பந்தயக் குதிரை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2022
08:00

''அர்ஜுன், எழுந்திரு. மணி, 6:00 ஆகப் போகிறது. இன்னிக்கு, 7:00 மணிக்கு நீச்சல் வகுப்பு இருக்கு. சீக்கிரம் தயாராகு,'' என்று, மகனை எழுப்பினாள், லக்ஷ்மி.
''அம்மா, ப்ளீஸ்... இன்னிக்கு ஒருநாள் வகுப்புக்கு போகலைன்னா என்ன? எனக்கு ரொம்ப தலை வலிக்கிறது,'' முனகினான், அர்ஜுன்.
''இன்னும் ஒரு வாரத்தில், 'ஸ்விம் மீட்' இருக்கு. பயிற்சியை தவிர்க்க கூடாது. எழுந்து தயாராகு,'' என்றார், அப்பா முகுந்த்.
முனகியபடியே எழுந்த அர்ஜுனுக்கு, தலை பாரமாக இருந்தது. வேறு வழியேயில்லை. போய்தான் ஆக வேண்டும். எப்படியோ முயற்சி செய்து, பயிற்சி போட்டியில் இரண்டாவதாக வந்தான்.

''உனக்கு, இன்னிக்கு உடம்பு சரியில்லை. பரவாயில்லை. முதலாவதாக வந்திருந்தால் நன்றாய் இருந்திருக்கும்,'' என்றாள், லக்ஷ்மி.
'உடம்பு சரியில்லாமல் இருந்தும் நீ இரண்டாவதாக வந்தாயே. எனக்கு பெருமையாய் இருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் எப்படியிருக்கும்...' என, நினைத்துக் கொண்டான், அர்ஜுன்.
பயிற்சி முடிந்து வீட்டிற்கு வந்ததும், 'மாத்ஸ் ஒலிம்பியாட்' எனும் கணிதப் போட்டிக்கு தயார் செய்ய உட்கார்ந்தான். கொஞ்சம் துாங்கினால் தலைவலி குறையுமோ என்று யோசிக்கும் முன்பே, ''அர்ஜுன், 'மாத்ஸ் ஒலிம்பியாட்' பயிற்சியை ஆரம்பிச்சியா? அடுத்து, பியானோ டீச்சர் வருவார்,'' என்றாள், லக்ஷ்மி.
பன்னிரெண்டு வயதான, ஏழாம் வகுப்பு மாணவன், அர்ஜுன்; அபாரமான மூளை, வகுப்பிலே எப்போதும் முதல் தான். நீச்சல், பியானோ என, எல்லா போட்டியிலும் முதல் பரிசு தான். அவனை ஓட ஓட விரட்டினர், பெற்றோர். தங்கள் மகனைப் பற்றி எப்போதும் பெருமை அடித்துக் கொள்வர்.
'இவர்களுக்கு மக்காய் ஒரு குழந்தை பிறந்திருந்தால் என்ன செய்திருப்பர்?' என, நினைத்துக் கொள்வான், அர்ஜுன். ஆங்கிலத்தில் இந்த குணமுடைய பெற்றோரை, 'டைகர் பேரன்ட்ஸ்' என்று சொல்வர். லக்ஷ்மியும், முகுந்தும் இந்த ரகம் தான்.

சில சமயம் உடைந்து போவான், அர்ஜுன்.
தேர்வு முடிவுகள் தெரிந்தவுடன், 'அப்பா, கணக்கில் 98 மார்க் வாங்கியிருக்கேன்...' என்பான்.
'மீதி இரண்டு மார்க்கை எங்கே விட்டே?' என்பார், முகுந்த்.
அர்ஜுனுக்கு கோபம் வரும். ஓலமிட்டு கத்த வேண்டும் போல இருக்கும். வகுப்பில் முதல் மார்க், 98. இதற்கெல்லாம் ஒரு சபாஷ் இல்லை. இவர்கள் என்னதான் எதிர்பார்க்கின்றனர்!

வகுப்பில் எல்லா மாணவர்களும் மைசூருக்கு சுற்றுலா கிளம்பினர்.
''அம்மா, 'டூருக்கு' பெயர் கொடுக்க இன்னிக்குதான் கடைசி நாள். நாலைந்து பேரைத் தவிர, எல்லாருமே போறாங்க. ப்ளீஸ்... சரி என்று சொல்லுங்கள்,'' என, கெஞ்சினான் அர்ஜுன்.
''அர்ஜுன், ஒருதரம் சொன்னா புரிஞ்சுக்கோ. அடுத்த வாரம், 'மாத்ஸ் ஒலிம்பியாட்' தேர்வு வருகிறது. 'டூர்' போயிட்டு வந்து உடம்பு சரியில்லாமல் போனால், எப்படி தேர்வை எழுதுவாய்? விடுமுறை விட்டதும் நாம் போகலாம்,'' என்றாள், லக்ஷ்மி.
''நண்பர்களுடன் போறதும், அப்பா, அம்மா கூட போறதும் ஒண்ணா? எல்லாரும் ஜாலியா போறாங்க,'' என்று இழுத்தான், அர்ஜுன்.
''இதுதான் இறுதி பதில். இனிமேல் வாக்குவாதம் செய்யாதே,'' என, கோபத்துடன் கூறினார், முகுந்த்.
அர்ஜுனுக்கு அழுகை வந்தது. அழுதால் அதற்கு ஒரு, 'லெக்சர்' கிடைக்கும். வாய் திறக்காமல் நகர்ந்தான். அன்று அவனுக்கு துாக்கமே வரவில்லை.
'இது என்ன வாழ்க்கை. சதா சர்வ காலமும் ஏதாவது போட்டியில் பரிசு வாங்கணும். இவர்கள் அனுப்பும் வகுப்புகளுக்கெல்லாம் பிடிக்கலைன்னாலும் போகணும். எனக்குன்னு விருப்பங்களே இருக்கக் கூடாதா?' என, கவலைப்பட்டான். கடைசியில் அவனையும் மீறி, துாக்கம் தழுவியது.

இரண்டு நாட்கள், சோகமாக இருந்தும், அவனுடைய பெற்றோர் சமாதானப் படுத்துவதாய் இல்லை. மறுநாள் காலை, காலியாக இருந்த பக்கத்து வீட்டில், நடமாட்டம் தெரிந்தது. பெரிய லாரியில் சாமான்கள் வந்து இறங்கின.
ஜன்னல் வழியாக பார்த்த லக்ஷ்மி, ''பக்கத்து வீட்டுக்கு புதுசா குடிவந்திருக்காங்க. யாருன்னு தெரியலை,'' என, முகுந்தனிடம் கூறினாள்.
''தானா தெரியப் போகுது. என்ன அவசரம்?'' என்றார், முகுந்த்.
''அப்பா, என் வயசுல ஒரு பையன் கூட இருக்கான்,'' என்றான், அர்ஜுன்.
''உனக்கு சரியான ஜோடி தான். ஆனால், உன் படிப்போ, மற்ற போட்டிகளோ பாதிக்கபடக் கூடாது. கவனமாக இரு,'' என்றார்.
பத்து நாட்கள் பறந்தன. அன்று காலை செடிக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த போது, பக்கத்து வீட்டு பெண் வெளியே வருவதைப் பார்த்து, ''ஹலோ... என் பெயர் லக்ஷ்மி,'' என்று, அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
''என் பெயர் லலிதா,'' என, அழகாக சிரித்தாள், அந்தப் பெண்.
இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
''என் மகன் தேஜசுக்கு, 10 வயதாகிறது. உங்கள் மகன் படிக்கும் பள்ளியில் தான் படிக்கிறான்,'' என்றாள், லலிதா.
''நாளைக்கு ஞாயிற்றுக் கிழமைதானே. மதியம், 'லஞ்ச்'க்கு உங்க குடும்பத்துடன் வாங்களேன்,'' என்றாள், லக்ஷ்மி.
''கட்டாயம். நம் கணவர்களும் சந்திக்க இது ஒரு வாய்ப்பு,'' என்றாள், லலிதா.

மறுநாள் மதியம் லலிதாவும், அவள் கணவரும் வந்தனர். கம்ப்யூட்டர் கம்பெனியின் உரிமையாளராக இருந்தார், லலிதாவின் கணவர், விஜய். அந்தஸ்தில் முகுந்தனும் குறைந்தவனில்லை. சிறிது நேரம் பொது விஷயங்களை பேசினர். அர்ஜுனைக் கூப்பிட்டு அறிமுகப்படுத்தினர்.
''தேஜஸ் எங்கே? அர்ஜுன், அவனைப் பார்க்க ரொம்ப ஆவலாய் இருக்கான்,'' என்றாள், லக்ஷ்மி.
''வகுப்பு மாணவர்களுடன், 'டூர்' போயிருக்கான், தேஜஸ். வர நான்கு நாளாகும்,'' என்றாள், லலிதா.
''அவன் படிப்பு, பியானோ வகுப்பு எல்லாம், 'மிஸ்' ஆகாதா?'' என்றாள், லக்ஷ்மி.
''அதெல்லாம் வந்தவுடன் பார்த்துப்பான். என்னதான் நாம் அழைத்துப் போனாலும், நண்பர்களுடன் போனால் அந்த ஜோரே தனி,'' என்றாள், லலிதா.
''பியானோ, நீச்சல், படிப்பு எல்லாவற்றிலும், எங்கள் அர்ஜுன் தான், 'பர்ஸ்ட்!' அவன் டாக்டர் ஆகணும்ன்னு எங்களுக்கு ஆசை,'' என்றார், முகுந்த்.
''நாங்கள் தேஜஸை எதற்கும் வற்புறுத்துவதில்லை. அவனுக்கு எந்தக் கலையில், எந்த படிப்பில் விருப்பமோ, திறமை இருந்தால் அதில் முன்னேற ஊக்குவிப்போம். முக்கியமாக, வாழ்க்கையை அவன் ரசித்து வாழணும். அதனால், அவனுக்கு எந்த விதமான அழுத்தமும் குடுக்கறதில்லை,'' என்றார், விஜய்.
''அப்படி விட்டால் முழுத் திறமையையும் ஒரு சிறுவனால் எப்படி உபயோகப்படுத்த முடியும்? பெற்றோரின் கண்காணிப்பு இருந்தால் தான், விளையாட்டுத் தனம் போகும்,'' என்றார், முகுந்த்.
''ஓரளவு உண்மை தான். இருந்தாலும், குழந்தைகளை அதிகமாக துரத்திக் கொண்டே இருந்தால், வெறுப்பு தான் வளரும்; விட்டுப் பிடிக்க வேண்டும். அவர்கள் பந்தயக் குதிரைகள் இல்லை. தேஜசுக்கு டென்னிசில் ஆர்வம் அதிகம். தனியாக பயிற்சி கொடுக்கிறோம். அவன், ஸ்டேட் ஜூனியர் சாம்பியன்,'' என்றாள், லலிதா.
ஒரு மாற்றமும் இல்லாமல் நாட்கள் ஓடின. தேஜசும், அர்ஜுனும் நெருங்கிப் பழகினர். தேஜசுக்கு கிடைத்திருக்கும் சுதந்திரத்தை எண்ணி ஏங்கினான், அர்ஜுன். ஆனால், அப்பா - அம்மா நம்முடைய நன்மைக்காகதானே சொல்கின்றனர் என்று சமாதானப்படுத்திக் கொண்டான்.

பத்து நாட்கள் கழித்து, லலிதாவின் வீட்டிற்கு விருந்தினர் வந்தனர்.
''என் தங்கை குடும்பம் வந்திருக்கிறது. நீங்கள் எல்லாரும் சாப்பிட வாங்களேன்,'' என்று லக்ஷ்மியை அழைத்தாள், லலிதா.
மறுநாள், முகுந்தன், லக்ஷ்மி மற்றும் அர்ஜுன் மூவரும் லலிதாவின் வீட்டிற்கு சென்றனர். தன் தங்கையை அறிமுகப்படுத்தினாள், லலிதா. சாப்பிட்ட பின், அர்ஜுனும், தேஜசும் விளையாடச் சென்றனர். எப்போதும் போல் முகுந்தனும், லக்ஷ்மியும் அர்ஜுனின் புகழ் பாடினர். லலிதாவின் தங்கையும், அவள் கணவனும் புன்சிரிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தனர்.
''உங்களுக்கு ஐந்து வயது மகன் இருப்பதாக லலிதா சொன்னாள். எங்கே அவனைக் காணோம்,'' என்று கேட்டாள், லக்ஷ்மி.
''உள்ளே இருக்கிறான்,'' என்றாள், தங்கை.
''அவனும் தேஜசைப் போல விளையாட்டு வீரனா?'' கேட்டாள், லக்ஷ்மி.
''அவன், 'ஸ்பாஸ்டிக் சைல்ட்!' இப்ப கொஞ்ச நாளாதான், அவனே பல் தேய்க்கிறான், தானே குளிக்கிறான். அவனை சிறப்பு பள்ளியில் சேர்த்திருக்கோம். இதுதான் அவனோட சாதனைகள். அவனை ஒரு நல்ல மனிதனாக ஆளாக்குவது தான், எங்கள் குறிக்கோள்,'' என்று கூறிய, லலிதாவின் தங்கையின் கண்களில் நீர் நிறைந்தது.
லக்ஷ்மிக்கு பேச்சே வரவில்லை. சிறிது நேரம் கழித்து வீடு திரும்பினர்.
''அம்மா, எனக்கு நீச்சல் வகுப்பிற்கு போக நேரமாயிடுச்சு. யாரோட போகணும், நீயா, அப்பாவா?'' என்றபடி அறைக்குள் நுழைந்தான், அர்ஜுன்.
''ராத்திரி இருமிக் கொண்டே இருந்த, முடியலேன்னா இன்னிக்கி போக வேண்டாம்,'' என்றாள், லக்ஷ்மி.
''ஆமாம், நீ ஒலிம்பிக் ரேசுக்கா போகப் போறே. எப்போதும் முதலாவதாக வரணும்ன்னு அவசியமில்லை,'' என்றார், முகுந்த்.
''அப்பா, தேஜசை வரச் சொல்லட்டுமா? நாங்கள் ஒரு விளையாட்டுக்கு, 'புரோக்ராம்' தயார் செய்யறோம்,'' என்றான், அர்ஜுன்.
''தாராளமாக கூப்பிடு,'' என்ற முகுந்தனை விநோதமாகப் பார்த்தான், அர்ஜுன்.
அவன் காதுகளையே அவனால் நம்ப முடியவில்லை.
''நிஜமாகவா? நான் தேஜசைக் கூப்பிடப் போறேன்,'' என்று ஓடினான், அர்ஜுன்.
ஒரு நல்ல புத்திசாலியான, ஆரோக்கியமான குழந்தையை கொடுத்ததற்கு கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருந்தனர், அர்ஜுனின் பெற்றோர்.

பானு சந்திரன்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
26-ஜூன்-202211:05:18 IST Report Abuse
Girija முடியலடா சாமி .................
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X