திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு, அரசு உயர்நிலைப் பள்ளியில், 1969ல், 10ம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம்...
தமிழ் ஆசிரியர் ராம்தாஸ், உருவத்திலும், குணத்திலும் உயர்ந்தவர். இலக்கண பாடங்களை சிரித்த முகத்துடன் புரியும் வகையில் உதாரணங்களுடன் விளக்குவார். பாடங்களை எல்லா மாணவர்களையும் வாசிக்க சொல்லி, புரிய வைப்பார்.
சொற்களை ஏற்ற இறக்கத்துடன் நான் வாசிப்பதை புன்னகையுடன் ரசிப்பார். வாசித்து முடித்தவுடன், 'உச்சரிப்பு மிகச் சிறப்பாக உள்ளது...' என்று பாராட்டுவார். அன்று, பாட வாசிப்பில் நெகிழ்ந்து, 'நிச்சயம் தமிழ் பேராசிரியராக, கல்லுாரியில் பணி புரிவாய்...' என, வாழ்த்தி உற்சாகப்படுத்தினார். அது மனதில் விழுந்து ஆழமாக வேர் ஊன்றியது.
தமிழ் மொழியில் ஆர்வம் காட்டி படித்தேன். அதன் பலனாக சிறுகதை, கவிதைகள் எழுதும் பயிற்சி பெற்றேன். பல ஏடுகளில் என் படைப்புகள் வெளிவந்தன. ஆறு நாவல்கள் எழுதும் திறன் பெற்றேன். அவற்றை பிரசுரம் செய்ய முயற்சிக்கவில்லை.
என் வயது, 68; தமிழக வருவாய் துறையில் துணை ஆட்சியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். கதை, கவிதைகள் எழுத உற்சாகப்படுத்தி, மாணவ பருவத்திலே கனவுகளை வளர்த்த அந்த ஆசிரியரை என்றும் மறவேன்!
- செல்லம் பிள்ளை, தேனி.
தொடர்புக்கு: 94423 63860