ராஜ மவுலியுடன் போட்டி!
பாகுபலி, பாகுபலி2 மற்றும் ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்களை இயக்கி, சர்வதேச இயக்குனர் பட்டியலில் சேர்ந்து விட்டார், இயக்குனர் ராஜ மவுலி. இந்நிலையில், தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனரான, ஷங்கரும், அடுத்தபடியாக, தன் கனவு படத்தை, 1,000 கோடி ரூபாய் பட்ஜெட்டில், படமாக்க திட்டமிட்டு வருகிறார்.
'நீருக்கடியில் அறிவியல் சார்ந்த ஒரு கதையில் அந்த படம் உருவாகப் போகிறது. அதோடு, உலக அளவில் பரிட்சயமான நடிகர்கள் நடித்தால் தான் மெகா படமாக உருவாக்க முடியும் என்பதால், ஹிந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் மற்றும் தெலுங்கு நடிகரான ராம் சரணையும் இணைத்து, இயக்க திட்டமிட்டுள்ளேன்...' என்கிறார், இயக்குனர் ஷங்கர்.
சினிமா பொன்னையா
திருமணத்திற்கு பிறகும் எகிறி அடிக்கும், நயன்தாரா!
திருமணத்திற்கு பின், நயன்தாரா நடித்த படங்கள் திரைக்கு வந்த பிறகுதான், அவருக்கு, ரசிகர்கள் எந்த அளவுக்கு வரவேற்பு கொடுக்கப் போகின்றனர் என்பதே தெரிய வரும். தற்போது, ஹிந்தியில் ஷாரூக்கானுடன், ஜவான் படத்தில் நடித்து வருவதால், அதை முன் வைத்து தமிழில் தான் கதையின் நாயகியாக நடிக்கும் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு, 10 கோடி ரூபாய் சம்பளம் பேசி இருக்கிறார், நயன்தாரா.
இதனால், 'படத்தின் பாதி பட்ஜெட்டை நீங்களே எடுத்துக் கொண்டால் எப்படி...' என்று எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார், தயாரிப்பாளர். ஆனால் நயன்தாராவோ, 'இப்போது, நான் பாலிவுட் நடிகை ஆகிவிட்டேன். அதனால், இதுதான் என் சம்பளம். வேண்டுமானால் வாருங்கள்; இல்லையேல் போய்க் கொண்டே இருங்கள்...' என்று எகிறியுள்ளார். ஆனபோதும், அப்படத்துக்கு நயன்தாரா கேட்ட சம்பளத்தைக் கொடுத்து, ஒப்பந்தம் செய்துள்ளனர்.
— எலீசா
விஜய்க்கு கல்லெறியும், கேஜிஎப் பட நாயகி!
வடக்கில் இருந்து தமிழ் படங்களில் நடிக்க வரும் நடிகையரின் முதல் இலக்கே, விஜய் ஆகத்தான் இருக்கிறது. அதை நிரூபிக்கும் வகையில், கேஜிஎப் படத்தின் நாயகியான, ஸ்ரீநிதி ஷெட்டியும், தான், தீவிர விஜய் ரசிகை என்ற ஒரு செய்தியை வெளியிட்டு, அவரின் கவனத்தை தன் பக்கம் இழுத்திருக்கிறார்.
அதோடு, 'விஜய் நடித்த, பிகில், மாஸ்டர் மற்றும் பீஸ்ட் போன்ற படங்களை, ரசித்து பார்த்தேன். அதன்பிறகு தான், விஜயின் தீவிர ரசிகையானேன். இப்போது அவருடன், 'டூயட்' பாட வேண்டும் என்ற வெறியுடன் உள்ளேன். தற்போது, விக்ரமுடன், கோப்ரா படத்தில் நடித்துள்ளேன். விரைவில், விஜய் படத்தை கைப்பற்றி, கன்னட சினிமாவைப் போலவே, தமிழ் சினிமாவையும் ஒரு கலக்கு கலக்குவேன்...' என்று, சொடக் போடுகிறார், ஸ்ரீநிதி ஷெட்டி.
— எலீசா
'ஹீரோ'வாக நடிக்க பயப்படும், பார்த்திபன்!
இரவின் நிழல் என்ற படத்தை, 'சிங்கிள் ஷாட்'டில் இயக்கிய, பார்த்திபன், இந்த படம், கின்னஸ் சாதனை பட்டியலில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கிறார். இதையடுத்து, '1989ல், நான் இயக்கி, நாயகனாக நடித்த, புதிய பாதை படத்தின், இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டுள்ளேன். முதல் பாகத்தில், 'ஹீரோ'வாக நடித்த நான், இரண்டாம் பாகத்திலும் நடித்தால், ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
'எனவே, இந்த படத்தில் இளவட்ட, 'ஹீரோ'களில் யாரை நடிக்க வைக்கலாம் என்று ஆலோசித்தேன். அதில், என்னைப் போலவே நக்கல், நையாண்டித்தனம் கலந்த அந்த வேடத்தில் நடிக்க, சிம்பு தான் சரியாக இருப்பார் என்று, அவரிடத்தில் பேச்சு நடத்தியுள்ளேன். அதோடு, இந்த படத்தில், என் வயதுக்கேற்ற ஒரு கேரக்டரில் நடிக்கவும் முடிவெடுத்து இருக்கிறேன்...' என்கிறார்.
சினிமா பொன்னையா
சினி துளிகள்!
* விஜயுடன், வாரிசு படத்தில் நடித்து வரும், ராஷ்மிகா மந்தனா, தற்போது, ஹிந்தியில் மூன்று படங்களில் நடித்து வருகிறார்.
* 'மனச்சோர்வில் இருக்கும்போது, இமயமலைக்கு சென்றால், புத்துணர்ச்சி கிடைக்கும் என்று கூறியதால், அங்கு சென்று, தியானத்தில் ஈடுபட்டதோடு, பல சித்தர்களை சந்தித்து, ஆசி பெற்று திரும்பி இருக்கிறேன். இந்த பயணம், எனக்குள் புதிய உற்சாகத்தையும், எல்லை இல்லா ஆனந்தத்தையும் கொடுத்துள்ளது. அதனால், ஆண்டுக்கு ஒருமுறை, இமயமலை செல்ல திட்டமிட்டு இருக்கிறேன்...' என்கிறார், அஞ்சலி.
* கேப்டன் மில்லர் படத்தில், மூன்று வேடங்களில் நடிக்கும், தனுஷ், ஒரு வேடத்தில் நீண்ட தலைமுடி மற்றும் தாடி, 'கெட் - அப்'பில் நடிக்கிறார்.
அவ்ளோதான்!