நிலவுக்கு நெருப்பென்று பேர்! (22)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2022
08:00

முன்கதை சுருக்கம்: உக்கடம் துரை குடியிருந்த வீட்டு உரிமையாளர் பழனியப்பனிடம் விசாரித்தார், ஏ.சி.பி., செழியன்-

செழியனின் இரண்டு புருவங்களும் ஒரு சேர உயர்ந்தன.
''என்னது மூணு பசங்களா?''
''ஆமா சார்...'' என்றார், பழனியப்பன்.
''அவங்களைத் தவிர வேற யார் எல்லாம் அந்த வீட்ல இருக்காங்க?''
''வேற யாரும் இருக்கிற மாதிரி தெரியலை, சார். காலைல, மூணு பேரும் வேலைக்கு புறப்பட்டு போவாங்க. இரவு, 8:00 மணிக்கு திரும்புவாங்க. சில நாட்களில் வீடு பூட்டியே இருக்கும். அவங்க யார் கூடவும் பேசி, நான் பார்த்ததில்லை. கொஞ்சம் ரிசர்வ்ட் டைப்.''
''அவங்க பேர் என்ன... இதே ஊரைச் சேர்ந்தவங்களா?''
''அந்த விபரமெல்லாம் எனக்குத் தெரியாது சார்.''
''சரி வாங்க... அந்த வீட்டுக்குப் போய்ப் பார்க்கலாம்.''
''ஒரு நிமிஷம்,'' என்று சொல்லி, வீட்டுக்குள் சென்று சட்டையை மாட்டி வந்த பழனியப்பன், ''வாங்க சார் போகலாம்,'' என்றார்.
''இதே தெருவுல குடியிருக்கீங்க, அது எப்படி அந்த மூணு பேரை பத்தியும் தெரிஞ்சுக்காம இருக்கீங்க?'' கேட்டார், செழியன்.
''சார்... நான் ரயில்வேயில், டெப்டி சீப் இன்ஜினியராய் வேலை பார்த்து ஓய்வு பெற்றவன். மூணு வருஷத்துக்கு முந்தி தான் இந்த ஏரியாவில் வீடு கட்டி, குடி வந்தேன். வீட்ல
நானும், மனைவியும் மட்டும்தான் இருக்கோம். பொண்ணும், பையனும் வெளிநாட்ல இருக்காங்க.
''எனக்கு உடம்பு கொஞ்சம் முடியாததினால வீட்டை விட்டு அதிகம் வெளியே வர்றதில்லை. பொதுவா, இந்த தெருவுல யார் யார் குடியிருக்காங்கன்னு தெரியுமே தவிர, அவங்களைப் பத்தின முழு விபரங்கள் எனக்குத் தெரியாது.''
இரண்டு பேரும் பேசிக்கொண்டே அந்த வீட்டை நெருங்கினர்.
''பங்களா டைப் பெரிய வீடு தான்,'' சொல்லிக்கொண்டே காம்பவுண்ட் சுவர் பக்கம் போய் உள்ளே எட்டிப் பார்த்தார், செழியன்.
ஒட்டுமொத்த பங்களாவும் அரையிருட்டில் சிக்கியிருக்க, ஒரே ஒரு ஐந்து வாட்ஸ் எல்.இ.டி., விளக்கு மட்டும், வெளிச்சப் பொட்டாய் போர்டிகோவின் மேற்கூரையில் ஒட்டியிருந்தது.
''சார்... வீட்ல யாரும் இல்ல போலிருக்கு. போர்டிகோவில் எப்படியும் ரெண்டு கார் நின்னுட்டிருக்கும். இப்ப கார் எதுவும் இல்லை. காம்பவுண்ட் கதவு வேற பூட்டியிருக்கு,'' என்றார், பழனியப்பன்.
''அவங்க வேலைக்கு போயிட்டு, 8:00 மணிக்குத்தான் வருவாங்கன்னு நீங்க சொன்னீங்க; காத்திருந்து பார்ப்போம். இன்ஸ்பெக்டர் முத்துக்குமரனின் பைக், இந்த பங்களாவுக்கு முன்னாடியிருக்கிற வேப்ப மரத்துக்கு கீழே ராத்திரி, 11:00 மணி வரைக்கும் நின்னுட்டு இருந்ததாய், பானிபூரி கடை நுாருல்லா சொன்னது, ஒரு முக்கியமான தகவல்.
''அந்த மூணு பேரைப் பார்க்கக்கூட முத்துக்குமரன் வந்து இருக்கலாம். அவங்களை விசாரிச்சாத்தான் முத்துக்குமரனுக்கு என்ன நடந்ததுங்கிற உண்மை வெளியே வரும்,'' செழியன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பழனியப்பன் சற்றே அவசரக் குரலில், ''சார்...'' என்றார்.
''என்ன?''
''இந்த ஏரியா கூர்க்கா வர்றான். இவன்கிட்ட கேட்டா ஒரு வேளை விபரம் தெரியலாம்.''
செழியன் திரும்பிப் பார்க்க, அவன் கையில் டார்ச்சோடு சைக்கிளில் வருவது தெரிந்தது. கை நீட்டி, அவனை மறித்தார்.
சைக்கிளின் வேகத்தை சட்டென்று குறைத்து, ''சாப்...'' என்று சொல்லியபடியே பதட்டத்தோடு இறங்கினான், கூர்க்கா.
''அசிஸ்டென்ட் போலீஸ் கமிஷனர், செழியன்,'' என்று, பழனியப்பன் கூர்க்காவிடம் சொன்னதும், அவனுடைய சிறிய கண்களில் பயம் ஒட்டிக்கொண்டது. சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு, மெதுவாய் அவர் பக்கத்தில் வந்து, கலக்கமான குரலில், ''க்யா சாப்...'' என்றான்.
''உம் பேர் என்ன?'' கேட்டார், செழியன்.
''தயான் சாப்.''
''எத்தனை வருஷமா இந்த ஏரியாவில் கூர்க்காவாய் இருக்கே?''
''அஞ்சு வருஷமா சாப்.''
''இந்த பங்களாவில் யார் இருக்காங்கன்னு தெரியுமா?''
''மாலும் சாப்.''
''யாரு?''
''தீன் தோஸ்த் சாப்.''
''அந்த மூணு பேர் யாருன்னு தெரியுமா?''
''இக்பால் சாப், ஜோஷ் சாப், தருண் சாப்,'' என்றான்.
செழியனின் மூளையில் பொறி தட்டியது.
''கடைசியா என்ன பேர் சொன்னே?''
''தருண் சாப்.''

ராயல் என்பீல்ட் க்ளாஸிக் பைக், தன்னுடைய உலோக உடம்பை உதறி, டாப்ஸ்லிப் கெஸ்ட் ஹவுசுக்கு முன் நின்று, சிக்கனமாய் புகை கக்கி ஊமையான போது, இரவு, 8:30 மணி. வண்டியிலிருந்து இறங்கினான், தருண்.
அந்த மலைப்பிரதேசம் முழுவதும் நேர்த்தியாய் கறுப்பு பெயின்ட் அடித்தது போல் இருண்டு போயிருக்க, இருட்டுக்காகவே காத்திருந்தது போல், சில பறவைகள் விட்டு விட்டு வினோதமாய் கத்திக் கொண்டிருந்தது.
பைக்கைப் பார்த்ததும் உள்ளேயிருந்து ஓடி வந்த திடகாத்திரமான வாட்ச்மேன் ரத்தினம், கேட்டை திறந்து விட்டான்.
பைக்கை அவனிடம் ஒப்படைத்து, ''அவுட்ஹவுசுக்கு பின்னாடி எடுத்து போய் நிறுத்து,'' என்றான், தருண்.
''சரிங்கய்யா!''
''இக்பாலும், ஜோஷும் மாடியில் இருக்காங்களா, கீழேயா?''
''மாடியில் தான் இருக்காங்கய்யா!''
நுாறடி தெலைவில் ஒரு நிழல் படம் போல் தெரிந்த அந்தக் கட்டடத்தை நோக்கினான், தருண். டாப்ஸ்லிப் மலையின் குளிரை தாங்க, மார்புக்கு ஸ்வெட்டரையும், கைகளுக்கு லெதர் கிளவுசையும் கொடுத்திருந்த தருண், நிதானமாய் நடை போட்டு, கெஸ்ட் ஹவுசின் வாசல்படி ஏறி வெறுமனே சாத்தியிருந்த கதவைத் திறந்து, உள்ளே போனான்.
அரையிருட்டில் அந்தப் பெரிய ஹால் தெரிய, மேல் மாடியறை வராந்தாவில் மட்டும் வெளிச்சம் பரவியிருந்தது. மாடிப்படிகளில் ஏறி இரண்டாவது அறைக்குள் நுழைந்தான். 'டிவி'யின் அகன்ற திரையில், மோஸ்ட் டேஞ்சரஸ் கேம் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த, இக்பாலும், ஜோஷும் திரும்பிப் பார்த்து ஒரே குரலில், 'ஹாய்' சொல்லி கைகளை உயர்த்தினர்.
இக்பாலின் இடது கையில் பொன்னிற ஒயின் ததும்பும் புனல் வடிவ டம்ளரும், வலது கையில் சிக்கன் லெக்பீசும் இடம் பிடித்திருக்க, கண்களில் போதை பரவிக் கொண்டிருந்தது.
''என்ன தருண்... உனக்காக இவ்வளவு நேரம் காத்திருந்துட்டு, இப்பத்தான், 'அரேபியன் க்ரேப்ஸ் ஒயின்' பாட்டிலை திறந்தோம். ஏன் இவ்வளவு லேட்?'' என, லேசாய் கோபப்பட்டான், இக்பால்.
''உக்கடம் பைபாஸ் ரோட்டிலிருந்து ஈச்சனாரி கோவில் வரைக்கும் சரியான டிராபிக். 30 கி.மீ.,க்கு மேல பைக்கை ஓட்ட முடியலை,'' என்றபடியே, சோபாவில் சாய்ந்து உட்கார்ந்தான், தருண்.
''புவனேஷ் எப்படி இருக்கான். இன்னிக்கு ராத்திரிக்குள்ளே போய்ச் சேர்ந்துடுவானா?'' கேட்டான், ஜோஷ்.
''நாம சந்தோஷப்படற மாதிரி அவனோட நிலைமை இல்லை. அவனை பிழைக்க வைக்க அந்த ஹாஸ்பிடலோட, 'சீப்' டாக்டர் போராடிகிட்டு இருக்கார். புவனேஷுக்கு, 'எக்ஸ்ட்ராவேசேஷன் ஐ.வி., இஞ்செக் ஷன்' சரியான முறையில் போடப்பட்டிருந்தால், இந்நேரம் அவன் கதை முடிஞ்சிருக்கும்.
''அரையும் குறையுமா ஊசி போட்டா இப்படித்தான், எப்ப சாவான்னு காத்திட்டிருக்கணும்,'' என்று கோபமாக பேசிய தருண், இக்பாலிடம், ''இப்பவாவது சொல்லு... அந்த ஊசி போடற வேலையை யார்கிட்டே குடுத்தே?''
''அதுவா, 'பயோ மெடிக்கல் வேஸ்ட் அண்ட் செக்ரிகேஷன் டிபார்ட்மென்ட்'டில், எனக்கு வேண்டிய ஒருத்தர் இருக்கார். கோயமுத்துார்ல பாதிக்கும் மேற்பட்ட ஹாஸ்பிடல்களில் இருக்கிற மருத்துவக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்றி அழிக்கிறதுதான் அவரோட வேலை.
''அவர், டாக்டருக்கு படிக்காவிட்டாலும் ஒரு டாக்டருக்கு தெரிஞ்ச எல்லா விஷயங்களும் அவருக்கும் தெரியும். அந்த நம்பிக்கையில் தான், அவரிடம் குடுத்தேன். இப்படி சொதப்புவார்ன்னு நான் நினைக்கலை.''
சில விநாடிகள் மவுனமாய் இருந்தவன், ''சரி... முகிலா இப்போ எப்படியிருக்கா. அவளுக்கு நினைவு திரும்பிடுச்சா இல்லையா?'' என்றான், தருண்.
''இன்னும் இல்லை.''
''ஏன் என்னாச்சு... இந்நேரம் அவளுக்கு நினைவு திரும்பி நார்மலான நிலைக்கு வந்து இருக்கணுமே?''
''நீ சொல்றது சரிதான், தருண். முகிலா கர்ப்பமா இருக்கிற விஷயம் தெரியாம, 'பெண்டாஜோசின் இஞ்செக் ஷனை' ஒரு, 'ஆம்பியூல்' அதிகமாய் போட்டதோட விளைவு, 'சின்கோப்' என்ற மயக்க நிலைக்கு போயிட்டா. எப்படியும் ராத்திரி, 12:00 மணிக்கு மேல், முகிலாவுக்கு சுய உணர்வு வந்துடும்ன்னு நினைக்கிறேன்.''
''முகிலா இப்ப எந்த அறையில இருக்கா?''
''பக்கத்து அறை தான்.''
அரையிருட்டோடு இருந்த பக்கத்து அறைக்குள் நுழைந்தான், தருண். சுவரோரமாய் போடப்பட்டிருந்த கட்டிலில் ஒரு நேர்க்கோட்டைப் போல் மல்லாந்து படுத்திருந்தாள், முகிலா. அவள் இயல்பான சுவாசத்தில் இருப்பதற்கு அடையாளமாய் மார்புப் பகுதி சீராக ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. அவளுடைய கன்னத்தை சற்றே பலமாய் தட்டியபடி குனிந்து, ''முகிலா... முகிலா...'' என கூப்பிட்டான்.
உடம்பில் சின்ன சலனம் கூட இல்லை. ஒரு சிற்பம் படுத்திருந்தது போன்ற நிசப்தம்.
இக்பாலும், ஜோஷும் அறைக்குள் நுழைந்தனர்.
போதை வழியும் குரலில் குழறலாய், ''தருண்... நாம என்னிக்கு டாப்ஸ்லிப் கெஸ்ட் ஹவுசுக்கு வந்தாலும் சரி, அந்த ராத்திரி வீணாய் போனதில்லை. இந்த ராத்திரியும் அப்படித்தான். எப்படியும் இன்னும் ரெண்டு மணி நேரத்துக்குள்ளே முகிலாவுக்கு சுய உணர்வு வந்துடும்.
''அதுக்கப்புறம், 'டைகர்ஸ் அண்ட் டீர்' விளையாட்டை விளையாடலாம். இப்ப உனக்காக, 'அரேபியன் க்ரேப்ஸ் ஒயினும்' ரத்தினம், நமக்காக சமைச்ச சிக்கனும் காத்திட்டிருக்கு. வா சாப்பிடலாம்,'' என்றான், ஜோஷ்.
''எனக்கு இன்னிக்கு, 'அரேபியன் க்ரேப்ஸ் ஒயின்' வேண்டாம்.''
''அப்புறம்?''
''சைனீஷ் ஸ்நேக் இஞ்செக் ஷன்.''
''உன்னோட, 'பேவரைட்' அது; போட்டுக்கலாம் வா.''
மூன்று பேரும் அறையை விட்டு வெளியே வந்தனர்.

கோவை கமிஷனர் அலுவலகம். இரவு, 10:30 மணி.
கமிஷனர் பொய்யாமொழி முன், நிமிர்ந்து உட்கார்ந்திருந்தார், செழியன்.
''தருண் மேல சந்தேகப்படறீங்களா?'' கமிஷனர் கேட்க, தலையசைத்தார், செழியன்.
''லேசா ஒரு சந்தேகம் வருது சார்!''
''தருணோடு இருந்த அந்த ரெண்டு நண்பர்கள் யாரு?''
''ஒருத்தன் இக்பால், இன்னொருத்தன் ஜோஷ். மூணு பேரும் ஒரே வீட்ல இருந்திருக்காங்க. அந்த அன்பு நகர்ல யார் கூடவும் அவங்க நெருங்கி பழகாத காரணத்தால், அங்கே இருக்கிற யாருக்கும் அவங்களைப் பத்தி தெரியலை சார்.''
''தருண், ஒரு வங்கியில் தானே வேலை பார்க்கிறதாய் சொன்னீங்க.''
''ஆமா சார்!''
''எந்த வங்கி?''
''ஏதோ ஒரு வங்கி பேரைச் சொன்னார், சார். மறந்துட்டேன்.''
''அவரோட மொபைல்போன் நம்பரையும் நீங்க வாங்கிக்கலை?''
''சாரி சார்... தருண் மேல எனக்கு கொஞ்சம் சந்தேகம் வந்திருந்தாலும் எல்லா விபரங்களையும் கேட்டு வாங்கியிருப்பேன். எனக்கு தருண் மேல துளி கூட சந்தேகம் வரலை.''
''சரி... இக்பால், ஜோஷ், தருண் இந்த மூணு பேருமே இப்ப வீட்ல இல்லை. வெளியே போயிருக்காங்க. மணி, 10:30 ஆகியும் இன்னும் வரலை. அவங்க எங்கே இருக்காங்கன்னு எப்படி கண்டுபிடிக்கப் போறீங்க?''
செழியனுக்கு வியர்க்க ஆரம்பித்தது.
தொடரும்
ராஜேஷ்குமார்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X