மாமிச உணவு சாப்பிடுபவர்களுக்கு, பெருங்குடல் கேன்சர் பாதிக்கும் அபாயம் அதிகம் இருப்பதாக பல்வேறு ஆய்வுகளும் உறுதி செய்கின்றன.
பெருங்குடலில் உள்ள வெளிப்புற அடுக்கான, 'எபிதீலியல்' அடுக்கில் உள்ள செல்கள் அல்லது திசுக்களை இணைக்கும் செல்களில் கேன்சர் பாதிப்பு வரலாம். பொதுவாக வரும் கேன்சர் பாதிப்புகளில், இரண்டாவது இடத்தில் இருப்பது பெருங்குடல் கேன்சர்.
அதிலும், உலகம் முழுதும் இளம் வயதினர் மிக அதிகமாகவே இந்த வகை கேன்சரால் பாதிப்புக்கு ஆளாகின்றனர். பெருங்குடலில் உள்ள, 'பாலிப்ஸ்' எனப்படும் மூலச் செல்களான ஸ்டெம் செல்களில் முதலில் உருவாகி, அதன் பின் பெருங்குடல் முழுதும் பரவுகிறது.
பெருங்குடலில் கேன்சர் பாதிப்பு ஏற்பட பல காரணிகள் உள்ளன... அவற்றில் மிக முக்கியமானது, மாமிசம் அதிகம் சாப்பிடுவது, உடல் பருமன், கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள், ரத்த நாளங்களில் ஏற்படும் நாள்பட்ட அழற்சி, புகைப் பழக்கம், கட்டுப்பாடற்ற சர்க்கரை கோளாறு போன்றவை.
மரபியல் காரணிகளாலும் பெருங்குடல் கேன்சர் வரலாம்.
உணவில் இருந்து உடலுக்கு தேவைப்படும் நீர், சோடியம், பொட்டாசியம் போன்ற மிகவும் அவசியமான தாதுக்களை உறிஞ்சுவது, நொதித்தல் மூலமாக நல்ல பாக்டீரியாக்களை உருவாக்குவது...
மலக் கழிவுகளை சேகரித்து வெளியேற்றுவது, பொட்டாசியம், குளோரைடு, ஹைட்ரஜன், பை கார்பனேட் போன்ற அயனிகளை உருவாக்குவது, யூரியா மறு சுழற்சி, உணவில் இருந்து நுண்ணுாட்டச் சத்துக்களை பிரிப்பது போன்ற அத்தியாவசியமான பல வேலைகளை செய்கிறது பெருங்குடல்.
கேன்சரை எப்படி தவிர்க்கலாம்?
தினசரி உடற்பயிற்சி, கால்ஷியம் சத்து நிறைந்த உணவை தினமும் சாப்பிட்டு, சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்துவது, அதிக விட்டமின்கள், செலினியம், போலிக் அமிலம், அதிகப் படியான நார்ச்சத்து உணவில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்; இவை, காய்கறிகள், பழங்களில் அதிகம் உள்ளது.
டாக்டர் பரிந்துரைக்கும் பட்சத்தில், 'ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்டரோன்' ஹார்மோன் சிகிச்சை எடுப்பது, ஸ்டிராய்டு இல்லாத அழற்சியை ஏற்படுத்தாத மாத்திரைகளை சாப்பிடுவது பலன் தரும்.
அறிகுறிகள் எப்படி இருக்கும்?
ஆரம்ப கட்ட பாதிப்பின் போது எந்த அறிகுறியும் வெளியில் தெரியாது என்பதால், கண்டுபிடிப்பது சிரமம். பொதுவான அறிகுறி என்பது வயிற்றில் ஏற்படும் வலி.
இதுவும் நபருக்கு நபர் மாறுபடும். மலம் கழிக்கும் பழக்கத்தில் ஏற்படும் மாற்றம், ரத்தம் கசிவது, உடல் எடை குறைவது, பசியின்மை, பலவீனம், ரத்த சோகை, வயிற்றில் கட்டிகள் ஆகியவை தென்படலாம்.
நோய் முற்றிய நிலையில் குடலில் அடைப்பு அல்லது துளை ஏற்படலாம். அருகில் உள்ள மற்ற உறுப்புகளுக்கு பரவும் வாய்ப்பும் உள்ளது.
பெருங்குடல் கேன்சரை அறிந்து கொள்ள, பயிற்சி பெற்ற டாக்டரிடம் முழுமையாக 'கோலோனோஸ்கோபி' செய்வது தான் மிகச் சிறந்த பரிசோதனை.
இது தவிர, 'பயாப்சி' எனப்படும் பாதித்த இடத்தில் இருந்து சிறு சதையை எடுத்து கேன்சரை உறுதி செய்வது. 'சி.டி., ஸ்கேன், எம்.ஆர்.ஐ., ஸ்கேன்' இரண்டும் கல்லீரல், நிணநீர் கட்டி, மூளை போன்ற உடல் உள்ளுறுப்புகளில் பரவி இருக்கிறதா என்பதை அறிய உதவும்.
ஆரம்ப நிலையில் கண்டறிந்தால், 'எண்டோஸ்கோபி' அறுவை சிகிச்சையே போதுமானது. கேன்சர் முற்றிய நிலையில் அறுவை சிகிச்சை, 'ரேடியோ தெரபி, கீமோ தெரபி' என்று அனைத்தும் ஒருங்கிணைந்து தேவைப்படலாம்.
எந்த சிகிச்சை என்றாலும், நோயாளியை முழுமையாக பரிசோதனை செய்து, அவரின் உடல் நிலையை தெரிந்து, அதற்கேற்ப சிகிச்சை செய்ய வேண்டியது முக்கியம்.
தவிர்க்க என்ன செய்யலாம்?
சிகரெட், மதுப் பழக்கத்தை அறவே தவிர்க்க வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, அதிக கொழுப்பு உணவுகளை சாப்பிடக் கூடாது.
தினமும் 7 - 8 மணி நேரம் துாக்கம், காய்கறி, பழங்கள் அதிகம் உணவில் சேர்ப்பது, 'ஆன்டி ஆக்சிடென்ட், புரோபயாடிக்' அதிகம் உள்ள தயிர், புளிக்க வைத்த மாவில் இட்லி போன்றவற்றை அதிகம் சாப்பிடலாம். இவையெல்லாம் கேன்சரை தடுப்பதற்கான பல வகையான பாதுகாப்பு அம்சங்கள்.
தேவைக்கு ஏற்ப அவ்வப் போது பரிசோதனை செய்வது, பெருங்குடல், மலக்குடல், மலவாய் கேன்சரை துவக்கத்திலேயே கண்டறிந்து, சிகிச்சை பெற உதவியாக இருக்கும்.
டாக்டர், என்.தினகரன்
முன்னாள் பேராசிரியர்,
சென்னை மருத்துவக் கல்லுாரி,
சென்னை.
98411 51599