முன்கதை: கல்வி சுற்றுலாவுக்கு தஞ்சை பெரிய கோவில் வந்த பள்ளி மாணவி கீதாவை, செவ்வாய் கிரகவாசி தீயாள் மயக்கி சுரங்கத்தில் இறக்கினாள். அவளை பின் தொடர்ந்த மாணவன் குகனிடம், கீதாவை காப்பாற்ற துாண்டி, செவ்வாயில் நடந்த கதையை கூற ஆரம்பித்தாள், சின்னச்சிட்டு. இனி -
செவ்வாய் கிரக சின்னச்சிட்டு மேலும் தொடர்ந்தாள்...
'கெடுமதியுள்ள மந்திரவாதியிடம் பயிற்சி பெற்றாள் தீயாள். பூமியில் உள்ளது போல், வயதில் முதிர்ந்தவர், செவ்வாய்கிரகத்தில் தலைவராக முடியாது... இளம் தலைமுறையே தலைமை ஏற்க முடியும். அதனால் தான், மாற்று ஏற்பாடாக, வெற்றி பெற்றவர் நினைத்தால், விரும்பும் ஒருவரை, தலைவராக நியமித்துக்கொள்ளலாம் என்ற விதியை கொண்டு வந்தார்...
'செவ்வாய் கிரகநாதர் அங்கு இல்லாத போது, இளைஞர்கள் தான் இந்த கிரகத்தை ஆட்சி செய்து வந்தனர். இந்த முறை, தலைவர் பதவிக்கு ஒரு கொடியவன் போட்டியிட்டான். அவனால், பந்தயத்தில் வெற்றி பெற இயலாது...
'அதனால் ஒரு வீரச்சிறுமியை வெற்றி பெற வைத்து, அவளின் நியமன உத்தரவு வழியாக தலைவனாக நினைத்தான்... அதற்காக, தயார் படுத்தப்பட்டவள் தான் சிறுமி தீயாள்; அவள் பெயரில் நெருப்பு இருக்கும்.
'குணத்தில் அவள் தீயவளாக இருந்தாள். அவளுக்கும், எனக்கும் தான் கடும் போட்டி. தீயாள் யார் என்றும், அவளுக்கு பயிற்சி கொடுப்பது யார் என்றும் தெரிந்து கொண்டனர் மக்கள்...
'பயிற்சி கொடுத்த மந்திரவாதி எம் கிரக வாசியே அல்ல; செவ்வாய்க்கு அடுத்துள்ள, மிக மிக குட்டி கிரகவாசி. மாய மந்திர வலைக்குள் தீயாளை சிக்க வைத்தான்.
'செவ்வாய் நாதர் அனைத்தும் அறிந்தவர். ஆனாலும், 'போட்டி முடிந்த பின் பார்க்கலாம்' என்று அமைதியாக இருந்து விட்டார்.
'அன்று போட்டி ஆரம்பமானது. நானும், தீயாளும் மட்டும், கிரகத்தை சுற்றி பார்க்க அனுமதிக்கப்பட்டோம். விரைவாக ஓடியபடி சுற்றி வந்து, கிரகத்தில் கண்ட வினோதத்தை எடுத்துக் கூற வேண்டும் என்பது தான் விதி...
'அதன்படி ஓடினேன்; ஆனால், தீயாளுக்கு பயிற்சியளித்த மந்திரவாதி பறக்கும் சக்தியை அவளுக்கு கொடுத்திருந்தான். அதனால் பறந்து சென்றாள். இப்படி செய்வது குற்றம். அவள் விதியை மீறுவதை அறிந்தும் நம்பிக்கையை தளர விடவில்லை நான்... ஓடியபடியே இருந்தேன். அதிவேகமாக பறந்தபடி, காற்றோடு சென்றாள் தீயாள். வெற்றி பெறும் நோக்கில் பதற்றத்துடன் பறந்த தீயாளுக்கு, கிரகத்தில் நடந்திருந்த அதிசயத்தை காணும் வாய்ப்பு கிட்டவில்லை.
'ஆம்... பூமியில் இருந்து, தரை இறங்கியிருந்த செயற்கைகோளை கவனிக்காமல் பறந்தாள் தீயாள். ஆனால், நிதானமாக வந்த நான், அதை கண்டு விட்டேன். அந்த செயற்கைகோளில் ஏறி வேகமாக செலுத்தினேன். ஒரு வினோத பொருளைக் கண்டால், அதை பயன்படுத்தி தலைவரிடம் வரலாம் என விதி இருக்கிறது. அதன்படி, செவ்வாய் நாதர் முன் வந்து நின்றேன்...
'நீண்ட நேரம் பறந்த தீயாளுக்கு எந்த அதிசயமும் தெரியவில்லை. பின் மந்திரவாதி அறிவுறுத்தலால் உண்மை அறிந்து தரை இறங்கினாள். தோற்று விட்டதை அறிந்து கடும் கோபமுற்றாள். விழிகளால் என்னை எரித்து விட நினைத்தாள். செவ்வாய் நாதர் அருளால் தப்பி பிழைத்தேன்.
'நான் ஓட்டி வந்த செயற்கை கோளை அனைவரும் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். பூலோக வாசிகளின் அறிவுத்திறனை வியந்தனர்; உருவாக்கியவர்களை போற்றி பாராட்டினார் எங்கள் தலைவர். பின், கிரகத்தை ஆளும் அருகதை பெற்றவளாக என்னை அறிவித்தார். தோல்வியை ஏற்க முடியாமல் அழுதாள் தீயாள்...
'பொல்லாத மந்திரவாதி ஏமாற்றமடைந்தான்.
'பூலோக வாசிகளால் தான் தோல்வி ஏற்பட்டது. அவர்களை பழி வாங்காமல் விட மாட்டேன். பூமியில் நன்கு படிக்கும் சிறுமியரை கடத்தி, என் கிரகத்துக்கு அழைத்து வந்து சித்திரவதை செய்வேன்' என சபதம் செய்தான்...
'இது செவ்வாய் கிரக நாதர் அருளால் எனக்கு தெரிய வந்தது. அந்த மந்திரவாதி செயல்களை முறியடிக்க உத்தரவிட்டார் செவ்வாய் நாதர்.
'பூலோக சிறுமியைக் கடத்த அனுமதிக்க கூடாது...' என கட்டளை இட்டார்.
'செவ்வாய் கிரக நாதர் அருளால் பெரும் சக்தியை பெற்றேன். மந்திரவாதியின் எண்ண ஓட்டத்தை அறியும் சக்தியும், அதை முறியடிக்கும் வழியும் எனக்கு கற்றுத்தரப்பட்டது. செவ்வாய் நாதர் வாரிசாக என்னை அறிவித்த போது, மக்கள் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை.
'மிக பெரிய கிரகம் எங்களுடையது... பல வளங்கள் உடையது; இந்த கிரகத்தை ஆண்டால், அவ்வளவு செல்வம், அதிகாரம் கிடைக்கும். அதற்கு ஆசைப்பட்டுத் தான் மந்திரவாதி தீயாளை துாண்டி திட்டமிட்டான். தோல்வி அடைந்ததால் தீயாளை பூமிக்கு அனுப்பி, சிறுமி கீதாவை கடத்தியுள்ளான்.
'எனக்கு பெரும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளதால், அந்த மந்திரவாதியின் தீய செயல்களை முறியடிக்க வேண்டியவளாக இருக்கிறேன்... அதற்காக செவ்வாய் நாதரிடம் அருள் பெற்றேன். தீயாளின் நடவடிக்கையை முறியடிக்க பூமிக்கு வந்தேன். புறப்படும் முன், புத்திசாலி பூதபகவானிடம் செவ்வாய் கிரகப் பொறுப்பை ஒப்படைத்தேன். என் மன ஓட்டத்தை புரிந்து, அதற்கு ஒப்புதல் அளித்தார் தலைவர்...'
இப்படி, செவ்வாய் கிரகத்தில் நடந்த பழைய கதையை விவரித்துக்கொண்டிருந்தாள் சின்ன சிட்டு.
- தொடரும்...
ஜி.சுப்பிரமணியன்