வாழ்வு மகத்தானது...
அரசாங்க வேலை தேடி
ஆலாய் பறப்பதை விட
அன்றாட வேலைகள் செய்து
ஆனந்தமாய் வாழ்வது சிறந்தது!
அலங்கார கடைகள் அமைத்து
அதிக விலை பெறுவதை விட
நடைபாதை கடைகள் அமைத்து
நல்லுறவு வளர்ப்பது நலமானது!
முட்டி, மோதி, முறைத்து
முகஞ்சுழித்து செல்வதை விட
சங்கடங்கள் தீர்த்து
சந்தோஷமாய் வாழ்வது சரியானது!
பிரித்து, திரித்து பேசி
பெருமையில் மிதப்பதை விட
நிதானத்தில் நிலைநிறுத்தி
நிம்மதியாய் வாழ்வது நிரந்தரமானது!
தம்பட்டம் அடித்து
தலைக்கனத்தில் நடப்பதை விட
அமைதியில் அரவணைத்து
அன்பாய் வாழ்வது அழகானது!
வெறுப்புகளை விதைத்து
உறவுகளை ஒதுக்கி வாழ்வதை விட
வேண்டியவைகளை விட்டுக்கொடுத்து
விருப்பத்தோடு வாழ்வது விவேகமானது!
கட்டளை போட்டு
கடமைகள் செய்வதை விட
இன்பத்தை இரவல் கொடுத்து
இனிமையாய் வாழ்வது இதமானது!
மகுடம் சூட்டி
மன்னனாய் வாழ்வதை விட
மனம் விட்டு பேசி
மக்களோடு மக்களாய் வாழ்வது மகத்தானது!
க. அழகர்சாமி, கொச்சி