'புட்பால்; வாலிபால்; ஹாக்கின்னு நிறைய விளையாட்டுக்கள் இருக்குறப்போ சிலம்பம் எதுக்குன்னு என்னை நிறைய பேர் கேட்டாங்க!'
யார் இவர்
பெயர்: தர்ஷிகா | 9ம் வகுப்பு
பள்ளி: கண்ணகி நகர் அரசு மேல்நிலைப்பள்ளி, செங்கல்பட்டு
பெற்றோர்: துரைராஜ் - உமா மகேஸ்வரி
அடையாளம்: சிலம்ப வீராங்கனை
சிலம்பத்தில் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில், 2020 முதல் மாவட்ட, மாநில, தேசிய அளவில் பல பதக்கங்களை குவித்திருக்கும் இவர், கடந்த ஏப்ரலில் நேபாளத்தில் நடந்த சர்வதேசப் போட்டியில் தங்கம் வென்றிருக்கிறார்.
என் விளக்குகள்
பாரதியார், பாரதிதாசன் கவிதைகளும், காந்திய சிந்தனைகளும் என் வாழ்க்கைக்கான விளக்குகள்; இந்த வெளிச்சத்தால என் எதிர்காலம் நல்லாஇருக்கும்னு மனப்பூர்வமா நம்புறேன்!
'கண்ணகி நகர்' - இந்த முகவரி உதவுதா?
இந்த முகவரியால, 'ஸ்பான்சர்' அவ்வளவு சீக்கிரம் கிடைக்கிறதில்லை. 1,100 பேருக்கு மேல படிக்கிற என் பள்ளியில நுாலகம் கிடையாது. ஒரு வாழ்விடத்தோட எதிர்மறை அடையாளம் மாறணும்னா அங்கே நிறைய சாதனையாளர்கள் உருவாகணும்; இதை அரசு உணரணும்... உதவணும்.
எங்கள் தர்ஷிகா
'தர்ஷிகா பூப்பெய்திய தருணத்துல நேபாள சர்வதேச போட்டி; அவளுடைய வெற்றிதான் அவ மன உறுதிக்கு சாட்சி!'
- ர.சரசு, ஆசிரியை.