முன்பு திருமண பத்திரிகைகளில், தேவதைகள் சிலர், மாங்கல்யத்துடன் பறப்பது போன்று அச்சிடுவர். இந்த மாங்கல்ய தேவதைகள், உத்திர நட்சத்திரத்தன்று அதிக பலம் பெறுவர். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர், மாங்கல்ய முனிவர்.
அகத்தியர் - லோபமுத்ரா, வசிஷ்டர் - அருந்ததி ஆகியவர்களின் திருமணத்தை நடத்தி வைத்தவர், இவர். அம்மி மிதித்து, அருந்ததி பார்க்கும் சடங்கு, இன்று வரை நம்மிடம் இருக்கிறது. அந்த அருந்ததிக்கே திருமணம் செய்து வைத்த பெருமைக்குரிய இந்த முனிவரை வணங்கினால், பெண்களுக்கு மாங்கல்ய பலம் அதிகரிக்கும். இவர், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே, இடையாற்று மங்கலம் மாங்கல்யேஸ்வரர் கோவிலில் அருள்பாலிக்கிறார்.
ஜூலை 6ல், ஆனி உத்திரம் திருநாள் வருகிறது. இவ்வாண்டில் வரும், ஆனி உத்திரம் மிக மிக விசேஷமானது. ஏனெனில், இந்த நட்சத்திரத்தின் அதிபதியான சூரியனுக்குரிய சப்தமி திதியுடன் இணைந்து, இந்நாள் வருகிறது. நட்சத்திர அதிபதியும், திதி நாயகரும் ஒன்றாக இருப்பது அபூர்வம்.
ஜாதகத்தில் சூரிய தசை மற்றும் சூரிய புத்தி நடப்பவர்கள், சூரியனை இந்நாளில் வணங்கி, தோஷம் நீங்கப் பெறலாம். கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரத்தை கொண்டவர்களும் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற, இவ்வாண்டு ஆனி உத்திர நாளில், இந்தக் கோவிலுக்கு சென்று வரலாம்.
இந்த மூன்று நட்சத்திரத்திற்கும் சூரியனே அதிபதி. உத்திரத்துடன் சஷ்டி திதி சேர்வது இன்னும் விசேஷம். அந்த அதிர்ஷ்டமும் இம்முறை கிடைத்துள்ளது. ஏனெனில், ஜூலை 5, காலை, 8:05 மணிக்கே ஆனி உத்திரம் துவங்கி. ஜூலை 6, காலை, 8:39 மணி வரை இருக்கிறது. ஜூலை 5 அன்று சஷ்டி திதி. அன்று காலையில், சிவனையும், மாலையில், முருகனையும் வழிபடுவது மாங்கல்ய பாக்கியத்தை மேலும் அதிகரிக்கும்.
பார்வதியைத் திருமணம் செய்ய, சிவன் தேர்ந்தெடுத்த நட்சத்திரம் உத்திரம். சிதம்பரத்தில், ஆனி உத்திரத்தன்று, நடராஜருக்கு அபிஷேகம் நடக்கிறது. இவ்வூரில், ஆனி உத்திரத்தன்று குழந்தைகள் பிறந்தால், அவர்கள் இல்லத்தில் கொண்டாட்டமாக இருக்கும். ஆண் குழந்தை பிறந்தால், நடராஜரே தங்கள் இல்லத்துக்கு வந்திருப்பதாகவும், பெண் குழந்தை பிறந்தால், சிவகாமி அன்னையே வந்ததாகவும் எண்ணி மகிழ்வர்.
இடையாற்று மங்கலம் மாங்கல்யேஸ்வரர் கோவிலுக்கு, உத்திர நட்சத்திரத்தன்று, அமிர்த யோக நேரத்தில், மாங்கல்ய முனிவர் வருவதாக நம்பிக்கை. அவர், மாங்கல்யேஸ்வரர் மற்றும் மங்களாம்பிகையை வணங்கி, அந்நேரத்தில் அங்கு வரும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் அளிக்க வேண்டும் என, வேண்டுவார்.
ஆனியில் வரும் உத்திர நட்சத்திரம் சிறப்புடையது. அது, அமிர்த யோகத்துடன் கூடி வருகிறது என்பதால், இங்கு அவசியம் சென்று வாருங்கள்.
திருச்சியிலிருந்து - லால்குடி, 22 கி.மீ., இங்கிருந்து, 5 கி.மீ., சென்றால், இடையாற்று மங்கலத்தை அடையலாம்.
தி. செல்லப்பா