மீண்டும், ரஜினி - கமல் போட்டி ஆரம்பம்!
தமிழ் சினிமாவில், ரஜினியும், கமலும் கடந்த, 40 ஆண்டுகளாக போட்டியாளர்களாக திகழ்ந்தனர். ஆனால், விஜயும், அஜித்தும் முன்னணிக்கு வந்த பிறகு, ரஜினி, கமலுக்கு இடையிலான போட்டி, படிப்படியாக குறைந்து போனது. தற்போது, விக்ரம் படத்தின் மூலம், மீண்டும் விட்ட மார்க்கெட்டை பிடித்து, பரபரப்பை ஏற்படுத்தி விட்டார், கமல். அதனால், ரஜினிக்கும், தன் மார்க்கெட்டையும் உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கி இருக்கிறது.
அதன் காரணமாக, கமலைப் போலவே, ரஜினியும் சில, 'ஹிட்' பட இயக்குனர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். இதுவரை, தான் நடித்திராத மாறுபட்ட கதைகளை தயார் செய்யுமாறு கூறியிருக்கிறார். அதனால், சில காலம் விட்டுப்போன, ரஜினி - கமலுக்கு இடையிலான தொழில் போட்டி, மீண்டும் வலுவடைய துவங்கி இருக்கிறது.
— சினிமா பொன்னையா
'டாப் கியர்' போடும், வடிவேலு!
கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக, வடிவேலு நடிப்பில் ஒரு படம் கூட திரைக்கு வராத நிலையில், தற்போது, நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் மூலம், ரீ - என்ட்ரி கொடுத்துள்ளார். இதையடுத்து, மாமன்னன் உட்பட பல படங்களில் நடிக்க, 'கால்ஷீட்' கொடுத்திருக்கிறார், வடிவேலு.
'நான்கு ஆண்டுகளாக, எந்த படத்திலும், என்னை பார்க்காத ரசிகர்கள், மறந்தே விட்டனர். அதனால், இடைப்பட்ட நான்கு ஆண்டுகளில் தொடர்ந்து நடித்திருந்தால், எத்தனை படங்களில் நடித்து இருப்பேனோ அத்தனை புதிய படங்களில் வேகமாக ஒப்பந்தமாகி, நடிக்கப் போகிறேன்.
'அந்த வகையில், ஆண்டிற்கு அரை டஜன் படங்களாவது, என் நடிப்பில் வெளியாக வேண்டும் என்று திட்டமிட்டுள்ளேன்...' என்கிறார்.
சினிமா பொன்னையா
சினி துளிகள்!
* விக்ரம் படத்தின் வெற்றி காரணமாக, கடந்த, ஆறு ஆண்டுகளுக்கு முன், தான் நடித்து கிடப்பில் போடப்பட்டுள்ள, சபாஷ் நாயுடு படத்தை, மீண்டும் துாசு தட்டுகிறார், கமல்ஹாசன்.
* சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி, 'சோஷியல் மீடியா'வில், அழகு சாதன பொருட்கள் மற்றும் ஆடை விளம்பரங்கள் மூலமும், கோடி கோடியாக சம்பாதித்துக் கொண்டிருக்கிறார், சமந்தா.
* சார்பட்டா பரம்பரை படத்தில், ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்தார், துஷாரா விஜயன். அதையடுத்து, மீண்டும் பா.ரஞ்சித் இயக்கத்தில், நட்சத்திரங்கள் நகர்கிறது என்ற படத்தில் நடித்திருப்பவர், அடுத்தபடியாக, அருள்நிதிக்கு ஜோடியாக ஒரு படத்தில்ஒப்பந்தமாகி இருக்கிறார்.
* தி கிரே மேன் என்ற ஆங்கில படத்தில், 'நெகட்டிவ் ரோலில்' நடித்துள்ள தனுஷை, அடுத்தபடியாக, விஜய் நடிக்கும் ஒரு படத்திலும், வில்லனாக நடிக்க வைக்க, முயற்சி நடக்கிறது.
* அவன் இவன், துாங்காவனம் உட்பட பல படங்களில் நடித்த, மது ஷாலினி, சென்னை டு சிங்கப்பூர் உள்ளிட்ட சில படங்களில் நடித்த, கோகுல் ஆனந்த் என்பவரை, காதலித்து திருமணம் செய்துள்ளார்.
* கள்ளபார்ட் படத்தில், மாற்றுத்திறனாளி வேடத்தில் நடித்து இருக்கிறார், அரவிந்த்சாமி. ராஜபாண்டி என்பவர் இயக்கியுள்ள இந்த படம், 'த்ரில்'லர் கதையில் உருவாகியிருக்கிறது.
* பொன்னியின் செல்வன் சரித்திர கதையை, படமாக்கி உள்ள மணிரத்னம், இந்த படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழாவை, சோழர்கள் காலத்தில் தலைநகரமாக இருந்த தஞ்சையில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார்.
அவ்ளோதான்!