கமிஷனுக்கு ஆசைப்பட்டு இப்படி செய்யலாமா?
உறவினர் ஒருவர், தனக்கு சொந்தமான இடத்தை பல லட்ச ரூபாய்க்கு விற்றார். அச்சமயம், உறவினர் வீட்டிற்கு, கார் ஷோரூம் ஒன்றின் ஊழியர்கள் சிலர் வந்து, 'சார், கார் வாங்கற ஐடியா இருக்கிறதா...' என, கேட்டனர்.
'இப்போது, ஐடியா எதுவும் இல்லை...' என்றதும், விசிட்டிங் கார்டு மற்றும் கார் குறித்த தகவல்கள் அடங்கிய புத்தகம் ஒன்றை தந்து, புறப்பட்டனர்.
'நம்மிடம் பணம் இருப்பது, இவர்களுக்கு எப்படி தெரிந்தது...' என்ற யோசனை வரவே, 'நாங்கள், நிலம் விற்றது உங்களுக்கு எப்படி தெரியும்...' எனக் கேட்டோம்.
'எங்கள் மேனேஜர் தான், உங்களை போய் பார்க்கச் சொன்னார். வேறு எதுவும் எங்களுக்கு தெரியாது...' என்றனர்.
'நிலம் விற்று, பணம் வைத்திருப்பதாக யாரிடமாவது கூறினீர்களா?' என, உறவினரிடம் கேட்டதற்கு, 'இல்லை...' என்றார்.
பிறகு, அந்த கார் ஷோரூம் நிர்வாகிக்கு போன் செய்து, விபரம் கேட்டோம். முதலில் கூற மறுத்தவர், பிறகு, 'பத்திரம் பதிவு செய்யும் இடத்தில் உள்ள நபர் ஒருவர், முகவரி, போன் எண், பண விபரம் போன்றவைகளை தந்தார். இதுபோன்று நிறைய பேருடைய விபரங்களை எங்களுக்கு கூறுவதை, அவர் வாடிக்கையாகக் கொண்டுள்ளார். இதற்காக, அவருக்கு கமிஷன் கிடைக்கும்...' என்றார்.
அதிர்ச்சியடைந்த நாங்கள், அந்த நபரை பற்றி விபரம் கேட்டு, அங்கு விரைந்தோம்.
'இப்படி, கமிஷனுக்காக, பண விபரம், முகவரி, போன் எண் தருவது சரியா? இதை திருடர்களுக்கு தர மாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம். இது போன்ற வேலையை இத்தோடு நிறுத்தி கொள்ளுங்கள்...' என, அந்த நபரை எச்சரித்து விட்டு வந்தோம்.
இப்படி பணம் வைத்திருக்கும் தகவலை அம்பலப்படுத்துவதால், திருட்டு நடக்கவும், உயிர் சேதம் ஏற்படவும், அதிக வாய்ப்பு இருக்கிறது. லஞ்சத்திற்கும், கமிஷனுக்கும் அடிமையானவர்கள் ஒரு போதும் திருந்த மாட்டார்கள். ஆகவே, நம் பண பரிமாற்றங்கள், பிறருக்கு தெரிகிற பட்சத்தில், அதை தகுந்த பாதுகாப்புடன் வைத்துக் கொள்வது நல்லது.
மகேஷ் அப்பாசுவாமி,
பனங்கொட்டான் விளை,
கன்னியாகுமரி.
'லஞ்சம் வாங்கினால் ஆயுசு குறையும்!'
எங்களுடன் காலையில் நடைப்பயிற்சிக்கு வரும் ஒருவருக்கு, 80 வயதுக்கு மேல் இருக்கும். ஒல்லியான தேகம். விடு விடுவென நடப்பார். அவருடன் போட்டி போட்டு, எங்களால் நடக்க முடியாது.
ஒருநாள், அவருடைய ஆரோக்கியத்தின் ரகசியம் குறித்து கேட்டேன்.
'நான் அஞ்சல் நிலையத்தில் நேர்மையாக வேலை பார்த்ததன் காரணமாக, மக்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்ளவில்லை. இதனால், உடல் ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியான மன நிலையிலும், பணி ஓய்வு பெற்று, குழந்தைகளை நல்ல இடங்களில் மண முடித்துக் கொடுத்து, நிறைவான வாழ்க்கை வாழ்கிறேன்.
'ஊரை அடித்து உலையில் போடும் அரசு ஊழியர்கள் பலர், ஓய்வுக்கு முன்போ அல்லது ஓய்வு பெற்ற ஓரிரு ஆண்டுகளிலோ அல்பாயுசில் இறந்து விடுகின்றனர். குடும்பத்தில் அமைதி இல்லாமல், நோய் நொடியால் அவதிப்படுகின்றனர். அதற்கு, அவர்களின் பணிக்காலத்தில் செய்த பாவமே காரணம்...' என்றார்.
இவர் சொல்வதிலும் அர்த்தம் உள்ளது என்று நினைத்துக் கொண்டேன். உடல் நலத்துடன் நிம்மதியாக வாழ வேண்டுமா, லஞ்சம் வாங்காதீர்!
— வெ. ஆசைத்தம்பி, தஞ்சாவூர்.
கைத்தொழில் வாழ வைக்கும்!
சில மாதங்களுக்கு முன், என் உறவினரின் மனைவியுடன் பேசும்போது, 'கூலி வேலைக்கு போகும் கணவரின் வருமானம், குடும்ப செலவுகளுக்கு போதவில்லை. போதாக்குறைக்கு, மகள் திருமணத்திற்காக வாங்கிய கடன் வேறு, குடும்ப நிம்மதியைக் குலைத்து, மன உளைச்சலோடு வாழ்கிறோம்...' என, கண் கலங்கினார்.
'நம் கை, கால்களை மிஞ்சிய மூலதனமோ, சொத்தோ, இந்த உலகத்தில் வேறு எதுவுமே இல்லை. நம்பிக்கையை கைவிட வேண்டாம்...' என்று தைரியம் அளித்து, கூடுதல் வருமானத்திற்கு உதவக்கூடிய, ஒரு மாற்று யோசனையை செய்யுமாறு ஆலோசனை கூறினேன்.
சமீபத்தில், அவரை சந்தித்தபோது, மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்.
'எனக்கு, நன்றாக கொழுக்கட்டை செய்யத் தெரியும் என்பதால், அவற்றை தயார் செய்து, டவுனில் உள்ள தேனீர் கடை, ஹோட்டல், பேக்கரி மற்றும் ஸ்வீட் ஸ்டால்களில் விற்பனைக்கு தர ஆரம்பித்தேன்.
'வீட்டு முறையில் தயாரிக்கப்பட்டவை என்பதால், பலரும் விரும்பி வாங்குகின்றனர்; வீட்டிற்கும் வாங்கிச் செல்கின்றனர். இதனால், விற்பனை அதிகரிக்கவே, துவக்கத்தில் தனியாக மட்டும் தயாரித்த கொழுக்கட்டைகளை, இப்போது உதவிக்கு சில பெண்களை வேலைக்கு வைத்து தயாரிக்கிறேன்.
'எதிர்பார்த்ததை விட அதிக வருமானம் கிடைக்கிறது. சில பெண்களின் குடும்ப வருமானத்திற்கும் உதவியாக இருந்து, எங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது...' என்று, தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
'கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்; கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்' என்று, சும்மாவா சொன்னார்கள்.
எஸ். அலமேலு, கள்ளக்குறிச்சி.