மன அழுத்தத்துடனேயே இருப்பதால், இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். தவிர, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரைக் கோளாறு, செரிமான பிரச்னைகள், குழந்தையின்மையை ஏற்படுத்தும். மன அழுத்தம் அதிகமாகும் போது, இயல்பாகவே அட்ரினலின் ஹார்மோன் அதிகமாக சுரந்து, இதயத் துடிப்பையும், ரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கச் செய்யும்.
இதை சமன் செய்வதற்காக, 'கார்டிசால்' என்ற ஹார்மோன் சுரக்கும். அடிக்கடி இந்த ஹார்மோன் சுரப்பது, பல உடல் பிரச்னைகளுக்கு வழி செய்யும். யோகாசனம் என்பதே உடலும், மனமும் இணைந்து செயல்படும் ஒரு பயிற்சி. அவரவரின் தேவைக்கு ஏற்ற பயிற்சிகளை செய்யும் போது, இதயத் துடிப்பு சீராகி, ரத்த அழுத்தமும் கட்டுக்குள் வரும்; நரம்பு மண்டலமும் வலுப் பெறும்; பதற்றம் குறையும்.
உடம்பு நன்றாகச் செயல்படுவதாக மூளைக்கு தகவல் சென்று, அனைத்தும் சரியாகவே இருக்கிறது என்று மூளை நம்பும். யோகாவில் உள்ள அனைத்து ஆசனங்களும் மன அழுத்தம் மட்டுமல்ல; எல்லாவித உடல், மனப் பிரச்னைகளில் இருந்தும் வெளியில் வருவதற்கு உதவும்.
யோகாவுடன் சேர்த்து செய்யும் மூச்சுப் பயிற்சியான பிராணயாமம், தியானம், உடம்பையும் மனதையும் ஓய்வாக வைக்கும் சவாசனம் போன்றவை, மனதிற்கு அமைதியை தரக் கூடியவை; மேலும் இவை, நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும் திறன் கொண்டவை.
சர்வதேச அளவில் பல ஆய்வுகள் இதை உறுதி செய்துள்ளன. மூளையின் செயல்பாடு, அமைப்பு பற்றி இன்னும் முழுமையாக யாராலும் தெரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும், தன்னைத் தானே மாற்றிக் கொள்ளும் திறன் கொண்டது மூளை என்பது, நவீன ஆராய்ச்சிகளில் தெளிவாகவே உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதற்கு மருத்துவ விஞ்ஞானிகள், 'நியுரோபிளாஸ்டிசிட்டி' என்று சொல்கின்றனர். தொடர்ந்து ஒரு விஷயத்தை செய்யும் போது, குறிப்பிட்ட எண்ணங்கள் மீண்டும் மீண்டும் வரும் போது, அதற்கேற்ப மூளை தன்னை மாற்றிக் கொள்கிறது; எப்படி பயிற்சி தருகிறோமோ அதுவாகவே மூளை மாறி விடுகிறது.
ஒரு விஷயத்தில் தீவிரமாக, ஈடுபாட்டுடன் செயல்படும் போது, மூளை இன்னும் வலிமை ஆகிறது. 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, நம்முடைய பாரம்பரிய மருத்துவ முறையில் இவை அனைத்தும் உள்ளன.
- யோக சாஸ்திரம்