தேனி மாவட்டம், கம்பம், புதுப்பட்டி சி.எஸ்.ஐ.பள்ளியில், 1965ல், 3ம் வகுப்பு படித்தபோது வகுப்பு ஆசிரியையாக இருந்தார், மேரி மனோகரன். மாலையில் டியூஷன் கற்க, அவர் வீட்டுக்கு சென்று வருவேன்.
அன்று, கடையில் சில பொருட்கள் வாங்கி வரச் சொன்னார். வாங்கி கொடுத்ததும், 'நீ போலீஸ் பணிக்கு தான் போவாய்...' என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் கூறியதை அசைப்போட்டபடியே இருந்தது மனம்.
அப்போதைய பிரபல நடிகர் எம்.ஜி.ஆரை ஒரு முறையாவது நேரில் பார்த்து விட வேண்டும் என அடங்காத ஆசை எனக்கு இருந்தது. அதற்கு காரணம், போலீஸ் சி.ஐ.டி., வேடத்தில் படங்களில் அவர் நடித்து கொண்டிருந்தது தான்.
ஆசிரியை சொன்னபடி, போலீஸ் பணியில் சேர்ந்தால் எம்.ஜி.ஆரை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணம் மேலோங்கியது. பள்ளிக்கல்வியை முறையாக முடித்தேன். பின், தீவிரமாக முயன்று பயிற்சி எடுத்து போலீஸ் பணியில் சேர்ந்தேன். கோவைக்கு வந்த, முதல்வர் எம்.ஜி.ஆரை அருகில் பலமுறைப் பார்த்து மகிழ்ந்தேன்.
என் வயது, 66; காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணி புரிந்து ஓய்வு பெற்றேன். இந்த பணியில் சேர துாண்டுகோலாக இருந்த அந்த ஆசிரியையை மனதில் கொண்டுள்ளேன்.
- தே.மாதவராஜ், கோவை.
தொடர்புக்கு: 98422 97733