, குவியும் வாய்ப்புகள்!
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளான, அதிதி ஷங்கர், கார்த்தி நடித்துள்ள, விருமன் படத்தில், கிராமத்து நாயகியாக அறிமுகமாகி இருக்கிறார். இந்தப் படத்தில் அவர் சிறப்பாக நடித்திருப்பதாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியானதை அடுத்து, தற்போது, சிம்புவுடன், கொரோனா குமார் படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார்; அடுத்தபடியாக, கவுதம் மேனன் இயக்கும் ஒரு படத்திலும் நடிக்கப் போகிறார். இவர் நடித்த, முதல் படம் திரைக்கு வருவதற்கு முன்பே, மேலும், இரண்டு படங்களில் ஒப்பந்தமாகி இருப்பது, கோலிவுட்டின் முன்னணி நடிகையருக்கு, பலத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
— எலீசா
கீர்த்தி சுரேஷுக்கு, 'கட் - அவுட்'!
குடை சாய்ந்து கிடந்த, கீர்த்தி சுரேஷின் மார்க்கெட் மீண்டும் சூடு பிடித்திருக்கிறது. குறிப்பாக, தெலுங்கு சினிமாவில், பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், மகேஷ் பாபுவுடன் இணைந்து அவர் நடித்த, சர்க்காரு வாரி பாட்டா என்ற படம், சமீபத்தில் திரைக்கு வந்தது. அப்போது, ஆந்திராவில் உள்ள, கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள், அவருக்கு, 35 அடி உயரத்தில், 'கட் - அவுட்' வைத்து பரபரப்பை ஏற்படுத்தி விட்டனர்.
பெரும்பாலும் முன்னணி, 'ஹீரோ'களுக்கு மட்டுமே ரசிகர்கள், 'கட் - அவுட்' வைத்து கொண்டாடி வரும் நிலையில், முதன் முதலாக கீர்த்தி சுரேஷுக்கும் வைத்திருப்பதால், ஆந்திராவில், பரபரப்புநாயகியாக உருவெடுத்துள்ளார்.
— எலீசா
'ரிஸ்க்' எடுக்கும், ஆர்யா!
பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்த, சார்பட்டா பரம்பரை படம், மிகப்பெரிய வெற்றி பெற்றதால், தன் மார்க்கெட் உச்சத்திற்கு போக போகிறது என்று எதிர்பார்த்தார், ஆர்யா. ஆனால், எதிர்பார்த்தபடி அவருக்கு மெகா படங்கள் எதுவும் வரவில்லை. இருப்பினும், தன், 'ஆக் ஷன் - ஹீரோ இமேஜை' தக்க வைத்துக் கொள்வதற்காக, கேப்டன் என்ற படத்தை தயாரித்து, நடித்து வருகிறார்.
அவ்வாறான படங்களை தயாரிக்க யாரேனும் முன்வராத பட்சத்தில், தொடர்ந்து தான் நடிக்கும் படங்களை தானே தயாரிப்பதற்கும் திட்டமிட்டுள்ள, ஆர்யா, 'அனல் பறக்கும், 'ஆக் ஷன்' கதைகளை யார் வைத்திருந்தாலும், உடனே என்னை அணுகலாம்...' என்று, கோலிவுட்டில் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
சினிமா பொன்னையா
சினி துளிகள்!
* விஜயுடன், தெறி, கத்தி மற்றும் மெர்சல் போன்ற படங்களில் ஜோடியாக நடித்தார், சமந்தா. மீண்டும் விஜயின், 67வது படத்திலும் 4வது முறையாக ஜோடியாக போகிறார்.
அவ்ளோதான்!