வாசகர்களின் மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும்!
'வீர வேல் வெற்றி வேல்...' கோஷம் விண்ணைப் பிளக்க, கட்டுக்கடங்காத கூட்டத்தின் நடுவே, அழகு முருகன் வீற்றிருக்கும் அழகிய தங்க ரதம், ஆடி அசைந்து வந்தது.
தங்க ரதத்தை இழுத்தவர்கள் அனைவரும் தினமலர் - வாரமலர் வாசகர்கள்; சரியாகச் சொல்லப் போனால், அந்துமணியின் ரசிகர்கள்.
தினமலர் - வாரமலர் குற்றால சீசன் டூர் மூலமாக, தங்களுக்கு கிடைத்த அளவற்ற ஆனந்தத்திற்கு காரணமான, அந்துமணிக்கு தங்களது நன்றியை தெரிவிக்கும் வகையில், இந்த தங்க ரதத்தை இழுத்தனர்.
தினமலர் - வாரமலர் வாசகர்களின் கனவு திட்டமான குற்றால சீசன் டூர், இந்த ஜூலை 19, 20, 21 ஆகிய தேதிகளில் சிறப்பாக நடந்து முடிந்தது.
இரண்டு ஆண்டுகள், 'கோவிட்' காரணமாக, எல்லாமே நின்று போனதில், இந்த குற்றால டூரும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மீண்டும் இயல்பு நிலை திரும்பியதும், 'எப்போது குற்றால சீசன் டூர்' என்று, வாசகர்கள் கேட்பதற்கு முன், அதற்கான அறிவிப்பை, அந்துமணி வெளியிட்டதும் தான் தாமதம், தங்களுக்கான கூப்பனை அனுப்பி, குவித்து விட்டனர், வாசகர்கள்.
கூப்பன் அனுப்பிய பல ஆயிரம் வாசகர்களில் இருந்து, 15 வாசகர் குடும்பம் தேர்வு செய்யப்பட்டது. சிறப்பு வாசகர்களாக, இரண்டு குடும்பங்கள் சேர்ந்து கொள்ள மொத்தம், 17 வாசகர் குடும்பத்தோடு, 'டூர்' மதுரையில் துவங்கியது.
மதுரை, ஹோட்டல் ரத்னா ரெசிடென்சியில், தற்காலிகமாக உணவகத்தை மூடி வைத்துள்ளனர். நம் வாசகர்களுக்காக அந்த உணவகத்தை திறந்து, டூருக்கு முதல் நாளே வந்த வாசகர்களுக்கு தேவையான உணவு வழங்கி, மகிழ்ந்தனர்.
வழக்கமாக டூருக்கு தனியார் பஸ்களைத்தான் ஏற்பாடு செய்வோம். இந்த ஆண்டு, தமிழக அரசின் விரைவு போக்குவரத்துக் கழக பஸ்சை ஏற்பாடு செய்திருந்தோம். அதை பஸ் என்று சொல்ல முடியாது. ரதம் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு
நம் வாசகர்களுக்காக பஸ்சை, மூன்று நாள் தயார் செய்தனர்.
பஸ்சை மட்டும் அனுப்பி விடாமல், வாசகர்களை வந்து வழியனுப்பவும் செய்தார், மதுரை டிப்போ மேனேஜர், சீனிவாசன். அவர் அனுப்பிய ஓட்டுனர்கள் சந்தரஹாசன், கார்த்திக் ஆகியோர், 'இப்படியெல்லாம் டூர் நடத்த முடியுமா...' என்று, வியந்து போய், ஓய்வு எடுக்க கூட போகாமல், வாசகர்களுக்காக எந்த நேரமும் தயார் நிலையில் இருந்தனர்.
மதுரையில் இருந்து பஸ் கிளம்பும் போதே, வாசகர்களிடம் உற்சாகமும் தொற்றிக் கொண்டது. அதற்கு வித்திட்டவர் முன்னாள் கல்லுாரி முதல்வரும், இன்னாள் மனநல ஆலோசகருமான கண்ணன்.
'என்ன அம்மணி, பஸ்சுல உட்கார்ந்துட்டு வர்றதுக்கா வந்துருக்கோம். தம்பி, அந்த குத்து பாட்ட போடு ஆடுவோம்...' என்று சொல்ல, அடுத்த ஒரு மணி நேரம், பஸ் அதகளப்பட்டது.
வாசகிகள் விக்னேஸ்வரி, ஷன்மதி, நிரஞ்சனா, பாரதி, காவ்யா, கார்த்திகா, மவுனிகா ஆகியோர், அருமையாக நடனமாடினர். இவர்களைப் பார்த்து, கண்ணன் - மீனா, பாலசுப்பிரமணியன் - சுபாஷினி, மாரியப்பன் - விக்னேஸ்வரி, ராஜ்குமார் - அனிருதா தம்பதியினர், தத்தம் இணையருடன் நடனமாடி, அசத்தினர்.
குற்றாலம் செல்லும் வழியில், ராஜபாளையம் ஹோட்டல் அமிழில், வரவேற்பு வழங்கினர். அவர்கள் வழங்கிய புதினா ஜூஸ், ஆனியன் பக்கோடா மற்றும் டீயும் வேற லெவல்.
அங்கிருந்து கிளம்பி குற்றாலத்தை அடைந்தோம். அங்குள்ள, ப்ரீஸ் ஹோட்டலில் வாசகர்கள் தங்க வைக்கப்பட்டனர். ஹோட்டல் நிர்வாகி, ஸ்ரீதரமூர்த்தி, அந்துமணியின் தீவிர ரசிகர்.
அந்துமணியின் அபிமானத்திற்குரிய வாசகர்கள் வருகின்றனர் என்றதும், தலைவர்களை வரவேற்பது போல, பேனர் வைத்திருந்தார். வாசகர்கள் பெயரிலேயே கீ செயின் வழங்கி அசத்தி விட்டார், மேலாளர் மணிமாறன்.
அறையில் உள்ள, 'டிவி' முதல் 'வை - பை' வரை, உபயோகிக்கும் முறை குறித்து சொல்லிக் கொடுத்தார். குரங்கு தொல்லை இருக்கக் கூடாது என்பற்காகவே, ஒருவருக்கு சம்பளம் கொடுத்து, நிறுத்தி வைத்திருந்தனர்.
சமையல் சக்ரவர்த்தியான, திண்டுக்கல் கீதா மெஸ் உரிமையாளரான, சந்திரசேகர், முதல்நாளே தன் டீமுடன் வந்திறங்கி, விதவிதமாக சமைத்துப் போட்டு, வாசகர்களை அசர வைத்து விட்டார்.
'ரிசார்ட்டில்' இவர் வழங்கிய விருந்து சாப்பாடு, பெரிய விஷயம் தான். ஆனால், அதைவிட, அவர் தன் சரக்கு வாகனத்தையே நடமாடும் சமையல் கூடமாக்கி, வாசகர்கள் ஐந்தருவி மற்றும் திருமலைக்கோவில் போனாலும் சரி, அங்கேயே வந்து இனிப்பு போளி, ஆனியன் பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி, காபி, டீ போன்றவைகளை தயாரித்து வழங்கினார்.
இரண்டு ஆண்டுகளாக வீட்டிற்குள் முடங்கிக் கிடந்த மக்கள் மொத்தமாக கிளம்பி வந்து விட்டதால், அருவி கொள்ளாத அளவில் கூட்டம். இந்த கூட்டத்திற்குள் நுழைந்து எப்படி குளிக்கப் போகிறோம் என்று, வாசகர்கள் திகைத்து நிற்க, போலீஸ், 'மைக்' அலறியது.
'தினமலர் - வாரமலர் வாசகர்கள் பலருக்கு, குற்றாலத்திற்கு வருவது இதுதான் முதல் முறை. ஆகவே, அந்துமணி படம் போட்ட மஞ்சள் பனியன் அணிந்து வந்துள்ள அந்த விருந்தினர்கள் குளிப்பதற்காக, சிறிது நேரம் விட்டுக் கொடுக்கவும்...' என்று, அறிவிப்பு வந்தது. அதைத் தொடர்ந்து, பொதுமக்கள் சந்தோஷமாக விலகி வழி விட, வாசகர்கள், ஆசை தீர குளித்து மகிழ்ந்தனர்.
மெயின் அருவிக்கு போகும் போது, 'நாங்களும் தான், 30 வருஷமா கூப்பன் போடறோம் விழ மாட்டேன்கிறதே. என்ன செய்ய, அந்த மஞ்சள் பனியனையாவது கொடுங்கய்யா... நாங்களும் ஆசை தீர குளிச்சுட்டு வர்றோம்...' என்று ஏக்கத்துடன் கூறினர்.
'எதை வேண்டுமானாலும் கேளுங்கள் கொடுக்கிறோம். ஆனால், அந்துமணி படம் போட்ட பனியனை மட்டும் கேட்காதீர்கள்...' என்று இறுக்கமாக பிடித்துக் கொண்டார், வத்தலகுண்டு வாசகர், கண்ணன்.
குற்றாலம் அருவிகளில் பெரும்பாலும், ஆண்கள் குளிப்பதற்கும், பெண்கள் குளிப்பதற்கும் தனித்தனி, வழி உண்டு. ஆண்கள் குளிக்கப் போகும்போது, அந்துமணி ஏற்பாட்டின்படி, காவல்துறையைச் சேர்ந்த பிரபாகரன், கூடவே இருந்து கூட்டத்தை விலக்கி, குளிப்பதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தார்.
இந்த வசதி பெண் வாசகர்களுக்கு கிடைக்கவில்லை. மற்றவர்களும் குளிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இடத்தை அடைத்துக் கொண்டு, நீண்ட நேரம் சில பெண்கள் குளித்துக் கொண்டிருந்தனர்.
இதைப் பார்த்த வாசகியர்களுக்கான பொறுப்பாளர் கலைச்செல்வி, கையில் ஒரு குச்சியை எடுத்து, போலீஸ் விசிலை கடன் வாங்கிக் கொண்டார். மெயின் அருவி ஆர்ச்சில் வழுக்கி விடும் பகுதியில், 'ரிஸ்க்' எடுத்து, ஏறி நின்று, இடத்தை அடைத்து குளித்துக் கொண்டிருந்தவர்களை வெளியே வரச்செய்து, கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அதன்பின், வாசகியர்கள் உட்பட பொதுமக்கள் பலரும், நன்றாக குளித்தனர்.
பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவியிலும், பஞ்சமில்லாமல் தண்ணீர் கொட்டியது. பழைய குற்றாலத்தில் ஒரு பக்கம் ஆண்கள், ஒரு பக்கம் பெண்கள் என்றால், நடுவில் நம் வாசகர்கள் என்று, குளியல் ஜோராக நடந்தது.
வெறும் அருவிக்குளியல் மட்டுமின்றி, குற்றாலத்தை சுற்றிப் பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. குற்றாலத்தில் உள்ள படகு குழாமில், அனைவரும் படகில் சென்று மகிழ்ந்தனர். 50 வயதை தாண்டிய வாசகர்கள் முருகேசன், செல்வம் ஆகியோர், 'வாழ்க்கையில் இதெல்லாம் எங்களுக்கு முதல் முறை...' என்று, மனம் நெகிழ்ந்தனர்.
சித்ரசபையின் முக்கியத்துவத்தை ஓதுவார் பாலசுப்பிரமணி கூற, வாசகர்கள் பலர் மெய்மறந்து எத்தகைய புண்ணிய பூமியில் இருக்கிறோம் என்று சந்தோஷப்பட்டனர்.
வாசகர்கள் தங்கியிருந்த, 'ரிசார்ட்டில்' பல திடீர் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. திடீர் போட்டிகளில் ஒன்று, 'எனது இணைக்கு இணை இல்லை' கணவனும், மனைவியுமாக வந்தவர்கள், கணவர், மனைவியின் குண நலன்களை பாராட்டி பேச வேண்டும். அதேபோல, மனைவியும், கணவரது நலன்களை பாராட்டி பேச வேண்டும்.
ஒருவருக்கு ஒருவர் வைத்துள்ள அன்பை பொது வெளியில் சொன்னதன் மூலம், அவர்களது அன்பின் தன்மை இன்னும் இறுகியது; பலருக்கு உதாரண தம்பதியராகவும் விளங்கினர். முரளி மனோகர் - கீர்த்திகா, சீனிவாசன் - முத்துலட்சுமி ஆகியோர், இந்த நிகழ்வு காரணமாக நெகிழ்ந்து போயினர்.
கூடுதலாக, 'தம்போலா' என்ற விளையாட்டுப் போட்டி, பாட்டுக்கு பாட்டு போன்ற போட்டிகளும் நடத்தப்பட்டது. பாட்டுக்கு பாட்டு போட்டியின் போது, சுப்புராமின் குரல் வளத்திற்கு ஈடு கொடுக்கும்படியான வாசகர்கள் குரல் இருந்தது. அதில், 'குறையொன்றுமில்லை' பாடலை பாடிய, சுதாவின் குரலும் ஒன்று.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமின்றி, போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்குமே தான் எழுதி, மிக அதிகமாக விற்பானையாகிக் கொண்டு இருக்கும், அந்துமணியின் கேள்வி பதில் புத்தகத்தில், கையெழுத்திட்டு வழங்கி மகிழ்ந்தார், அந்துமணி.
இப்படி, தங்களது மகிழ்ச்சிக்காக நிகழ்ச்சி, நேரத்தை செதுக்கி செதுக்கி ஏற்பாடு செய்திருந்த அந்துமணிக்கு, தாங்கள் செலுத்தும் நன்றியாக, முருகனை தரிசிக்க சென்ற திருமலைக் கோவிலில் தான், அவரது பெயரில் தங்க ரதம் இழுத்து, மகிழ்ந்தனர்.
'டீ - ஷர்ட்'டில் அந்துமணி!
தினமலர்- வாரமலர் வாசகர்களை, உயிராக நேசிக்கும் அந்துமணி, அவர்களை மகிழ்விக்க துவங்கிய இந்த திட்டத்தை கடந்த, பல ஆண்டுகளாக தொய்வின்றி இன்னும் சொல்லப் போனால் மேலும் மேலும் மெருகூட்டியபடி நடத்திக் கொண்டிருக்கிறார்.
அவர் எவ்வளவு தான் உன்னதமான உணவு கொடுத்தாலும், உயர்ந்த பரிசு வழங்கினாலும் வி.ஐ.பி.,யாக அழைத்துச் சென்று குளிக்க வைத்தாலும், இதை எல்லாம் தாண்டி வாசகர்களுக்கு மகிழ்ச்சியை தருவது, அவரை நேரில் பார்த்து பேசுவது தான்.
அதற்காக, டூரில் கலந்து கொண்டது முதல், அந்துமணி யாராக இருக்கும் என்பதை கண்டுபிடிக்க வாசகர்கள் படாதபாடுபடுவர். அவர்களுடன் சேர்ந்து நம் அந்துமணியும் சேர்ந்து தேடுவது தான், இதில் வேடிக்கை.
மடித்து விடப்பட்ட முழுக்கை சட்டை அவரது அடையாளங்களில் ஒன்று என்பதால், இந்த ஆண்டு, அந்த, 'கெட் - அப்'பில் யார் இருக்கின்றனர் என்று தேடினர். இதைத் தெரிந்து கொண்ட, அந்துமணி, டூரில் கலந்து கொண்ட மூன்று நாட்களும் விதம் விதமான, 'டீ - ஷர்ட்' அணிந்து, வலம் வந்தார்.
டூரில் கலந்து கொண்ட வாசகர்களே, நீங்கள் எல்லாம் அவரை பார்த்தீர்களோ இல்லையோ... ஆனால், உங்கள் அனைவரையும் அவர் பார்த்தார் என்பதை மட்டும் மனதில் கொண்டு, மகிழ்ச்சி கொள்ளுங்கள்.
கருணை!
பழைய குற்றாலத்தில், போலியோவால் கால் பாதிக்கப்பட்ட, தன் நண்பரை அருவியில் குளிக்க வைப்பதற்காக சிரமப்பட்டார், ஒருவர். இதைப் பார்த்த பிரபாகரன், கூட்டத்தை விலக்கி, அவர்களை ஆசை தீர குளிக்க ஏற்பாடு செய்தார். இதைப் பார்த்த நம் வாசகர்களும், பொதுமக்களும், கை தட்டி பாராட்டினர்.
எல். முருகராஜ்