முன்கதை சுருக்கம்: முகிலா தப்பி விட்டதாக கருதி, பங்களாவைச் சுற்றி மூவரும் தேடிக் கொண்டிருந்த நிலையில், வன அலுவலகத்தில் விசாரித்து, அங்கு வந்தடைந்தார், ஏ.சி.பி., செழியன் -
'டாப்ஸ்லிப்' காட்டுப் பகுதியின் எல்லாத் திசைகளும் கெட்டியான இருட்டில் இருக்க, 'கெஸ்ட் ஹவுசின்' உட்பகுதியில் மட்டும், மின்சார வெளிச்சம் சிக்கனமாய் சிதறியிருந்தது.
ஜீப்பிலிருந்து இறங்கினார், செழியன். அவரைத் தொடர்ந்து, ஆர்மர்ட் போலீசார் நான்கு பேர் தோள்பட்டைகளில் தொங்கும் ரைபிள்களோடு, பூட்ஸ் சத்தத்தோடு கீழே குதித்தனர்.
''சார்... பங்களாவுக்குள்ளே வெளிச்சம் தெரியுது. ஆட்கள் உள்ளே இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.''
இரும்பாலான அந்தப் பெரிய கேட்டுக்கு முன் போய் நின்று, தன் இரண்டு கைகளாலும் பலங்கொண்ட வரைக்கும் தள்ளிப் பார்த்தார், செழியன். கதவு இம்மியும் அசையாமல் கான்க்ரீட் சுவர் போல் அப்படியே நின்றது.
'கெஸ்ட் ஹவுசுக்கு இவ்வளவு பெரிய கேட் எதுக்கு?' என்று ஆச்சர்யப்பட்ட, செழியன், ஆர்மர்ட் போலீசாரிடம் திரும்பி, ''கெஸ்ட் ஹவுசை சுத்தி வாங்க... நாம உள்ளே போக எப்படியும் ஏதாவது ஒரு இடத்துல வழி கிடைக்கும். அப்படி வழி கிடைச்சா, எனக்கு உடனடியா, மொபைல் போன்ல தகவல் சொல்லுங்க. நானும், டிரைவரும் இங்கேயே இருக்கோம்.''
'எஸ் சார்...' என்ற ஆர்மர்ட் ஸ்க்வாட் போலீசார், இரண்டு பிரிவாகப் பிரிந்து, தலையில் பொருத்தப்பட்டிருந்த, 'ஹெட் டார்ச்' வெளிச்சத்தோடு இருட்டில் ஓடினர். அதே விநாடி, செழியனின் மொபைல்போன் அழைத்தது. எதிர்முனையில் கூப்பிட்டுக் கொண்டிருந்தார், கமிஷனர் பொய்யாமொழி.
மொபைல் போனை காதுக்கு ஒற்றிய செழியன், மெல்லிய குரலில், ''சார்... தருண் இருக்கிற இடத்தை, 'ட்ரேஸ் அவுட்' பண்ணிட்டோம். 'டாப்ஸ்லிப்' பகுதியில் இருக்கிற ஒரு, 'கெஸ்ட் ஹவுசில்' அவனோடு இக்பால், ஜோஷ் தங்கி இருக்காங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல அவங்களை மடக்கிடுவோம்.''
''மிஸ்டர் செழியன்... அந்த மூணு பேரும், மன நலம் பாதிக்கப்பட்டவங்க. எந்த ஒரு விபரீதமான செயலையும் செய்யத் தயங்காதவங்க. ஜாக்கிரதையா, கவனமா செயல்படுங்க.''
''கவலைப்படாதீங்க சார்... நான் கவனமா கையாள்றேன்.''
திகிலும், வியர்வையும் படிந்த முகங்களோடு, கீழே சலனமில்லாமல் விழுந்து கிடந்த, தருணின் அருகே மண்டியிட்டு உட்கார்ந்து, அவனுடைய உடலை உலுக்கியபடி குரல் கொடுத்தனர், இக்பாலும், ஜோஷும்.
'தருண்...'
உடல் உலுக்கப்பட்டதால், அவனுடைய மூக்கு துவாரங்களில் தேங்கியிருந்த ரத்தம் சட்டென்று வெளிப்பட்டு, தயங்கி தயங்கி வழிந்தது. கடைவாயிலும் ரத்தக்கோடு கோணலாய் தெரிந்தது. பயம் உறைந்து போன கண்களால் சுற்றும் முற்றும் பார்த்தப்படி குரலைத் தாழ்த்தினான், இக்பால்.
''ஜோஷ்... அந்த முகிலா இங்க தான் ஏதாவது ஒரு இடத்துல ஒளிஞ்சுக்கிட்டு இருப்பான்னு நினைக்கிறேன். தருண், இப்படி பேச்சு மூச்சு இல்லாம ரத்தக்களறியா கிடக்கிறான்னா, முகிலாவோட தாக்குதல் ரொம்பவும் மூர்க்கமாய்த்தான் இருந்திருக்கணும். நல்லவேளை, உயிரோடு இருக்கான். நுாலிழை மாதிரி மூச்சுக்காத்து வந்துட்டிருக்கு.''
''இப்படி தருணுக்குப் பக்கத்துல உட்கார்ந்துகிட்டு கவலைப்பட இது நேரமில்லை. மொதல்ல வெறி பிடிச்ச அந்த பொட்ட நாயைப் போட்டுத் தள்ளுவோம். இந்த இருட்டுல ரெண்டு பேரும் சேர்ந்தே போவோம். தனியா போனா ஆபத்து,'' கோபாவேசமாய் இருவரும் நகர முயன்ற விநாடி, இக்பால் மட்டும் நின்று, சுற்றும் முற்றும் பார்த்தான்.
''என்ன அப்படி பார்க்கிறே?'' கேட்டான், ஜோஷ்.
''ஏதோ சத்தம் கேட்கலை.''
''சத்தமா... என்ன சத்தம்?''
''பேச்சு சத்தம்.''
''எனக்கு கேட்கலையே.''
''இப்ப எனக்கு கேட்டது.''
''நீ, ரொம்பவும் பயந்து போயிருக்கே இக்பால். காத்துல அசையற இலைகளின் சத்தம் கூட, யாரோ பேசற மாதிரிதான் இருக்கும். என் கூட சேர்ந்த மாதிரியே வா, அந்த முகிலா அவ்வளவு சுலபத்துல இந்த, 'கெஸ்ட் ஹவுசை' விட்டு வெளியேற முடியாது. இன்னும் அஞ்சு நிமிஷத்துக்குள்ளே அவளை மடக்கிலாம்; தைரியமா இரு.''
டார்ச் வெளிச்சம் தரையில் விழுந்து பளிச்சென்று பாதையைக் காட்ட, இருவரும் அதி ஜாக்கிரதையாய் நடை போட்டனர். 100 அடி நடந்திருப்பர். சட்டென்று நின்றான், ஜோஷ். அவனுடைய தோளைத் தொட்ட இக்பால், ''என்ன?'' என்றான்.
''நீ சொன்னது உண்மை தான். ஏதோ பேச்சு சத்தம் கேட்குது.''
மொபைல்போனில் பேச்சை முடித்துக்கொண்ட செழியன், ஜீப்புக்கு சாய்ந்து நின்ற விநாடி, ஆர்மர்ட் போலீசாரில் ஒருவரான நரசிம்மன், இருட்டில் வேகவேகமாய் நடந்து, அவரை நெருங்கினார்.
''இந்த, 'கெஸ்ட் ஹவுசு'க்குள் நுழைய ஒரு வழி கிடைச்சிருக்கு சார். 10 அடி உயர காம்பவுண்ட் சுவரையொட்டின மாதிரி மா மரம் ஒண்ணு, கிளைகளைப் பரப்பிட்டு வசதியா வளர்ந்திருக்கு. கொஞ்சம் முயற்சி பண்ணினா, மரம் ஏறி உள் பக்கமா குதிச்சுடலாம் சார்.''
ஜீப் டிரைவரிடம் திரும்பி, ''சபாபதி... நான் நரசிம்மனோடு போறேன். நீ, ஜீப்லயே இரு. ஏதாவது பிரச்னைன்னா உடனே போன்ல என்னை கூப்பிடு,'' என்றவர், நரசிம்மனோடு வேக வேகமாய் அந்த இருட்டில் நடந்தார், செழியன்.
மா மரத்துக்கு கீழே, ஆர்மர்ட் போலீசார் மூன்று பேர் நின்றிருந்தனர். மரத்தை அண்ணாந்து பார்த்துவிட்டு, ''மரத்துல ஏற முடியுமா?'' கேட்டார், செழியன்.
''முடியும் சார்... அதுக்கேத்த மாதிரி
தான் கிளைகளும் இருக்கு,'' சொன்ன
அடுத்த விநாடியே மரத்தில் தாவி ஏறி, கிளைகளில் கால்களை வைத்து, இலைகளை விலக்கி காம்பவுண்ட் சுவரின் உச்சிக்குப் போனார், நரசிம்மன்.
அவரைத் தொடர்ந்து மற்ற மூவரும் அதே வேகத்தில் ஏற, கடைசியாய் சற்றே சிரமப்பட்டு ஏறி, காம்பவுண்ட் சுவரைப் பற்றி, உள்ளே எட்டிப் பார்த்தார், செழியன்.
''மூவ் இன்...'' என சொல்லி, முதல் ஆளாய் செழியன், மரத்தின் கிளையைப் பற்றிக் கொண்டு, 'கெஸ்ட் ஹவுசின்' உள்ளே குதிக்க, மற்றவர்களும் குதித்தனர். 'கெஸ்ட் ஹவுசின்' முன்பக்கம் இருந்த வட்டமான புல் தரையை நெருங்கினர்.
குரலை மெல்லத் தாழ்த்தி, ''நரசிம்மன்...'' என்றார், செழியன்.
''சார்...''
''கெஸ்ட் ஹவுசோட முன்பக்க வாசல் கதவு, லேசா திறந்திருக்கு. இப்போ, தடாலடியா நாம அஞ்சு பேரும் வீட்டுக்குள்ளே நுழைஞ்சா, இக்பால், ஜோஷ், தருண் மூணு பேரையும் மடக்கிடலாம்.''
''நீங்க சொல்றது கரெக்ட் சார்... நாங்க நாலு பேரும் ஆர்ம்ஸோடு முன்னாடி போறோம். நீங்க எங்களை, 'பாலோ' பண்ணி வாங்க சார்,'' என சொல்லிவிட்டு, பாதி திறந்திருந்த கதவைத் திறந்து உள்ளே போனார், நரசிம்மன்; பின்தொடர்ந்தார், செழியன்.
சற்றே மங்கலான வெளிச்சத்தில், மெதுவாய் சுழலும் இரண்டு மின் விசிறிகளோடு நிசப்தமாய் தெரிந்தது, அந்த ஹால். சோபாவில் காலியான இரண்டு விஸ்கி பாட்டில்கள் தெரிய, 164 செ.மீ., 'டிவி' அகலத்திரை, மியூட் மோடில், 'டபிள்யூ டபிள்யூ ரியல் பைட் ஷோ' ஓடிக் கொண்டிருந்தது.
நடு ஹாலில் நின்று, சுற்றும்முற்றும் பார்த்தபடி ஆச்சர்யப்பட்டார், செழியன்.
''யாரையும் காணோமே?''
''சார்... நாம வந்ததை, 'ஸ்மெல்' பண்ணிட்டு, அவங்க எங்கேயாவது பதுங்கியிருக்கலாம்.''
''தேடுங்க... ஒரு இடத்தையும் விடாதீங்க,'' என சொல்லி, மாடிப்படிகளில் தாவி ஏறினார், செழியன்.
மாடி வராந்தாவில் இருந்த இரண்டு அறைகளின் கதவு விரிய திறந்து கிடக்க, சாத்தப்பட்டிருந்த மூன்றாவது அறையின் கதவு மேல் கையை வைத்து தள்ளித் திறக்க முயன்றார். கதவு உட்பக்கமாய் தாழ் போடப்பட்டு இருப்பதை உணர்ந்ததும், பலமாய்த் தட்டி, ''யார் உள்ளே?'' குரல் கொடுத்தார், செழியன்.
பதிலில்லை.
வராந்தா ஓரமாய் தள்ளி நின்றிருந்த நரசிம்மன், வேக வேகமாய் செழியனுக்கு பக்கத்தில் வந்தார்.
''என்ன சார்?''
''கதவை உள்ளே தாழ் போட்டுகிட்டு, அறையில யாரோ இருக்காங்க.''
''பார்த்துடலாம் சார்...'' என்று சொன்னவர், தன் வலுவான வலது புஜத்தால் கதவை இரண்டு முறை மோதி, பூட்ஸ் காலால் ஓங்கி உதைத்தார். கதவு லேசாய் நெகிழ்ந்து, அசைந்தது.
நரசிம்மன் இரண்டாவது தடவை உதைக்க முயன்றபோது, கதவின் தாழ்ப்பாள் மெல்ல விலகும் சத்தம் கேட்டது. தொடர்ந்து கதவு விரிய, தளர்ந்து போன உடம்போடு சோர்வாய் பார்வைக்குக் கிடைத்தாள், முகிலா. கண்களில் உச்சபட்ச பயம் தெரிந்தது.
பதட்டத்துடன் உள்ளே பாய்ந்து, கீழே சாய முயன்றவளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டார், செழியன்.
''முகிலா... ஆர் யூ ஆல்ரைட்?''
''எனக்கொண்ணும் பிரச்னை இல்லை சார். லேசாய் தலைச் சுற்றல், கொஞ்சம் பார்த்து நடக்கணும். இவ்வளவு சீக்கிரத்துல நீங்க என்னைக் காப்பாத்த வருவீங்கன்னு நான் கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கலை. கதவை இவ்வளவு வேகமாய் தட்டறது அவங்க மூணு பேரா இருக்கலாமோன்னு நினைச்சு, உடனே திறக்காம இருந்துட்டேன். சாரி சார்,'' என, பேசிவிட்டு மூச்சு வாங்கினாள், முகிலா.
''சரி... சரி... அந்த மூணு பேரும் இப்ப எங்கே?'' என்றார், செழியன்.
''கீழே ஹால்ல உட்கார்ந்து குடிச்சுட்டிருப்பாங்க, சார். நான் கூட ஒரு மணி நேரத்துக்கு முந்தி, இங்கிருந்து தப்பிச்சு போக நினைச்சு, அறைக்கு வெளியே வந்து எட்டிப் பார்த்தேன். மூணு பேரும் நல்லா குடிச்சுட்டு போதையில பேசிட்டிருந்தாங்க. மாடிப்படி ஓரமா நான் இறங்குறதை பார்த்துட்டு, சத்தம் போட்டாங்க; வாட்ச்மேனைக் கூப்பிட்டாங்க.
''வாட்ச்மேன் கையில மாட்டிடக் கூடாதுன்னு நினைச்சு, நான் கண்ணாடி
கதவை உடைச்சு, அந்த வழியா தப்பிக்கலாம்ன்னு முயற்சி பண்ணினேன்; முடியலை. மறுபடியும் அறைக்கே ஓடி வந்து உட்பக்கமா தாழ் போட்டுக்கிட்டு,
கட்டிலுக்கு அடியில் படுத்துக்கிட்டேன்.''
''நீ சொன்ன வாட்ச்மேனும், அந்த மூணு பேரும் இப்போ இந்த வீட்ல இல்லையே... எங்கே போனாங்க?''
''எனக்குத் தெரியலை, சார்...'' முகிலா குழப்பமான முகத்தோடு சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ஆர்மர்ட் போலீஸ்களில் ஒருவர் பதட்டத்தோடு, ''சார், ஒரு நிமிஷம்... இங்கே வந்து பாருங்க,'' குரல் கொடுத்தார்.
குரல் கேட்டு திகைப்போடு திரும்பினார், செழியன்.
''என்ன?''
''ஒருத்தன் இங்கே விழுந்து கிடக்கிறான், சார்.''
''யாரு?'' என்றபடி, அந்த இடத்தை நெருங்கினார்.
முகத்திலும், அணிந்திருந்த சட்டையிலும் ரத்தக்கறைகள் தெரிய, மல்லாந்து விழுந்திருப்பவனை உற்றுப் பார்த்துவிட்டு, முகிலாவிடம் திரும்பி, பார்வையாலேயே, 'யாரிவன்?' என்று கேட்டார், செழியன்.
கலவர முகத்தோடு அவசரக் குரலில், ''சார்... இவன் தான் என்னைப் பிடிக்க வந்த அந்த வாட்ச்மேன்,'' என்றாள், முகிலா.
''இப்படி ரத்தக்களறியாய் விழுந்து கிடக்கிறான். அடிச்சுப் போட்டது யாரு?''
''தெரியலை சார்... இவன் கையில் சிக்கிடக் கூடாதேன்னு நினைச்சு தான், அறைக்கு ஓடிப்போய் உட்பக்கமா தாழ் போட்டுக்கிட்டேன். அதுக்கு அப்புறம் என்ன நடந்ததுன்னு எனக்குத் தெரியலை.''
பக்கவாட்டில் திரும்பி, ''நரசிம்மன்...'' குரல் கொடுத்தார், செழியன்.
''சார்.''
''ஆள் உயிரோடு இருக்கானான்னு பாரு,''
சோதித்து பார்த்துவிட்டு, ''மூச்சு இருக்கு சார்,'' என்ற நரசிம்மன், வாட்ச்மேனின் சட்டைப் பாக்கெட்டுக்குள் எட்டிப்
பார்த்துக் கொண்டிருந்த மொபைல்போனை எடுத்தார்.
''அந்த மொபைல் போனோட, 'கான்டாக்ட்ஸ் ஆப்ஷனுக்கு' போய், கடைசியா அவனுக்கு வந்த அழைப்பு யார், யாரோடதுன்னு பாரு?'' என்றார், செழியன்.
அந்த மொபைல் போனை உயிர்ப்பித்து, ''ரெண்டு தடவை இக்பாலும், ஒரு தடவை ஜோஷும் பேசியிருக்காங்க சார்,'' என்றார், நரசிம்மன்.
''சரி, இந்த போனிலிருந்து இக்பாலோட மொபைலுக்கு டயல் பண்ணு.''
அடுத்த விநாடி, அந்த ராத்திரி வேளையின் நிசப்தத்தை அறுத்து, 'கெஸ்ட் ஹவுசு'க்கு வெளியே, இக்பாலின் மொபைல் போன் ஒலி எழுப்பியது.
உடம்பில் தீப்பற்றிக் கொண்டது போன்ற உணர்வோடு, மாடிப்படிகளில் வேகமாய் இறங்கி, 'கெஸ்ட் ஹவுசை' விட்டு வெளியே வந்தார், செழியன்.
— தொடரும்
ராஜேஷ்குமார்