மனமே நீ மாறி விடு! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
மனமே நீ மாறி விடு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2022
08:00

அறை வாசலில் வந்து நின்ற அம்மா, ''என்னப்பா தர்மா... இரவெல்லாம் விளக்கு எரிஞ்சுகிட்டே இருந்துச்சே. சரியா துாங்கலயாப்பா?'' என கேட்க, அந்த வார்த்தைகள், அவனுக்கு சற்று எரிச்சலை ஏற்படுத்தின.
''படுத்ததும் துாக்கம் வர்ற மாதிரியா இருக்கு என் நிலமை? போம்மா, என் வாயில தப்பா ஏதாச்சும் வந்துடப் போகுது.''
தலைகுனிந்து நகர்ந்தாள், அம்மா.
கஷ்டமாகத்தான் இருந்தது. ஏதோ கோபத்தை யாரிடமோ காட்டுகிறான். அதிலும், பாவப்பட்ட ஜீவன்கள் இந்த அம்மாக்கள். நாலு கால் வீட்டு விலங்கு போல உழைத்துவிட்டு எல்லாரிடமும் வாங்கிக் கட்டிக் கொள்ளும் பிறவிகள்.

'சாரி அம்மா, மன்னித்து விடு; நான் நானாக இல்லை. நான் யார் என்றே தெரியவில்லை, அம்மா. என் படிப்பில் என்ன குறை? கணினி, தகவல் தொடர்பு துறையில் பல்கலைக் கழகத்தில் நல்ல கிரேட் எடுத்துத்தான் முடித்தேன்; திட்டமிட்டேன்.
'நான்கு ஆண்டுகள் சிறு, பெரு நிறுவனங்களில் வேலை செய்து, அனுபவம் பெற்று சொந்தமாக தொழில் துவங்க எண்ணினேன். படிப்படியாக முன்னேறி, நாலு குடும்பங்களுக்கு உதவி செய்வது, நாலு தொழிலாளர்களுக்குத் தொழில் கற்றுத் தருவது என்று, நல்ல கனவுகள் தானே என்னுடையது!
'எல்லாம் சென்ற ஆண்டு வரை, சரியாகத்தான் போனது. எம்.என்.சி.,களில் வேலை பார்த்தேன். தொழில் சூத்திரங்கள் ஓரளவு கற்றுக் கொண்டேன். கனல் போல கனவைத் தாங்கினேன். 28 வயதில் இதோ வெளியில் வந்து விட்டேன். 'செமிகண்டக்டர்' என் விருப்ப வணிகம். அதில் சிறு தொழில் ஆரம்பிக்க ஆசைப்படுகிறேன்.
'வீட்டை ஒட்டிய முக்கால் கிரவுண்டு நிலம் போதும். என் சிறு வயதில், அப்பாவும், நீயும் வாயை வயிற்றைக் கட்டி வாங்கிய இடம். அதுதான் மூலதனம். 10 லட்ச ரூபாய் தேவைப்படுகிறது. அதுவும் மிக மிக சிக்கனமாகப் போட்ட, 'ப்ளூ பிரின்ட்!' அதை விடக் குறைவாக எப்படி தொழில் துவங்க முடியும்?
'ஆனால், அதுதான் எட்டாக்கனியாக இருக்கிறது. எத்தனையோ நிறுவனங்களில் கடனுக்காக அலைகிறேன். வட்டி விகிதம் படு பயங்கரமாக இருக்கிறது. அகலக்கால் வைப்பது எப்படி சரியாகும்? இரண்டு தங்கைகள் படிப்பு, அம்மா, பாட்டிக்கு மருத்துவம், வீட்டுச் செலவு என்று எகிறும் பட்ஜெட்டில், என் கனவு என்பதற்கு மட்டுமே எப்படி அதிக முக்கியத்துவம் தர முடியும்?
'இதோ இன்று கூட வங்கிக் கடன் பற்றியேதான் மனது அலைந்து கொண்டிருக்கிறது. கிடைத்து விடுமா, இல்லை இதுவும், ஏதோ ஒரு சாக்குபோக்கு சொல்லி, கிடைக்காமல் போய் விடுமா என்று குடைகிறதே...' என, நினைத்துக் கொண்டான்.
எதிர் வீட்டு குழந்தைகளுக்கு, பாட்டி, கதை சொல்லிக் கொண்டிருப்பது கேட்டது.
''அம்மா... அரை கப் காபி தர்றியா; தலை வலிக்குது,'' என்ற தர்மா, 'லேப்டாப்'பை மூடி வைத்து, சாய்ந்து கண் மூடினான்.
''இதோ வரேன் கண்ணு,'' என்று, பதில் வந்தது.
குழந்தைகள், கதை கதை என்று கத்தி, கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தனர்.
''சரி சொல்றேன்... ஒரு ஊர்ல ஒரு விவசாயி இருந்தார்; நல்லவர். தினம் ஒரு தங்கக்காசு தானம் பண்ணுவார். நிலம், உழவுன்னு நல்ல சுறுசுறுப்பாக இருப்பவர். ஒருநாள் அவர் மனைவி, 'ஏன் இப்படி தினம் தினம் தங்கம் தானம் பண்ணணும், எல்லாத்தையும் சேர்த்து வைத்து பெரிய அளவு ஆனதும் கொடுத்தால் வாங்குபவருக்கும் உதவியாக இருக்குமே'ன்னு சொன்னாள். அவரும் சரின்னு சொன்னார்.
''இப்படியே பல ஆண்டுகள் சேமித்து, பெரிய அளவில் தங்கக்காசுகள் சேர்ந்து போச்சு. எல்லாவற்றையும் உருக்கி, ஒரு விளாங்காய் அளவுக்கு ஆக்கி வைத்து விட்டார். அடுத்த நாளே அவருக்கு தீவிரமான உடல்நல பாதிப்பு. பேச்சு வரவில்லை. படுக்கையில் விழுந்து விட்டார்.
''மனைவியும், மகள்களும் பக்கத்திலேயே இருந்தனர். அவர் கையை உருட்டி உருட்டி காண்பிக்கிறார். அந்த தங்கத்தை தானம் கொடுங்கள் என்று சொல்ல நினைக்கிறார். ஆனால், பேச முடியலை. அம்மாவிடம், 'அப்பா என்ன சொல்ல முயற்சிக்கிறார்...' என்று கேட்கின்றனர், மகள்கள்.
''விளாங்காய் கேட்பதாக சொல்லி, வாங்கி வந்து கொடுக்கிறாள், மனைவி. தொண்டையில் சிக்கிக் கொள்கிறது, பழம். மனைவிக்கு தங்கத்தை தானம் தர விருப்பமில்லை. அதனால், தன்னை ஒழித்துக் கட்ட முடிவெடுத்து விட்டது, அவருக்குத் தெரிந்து விட்டது.
''மூச்சு விட முடியாமல் இறந்தே போகிறார். குழந்தைகளா, புரிகிறதா? யாருக்காவது எதையாவது கொடுக்க வேண்டும் என்று நினைத்தால், உடனே கொடுத்து விட வேண்டும். எதற்கும் அச்சப்படவோ, தயங்கவோ கூடாது. சரியா?'' என்றாள், பாட்டி.
குழந்தைகள் சந்தோஷத்துடன், ''கதை, சூப்பர் பாட்டி,'' என்று கத்தி கூச்சலிடும்போது, அவன் மொபைல் போன் அழைத்தது.
எண்களைப் பார்த்தான், வங்கி மானேஜர்.
''ஹலோ, வணக்கம்... குட் மார்னிங்... சொல்லுங்க சார்,'' என்றான்.
''வணக்கம் தர்மராஜ்... உங்க கடன் விண்ணப்பத்தை பரிசீலித்து, 'ஹப்'ல, ஐந்து லட்சம் வரைக்கும் கடன் வழங்கலாம்ன்னு சொல்றாங்க.''
''என்ன சார் சொல்றீங்க, அஞ்சு லட்சமா? மை குட்னஸ்... 10 லட்சம் சார். அதுவே ரொம்ப ரொம்ப கம்மி; கஷ்டப்பட்டு இழுத்துப் பிடிச்சு கொண்டு போகணும். ப்ளீஸ், கொஞ்சம், 'கன்சிடர்' பண்ணுங்க சார்.''
''இல்லை மிஸ்டர் தர்மராஜ்... இது எங்க முடிவு இல்ல, இன்னென்ன தொழில், இன்னென்ன கடன் தொகைன்னு, 'ஹப்' முடிவு பண்ணும்.''
''அங்க இருக்கறவங்களும் மனுஷங்கதானே சார். உங்களுக்கே தெரியும், இப்ப உலகம் முழுக்கவே கம்ப்யூட்டர் சிப் தட்டுப்பாடு இருக்கே. உற்பத்தி நிறுவனங்கள், சந்தைகள்னு பாதிக்குதே. 'ஆட்டோமொபைல், ஹெட்போன், மானிடர்'னு எத்தனையோ எலக்ட்ரானிக்ஸ் பொருட்களில் நாம் பயன்படுத்துற சிப், இப்போ பயங்கர தட்டுப்பாட்டுல இருக்கு.
''இப்ப இந்த, 'செமிகண்டக்டர்'ல நம் நாடும் இறங்கப் போகுது. நானும் அதைத்தான் செய்யப் போறேன். நிச்சயம் நல்ல லாபம் தரும் சார்.''
''ஓ.கே., தர்மராஜ்... என் கையில் எந்த முடிவும் இல்லே; அவங்க, குழுவா வேலை பண்றாங்க. அஞ்சு லட்சம் தான் இந்த, 'புராஜெக்ட்'டுக்கு தரலாம்ன்னு சொல்றாங்க.''
''அய்யோ, இல்ல சார், பத்தவே பத்தாது. நீங்க, எந்த நிபுணர்களிடமும் விசாரிக்கலாம். எரிபொருள் அளவு, 'சென்சார், டிஜிட்டல் ஸ்பீடாமீட்டர், நேவிகேஷன் சிஸ்டம்'ன்னு, எத்தனையோ இடங்கள்ல, 'செமிகண்டக்டர்' பயன்படுது. முதலீடு அதிக அளவில் தேவை சார்.''
''இல்ல, இதுக்கு மேல என்னால எதுவும் சொல்ல முடியாது, தர்மராஜ். அஞ்சு லட்சம் கடன் வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கு. வந்து வாங்கிக்கலாம், 'செக்லிஸ்ட்' அனுப்பறேன்; மத்தபடி உங்க இஷ்டம்,'' என, போனை வைத்து விட்டார்.

'காலம் ஏன் இவ்வளவு கடுமையாக இருக்கிறது? அடர்ந்த காட்டில் நோய்களும், விலங்குகளும் அச்சுறுத்துவது போல ஒரு வாழ்க்கை. நான் அப்படி என்ன கேட்கிறேன்? படிப்பு, அனுபவம் மற்றும் மாநிலம் பயனுற வாழும் கனவு இருக்கிறது, அது மெய்ப்பட வேண்டும். அதற்கு ஆரம்ப முதல் வேண்டும். ஏன் இவ்வளவு முட்டுக்கட்டைகள்...
'இதை வைத்து என்ன செய்ய முடியும்?
50 லட்சம் ரூபாய்க்கான, 'புராஜெக்ட்' அது. பத்து கேட்பதே குறைவு தான். ஆனால், கொஞ்சம் தெம்புடன் ஆரம்பிக்க முடியும். 'சிலிக்கான், ஜெர்மானியம், கேலியம்' என்பவை பற்றி, அடிப்படை தெரியுமா?
'இவர்களுக்கு, 'இன்சுலேஷன்' என்றால் என்ன, 'கண்டக்டர்' மற்றும் 'இன்சுலேஷன்' இரண்டிற்குமான இணைப்பு என்ன என்ற அறிவியல் தெரியுமா? எதை வைத்து தொழிலின் தேவையை இவர்கள் தீர்மானிக்கின்றனர்?
'மேலும், 'சாலிட் ஸ்டேட் மெட்டீரியல்' என்ற தொழில்நுட்பம் எப்படி வேலை செய்கிறது என்பது தெரிந்தால் தான், அதன் செலவும், உற்பத்தியும் பற்றி கொஞ்சமாவது அறிந்து கொள்ள முடியும். சே... வெறும் ஐந்து லட்சத்தை வைத்து என்ன செய்வது?' என, வருந்தினான்.

பாட்டியும், சிறுமியரும் உற்சாகக் குரல் எழுப்பும் ஒலி கேட்டது. கதை சொல்ல ஆரம்பித்தாள், பாட்டி...
''பெரிய மலை அது. உச்சியில் புத்தர் கோவில். ஒரு ஜென் துறவி நடந்து, மலையடிவாரம் வந்து விட்டார். நன்கு இருட்டி விட்டது. மலை நல்ல உயரம். அப்போது தான், அங்கே ஒரு இளைஞன் பாறை மேல் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தார். அவனும் இவரைப் பார்த்து விட்டான். அவன் கையில் ஒரு டார்ச் இருந்தது.
''இவரைப் பார்த்து கவலையுடன், 'பெரியவரே... இந்த மலை மிகப் பெரியது. 1,000 அடி ஏற வேண்டும்...' என்றான். அதற்கு, 'ஆம், உண்மை தான். பெரிய மலை தான். அதனால் என்ன?' என்றார். அவன் திகைத்து, 'இப்போது கடும் இருள். என் கையில் இருக்கும் டார்ச் வெறும், 5 அடி துாரம் தான் வெளிச்சம் தரும். எப்படி 1,000 அடி இருட்டில் ஏற முடியும்?' என்றான்.
''அவர் புன்னகைத்தார். 'என்ன பெரியவரே, நான் சொன்னதில் என்ன தவறு?' என்றான். 'தம்பி... 5 அடி வெளிச்சத்தில் நடந்து கொண்டே இருக்கலாம். ஆரம்பிக்கணும், அதுதான் முக்கியம். எவ்வளவு துாரம் வெளிச்சம் வருமோ வரட்டும். அதில் உன் கவனத்தை செலுத்து. எல்லா உயரத்தையும் சின்னச் சின்ன அடிகளால் தான் கடக்க வேண்டும். ஏணியின் படிகள் சிறியதாகத்தானே இருக்கும்? அதே தான். இந்த 5 அடி துாரம் வெளிச்சம் தரும் டார்ச் போதும்; 5,000 அடி கூட கடக்கலாம்...' என்றார்.
''அவனுக்குப் புரிந்து விட்டது. குட்டீஸ்களா, உங்களுக்குப் புரிந்ததா?'' என்று சிரித்தார், பாட்டி.
சட்டென கண்களைத் திறந்தான், தர்மராஜ். வானம் திடீரென, 1,000 நட்சத்திரங்களுடன் மின்னுவது போலிருந்தது. பால்வெளி கண்டத்தில் ஒரு விண்மீனாக நீந்துவது போல உற்சாகம் பிறந்தது.
''அம்மா... சூடா, இனிப்பா காபி கொடும்மா,'' என்றான், தர்மராஜ்.

வி. உஷா

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X