அன்புள்ள சகோதரி —
நான், 60 வயது விதவன். 34 ஆண்டு தாம்பத்யத்துக்கு பிறகு, சென்ற ஆண்டு தான், என் காதல் மனைவி கர்ப்பப்பை புற்றுநோயால் பீடிக்கப்பட்டு இறந்தார்.
எங்களுக்கு இரு மகள்கள். இருவரையும் நன்கு படிக்க வைத்தோம். இருவரும் நல்ல வேலைகளுக்கு சென்றனர். 10 ஆண்டுகளுக்கு முன், மூத்த மகளுக்கும், ஆறு ஆண்டுகளுக்கு முன், இளைய மகளுக்கும் திருமணம் செய்து வைத்தோம். இருமகள்கள் வழியாக எங்களுக்கு இரண்டு பேரன், இரண்டு பேத்திகள் உள்ளனர்.
குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப்பட்டு, அனாதை இல்லத்தில் வளர்ந்தவன், நான். அனாதை இல்லம் தான் என்னை படிக்க வைத்தது. போலீஸ் கான்ஸ்டபிள் ஆனேன்.
அனாதை இல்லத்தில் வளர்ந்த எனக்கு யார் பெண் கொடுப்பர் என்ற கேள்விக்குறியுடன், பத்திரிகையில் விளம்பரம் செய்தேன். துணிச்சலாக என் மனைவி கழுத்தை நீட்டினாள். திருமணம் செய்து கொண்டோம்.
எங்களது, 34 ஆண்டு திருமண வாழ்க்கை, ஒரு ரோலர்கோஸ்டர் பயணம் போன்றது.
காவல் நிலையத்தில் நடந்த, 'லாக் - அப்' மரணத்தில் நான், இன்னொரு கான்ஸ்டபிள் மற்றும் எஸ்.ஐ.,யும் குற்றம் சாட்டப்பட்டோம். விசாரணையில் எங்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு வேலையை இழந்தேன். ஒரு ஆண்டு கடும் காவல் தண்டனை விதிக்கப்பட்டேன்.
சிறையில் ஒன்பது மாதங்கள் இருந்த பின் விடுதலை செய்யப்பட்டேன். நான் சிறையில் இருந்தபோது, என் மனைவி இரு குழந்தைகளுடன் அல்லாடினாள். சிறுசிறு வேலைகள் செய்து குழந்தைகளை பராமரித்தாள்.
விடுதலையாகி வந்தவுடன், நான் சொந்த தொழில் துவங்க, பணமும், நகையும் கொடுத்து உதவினாள், மனைவி. இரண்டு லாரிகள் வாங்கி, ஒன்றை வாடகைக்கு விட்டேன். மற்றொன்றை நான் ஓட்டினேன். புறம்போக்கு இடத்தை பிடித்து, குடிசை வீட்டை கட்டினாள், மனைவி.
இருமுறை மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட என்னை, பிரம்மபிரயத்தனம் செய்து காப்பாற்றினாள்.
லாரிகளிலிருந்து வரும் வருமானத்தை சிறுக சிறுக சேர்த்து, ஒரு மனை வாங்கினாள். வாசலில் கடை இணைந்த வீடு கட்டினாள். அதில், மெடிக்கல் ஷாப் வைத்து கல்லா பெட்டியில் அமர்ந்தாள். மூத்த மகளுக்கு ஒருதடவை நட்டுவாக்கலி கொட்டி உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடினாள். அவளை துாக்கிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடி, உயிரை காப்பாற்றினாள்.
இளைய மகளை, 'ஈவ் டீசிங்' செய்த இளைஞனை, அடித்து துவைத்தாள். லாரிகள் பழுது பட்டால், தானே களத்தில் இறங்கி பழுது நீக்குவாள்.
என்னையும், மகள்களையும் காபந்து பண்ணி, உரிய வழிகாட்டி, கரை சேர்த்தாள், மனைவி.
அவள் ஒரு அன்பு ராட்சசி. அவளுக்குள் பத்து யானை உடல் பலமும், ஐந்து சதுரங்க வீரர்களின் மன பலமும் அடங்கியிருந்தன. அவளைக் கண்டு சமூக விரோதிகளும், கொடிய நோய்களும், விஷ ஜந்துகளும் ஓடி ஒளிந்தன.
அவள் இறந்தபோதே நானும் உடன்கட்டை ஏறி இருக்க வேண்டும். ஏனோ உயிர் வாழ்கிறேன். தொடர்ந்து ஓராண்டு யோசித்து, ஒரு முடிவுக்கு வந்துள்ளேன்.
லாரிகளை விற்றும், கையிருப்பு சேமிப்பை வைத்தும், விருப்பப்பட்டோரிடம் நன்கொடை வசூலித்தும், என் மனைவிக்கு, 50 லட்ச ரூபாய் செலவில், நான் குடியிருக்கும் வீட்டை இடித்து, கோவில் கட்டப் போகிறேன். கோவில் வாசலில் ஒரு யாசகனாக படுத்துக் கொள்வேன்.
என் மனைவியின் புகழ் உலகம் முழுவதும் பரவ வேண்டும். ஒரு அனாதையை ரட்சித்து, அவனது குற்றங் குறைகளை மன்னித்து, பூரண வாழ்க்கையை வாழ வைத்த தேவதை, அவள். என் மனைவிக்கு கோவில் கட்டும் விஷயத்தில் எனக்கு தேவைப்படும் ஆலோசனைகளை வழங்குங்கள் சகோதரி.
— இப்படிக்கு,
அன்பு சகோதரன்.
அன்பு சகோதரருக்கு —
உங்கள் மனைவி, குடும்பத்தை ஈடேற்ற செய்த தியாகம் மற்றும் பெரு முயற்சிகளை பெரிதும் பாராட்டுகிறேன். தமிழகத்திலுள்ள, 80 சதவீத மனைவியர், உங்கள் மனைவியைப் போன்றே, குடும்ப நலனுக்காக உயிரையும் பணயம் வைப்பவர்கள். ஒரு குடும்பத்தை பாதுகாத்து, முன்னேற்ற பாதையில் எடுத்து வைக்கின்றனர்.
உங்கள் மனைவிக்கு கோவில் கட்டும் முன், நீங்கள் சில விஷயங்களை அவதானிக்க வேண்டும்...
* உங்கள் மனைவி, உங்களுக்கு தான் பெண் கடவுள். உறவுகளுக்கும், நட்புகளுக்கும் அவர் சக பெண் அவ்வளவு தான். உங்கள் இரு மகள்கள் கூட, ஒரு அம்மாவாக தான் மதிப்பரே தவிர, தேவதையாக அல்ல
* கோவில் கட்டுவதை பற்றி, இரு மகள்களுடன் கலந்தாலோசித்தீர்களா? குறைந்தபட்சம் அவர்கள் அனுமதி இல்லாமல், மனைவிக்கு கோவில் கட்ட முயற்சிப்பது வீண் வேலை
* உங்கள் மனைவி உயிரோடு இருந்தால், தனக்கு கோவில் கட்டுவதையும், வாசலில் நீங்கள் யாசகராய் படுத்திருப்பதையும் விரும்ப மாட்டார். கடையை, ஒரு மகளுக்கும்; வீட்டை, ஒரு மகளுக்கும் எழுதி வைக்க விரும்புவார். சேமிப்பு பணத்தை, உங்கள் செலவுக்கு வைத்துக் கொள்ள சொல்வார்
* கோவில் கட்ட அரசின் முன் அனுமதி தேவை. அதுவும், அவ்வளவு எளிதில் கிடைக்காது.
நான் ஒரு யோசனை கூறுகிறேன்... மகள்களுக்கு உரிய பங்கை பிரித்துக் கொடுத்து விடுங்கள். உங்கள் சேமிப்பு தொகையில் ஒரு பகுதியை வைத்து, ஏழைப் பெண்களுக்கு, திருமணம் செய்து கொள்ள உதவுங்கள். மனைவியின் உருவப்படத்தை, பெரிய அளவில் பிரேம் போட்டு, தினம் வணங்குங்கள். உடல் ஒத்துழைக்கும் வரை லாரி ஓட்டும் பணியை தொடருங்கள்.
மனைவியின் ஆன்மா உங்களையும், மகள்களையும் ஆசிர்வதிக்கும். நீங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்தால், உங்கள் மனைவியின் ஆன்மா சாந்தியடையும்.
— என்றென்றும் பாசத்துடன்,
சகுந்தலா கோபிநாத்