மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 2015ல், 8ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அந்த ஆண்டில் குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் இயற்கை எய்தினார். துக்கம் அனுசரிக்க நான்கு நாட்கள் விடுமுறை தரப்பட்டது.
அந்த நாட்களில், அறிவை மேம்படுத்த வழிவகைகள் செய்தார், வகுப்பாசிரியை கீதாஞ்சலி. பள்ளியில் நடந்த அஞ்சலி கூட்டத்தில் மாணவர்களை அமர வைத்து, 'கலாம் பற்றி அறிந்த, அறியாத தகவல்கள் அன்றாடம் நாளிதழ்களில் வரும். அவற்றை சேகரித்து, செய்தி தொகுப்பு ஒன்றை உருவாக்க வேண்டும்; அந்த தகவல்களை கொண்டு, சிறப்பாக கட்டுரை வடிப்போருக்கு பரிசு வழங்கப்படும்...' என, ஒரு போட்டி அறிவித்தார்.
அந்த நான்கு நாட்களும் நான் வாங்காத நாளிதழ்களே இல்லை. முழு வகுப்பும், தகவல் திரட்டுவதில் ஆர்வமாய் ஈடுபட்டது. பிரசுரமான செய்தி, படங்களை தொகுத்தோம். அதில் பெற்ற தகவல்களால் கட்டுரையை உற்சாகமாக எழுதி வழங்கினோம். நான்கு நாட்களில் மூளைக்கு பரிசாக ஏராளமான தகவல்கள் கிடைத்திருந்தன.
விடுமுறை முடிந்து, வழக்கம் போல் வகுப்புக்கு சென்றதும், 'யாருக்கு முதல் பரிசு' என, ஆர்வத்துடன் காத்திருந்தோம். அனைவருக்கும் பரிசு அறிவித்தார் ஆசிரியை. தொடர்ந்து, தலைவர்கள் மறைந்த, பிறந்த நாட்களில், தகவல் சேகரித்து கட்டுரை எழுதுவதை வழக்கமாக கொண்டோம். இது கல்வி தரத்தை மேம்படுத்தியது.
தற்போது, என் வயது, 21; கல்லுாரியில் படிக்கிறேன். தகவல் சேகரிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திய ஆசிரியைக்கு நன்றியை சமர்ப்பிக்கிறேன்.
- சி.கண்ணப்பன், மதுரை.
தொடர்புக்கு: 93442 00549