வி.சி. கிருஷ்ணரத்னம், காட்டாங்குளத்துார்: 'குஷ்புவிற்கு கோவில் கட்டும்போது, எம்.ஜி.ஆருக்கு கட்டினால் என்ன?' என, தி.மு.க., அமைச்சர், துரைமுருகன் கேட்கிறாரே...
தான் ஒரு எம்.ஜி.ஆர்., ரசிகன் என்பதை சொல்லாமல் சொல்கிறார்!
* எம். செந்தில்குமார், சென்னை: ரயில் சேவைகள் தனியாருக்கு கொடுப்பதால் யாருக்கு நன்மை?
பயணியருக்கு முதல் நன்மை... குறிப்பிட்ட நேரத்திற்கு, ரயில்கள் வந்து செல்லும், சுத்தமாக இருக்கும், ஒதுக்கப்படும் இருக்கைகள் கண்டிப்பாக கிடைக்கும்! இரண்டாவதாக, மக்களுக்கு நன்மை... அரசுக்கு நஷ்டம் இல்லாமல் போகும்! இதுபோல், நஷ்டத்தில் இயங்கும் அனைத்து துறைகளையும் தனியார் மயமாக்கலாம்!
க. நாகராஜன், பறக்கை, குமரி: திடீரென காலமான, 'குமுதம்' வார இதழின் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் பற்றி...
'குமுதம்' ஆசிரியரும், அதன் முதலாளியுமாக இருந்த, அண்ணாமலையிடம் பயிற்சி பெற்றவர்... சிறந்த, 'எடிட்டர்!' ஒரே ஒருமுறை என்னை சந்திக்க, நம் அலுவலகத்துக்கு அவரை அழைத்து வந்திருக்கிறார் எழுத்தாளர் ரஜத்... அப்போது பார்த்தது தான்!
* ஆர். சுப்பு, திருத்தங்கல்: கேரளாவில், 66 வயதான பாலியல் குற்றவாளிக்கு, அம்மாநிலத்தின், இடுக்கி மாவட்ட விரைவு நீதிமன்றம், 81 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளதே... அதை அனுபவிக்க அவருக்கு ஆயுள் இருக்குமா?
இதைப் போல தான், பல நீதிமன்ற தீர்ப்புகளும் உள்ளன... கயிற்றில் தொங்க விடாமல், இப்படி தீர்ப்பளிப்பது, தமாஷாகவே உள்ளது!
ஜி. அர்ஜுனன், அவிநாசி, திருப்பூர்: பழங்குடி இனத்தை சேர்ந்த, திரவுபதி முர்மு, குடியரசு தலைவர் வேட்பாளராக, பா.ஜ., அறிவித்து இருக்கிறதே...
வரவேற்கப்பட வேண்டியது தான்! ஆனால், பழங்குடி இனத்திற்காக குரல் கொடுப்பதாக கூறும் எதிர்க்கட்சியினர், ஆதரவு கிடைக்குமா என்பது சந்தேகம் தான்!
வி. பார்த்தசாரதி, சென்னை: தமிழகத்தில், 10ம் வகுப்பு பொது தேர்வில், தமிழ் பாடத்தில் நிறைய மாணவர்கள், தோல்வி அடைந்துள்ளனரே... இது, எதைக் காட்டுகிறது?
'தமிழ் வாழ்க...' எனக் கூறி வரும், ஆளும், தி.மு.க.,வினரின் தமிழ் பற்றை காட்டுகிறது!
எம். கல்பா, நெல்லை: எந்த வயதில், கார் ஓட்டப் பழகினீர்?
எட்டாம் வகுப்பு படிக்கும்போது, என் தகப்பனாரின் ஓட்டுனர், ஆறுமுகம், 'அம்பாசிடர்' காரை ஓட்டச் சொல்லி கொடுத்தார்... ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது, நான் காரை ஓட்டுவதை, அப்பா பார்த்து விட்டார்... அப்போது, வீட்டிலிருந்த புளிய மர கொப்பை ஒடித்து, என் கணுக்காலில் இரண்டு முறை அடித்து, 'லைசென்ஸ் வாங்கிய பின் தான் காரை எடுக்க வேண்டும்...' என்று கட்டளை இட்டார்! (நான் கேட்டு இருப்பேனா?)