நிலவுக்கும் நெருப்பென்று பேர்! (27)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2022
08:00

தன் பார்வையை உன்னிப்பாக்கி, 'கெஸ்ட் ஹவுசின்' பக்கவாட்டில் படர்ந்திருந்த இருட்டுக்குள் பாய விட்டார், செழியன்.
அவருக்குப் பின்னால் ஓடி வந்த ஆர்மர்ட் போலீசார் நான்கு பேரும், டார்ச் வெளிச்சத்தை எல்லாப் பக்கமும் வீசிப் பார்க்க, ''சார்... மொபைல் போனின் ஒலி, அந்த குரோட்டன்ஸ் தொட்டிக்குப் பின்னாடி இருந்து வர்ற மாதிரி தெரியுது,'' என்றார், ஒரு ஆர்மர்ட் போலீஸ்.
குரோட்டன்ஸ் தொட்டிக்குப் பின்னால் இருந்த மொபைல் போனை கையில் எடுத்த செழியன், ''போன் இங்கே இருக்கு. அந்த மூணு பேரும் எங்கே... ஒரு வேளை, நாம வந்தது தெரிந்து, தப்பிச்சு போயிருப்பாங்களோ...'' என, நரசிம்மனிடம் கேட்டார்.

எந்த பதிலும் சொல்லாமல், நரசிம்மனின் பார்வை, ஒரே இடத்தில் நிலைத்திருந்தது.
''என்ன நரசிம்மன்... எதை அப்படி உன்னிப்பாய் பார்க்கறீங்க?''
''சார்... இடது பக்க காம்பவுண்ட் சுவரோரமாய் ரெண்டு பேர்... ஒருக்களிச்சு, விழுந்து கிடக்கிற மாதிரி தெரியுது,'' என்றவர், தன் கையில் இருந்த டார்ச்சை அசைத்து, வெளிச்சத்தை அங்கே துரத்த, இக்பாலும், ஜோஷும் உடைகளில் படிந்த ரத்தக்கறைகளோடு 4 அடி இடைவெளியில், சலனமற்று கிடந்தனர்.

கோவை ஜி.ஹெச்., மதியம் 12:15 மணி-
ஐ.சி.யூ., வெளியே இருந்த அறைக்குள் மெடிக்கல் டீன் உமாபதி முன் உட்கார்ந்து, பேசிக் கொண்டிருந்தார், செழியன்.
அறை வாசலில் நிழலாடவே, திரும்பிப் பார்த்தார், செழியன். நரசிம்மன் நின்றிருந்தார்.
''என்ன நரசிம்மன்?''
''சார்... இக்பாலோட அப்பா தாஹிர், அபுதாபியிலிருந்து காலை, 6:00 மணி விமானத்துல புறப்பட்டு, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான், கோயமுத்துார் வந்து சேர்ந்தார். ஹாஸ்பிடலுக்கு வந்ததுமே, ஐ.சி.யூ.,வில் இருக்கிற, மகன் இக்பாலைப் பார்க்கணும்ன்னு ஆர்ப்பாட்டம் பண்றார்.
''இக்பாலுக்கு, சிகிச்சை நடந்துட்டிருக்கு, இப்ப பார்க்க முடியாதுன்னு நான் சொல்லியும், அவர் கேட்கலை. ரொம்பவும் பிடிவாதமாய் இருக்கார். அவரை அனுமதிக்கலாமா சார்?''
''நோ... நோ... இப்போதைக்கு யாரையும் ஐ.சி.யூ.,க்குள் அனுமதிக்க முடியாது. அவரை என்னை வந்து பார்க்கச் சொல்லுங்க.''
''இதோ அவரே வர்றார் சார்...'' நரசிம்மன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, கண்களில் நீரோடும், பதட்டம் நிரம்பிய உடம்போடும் அறைக்குள் நுழைந்தார், தாஹிர். இடைவிடாத விமானப் பயணத்தின் களைப்பு, அவர் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது.
''டாக்டர்... என்னோட மகன் இக்பாலுக்கு என்ன பிரச்னை... அவனையும், அவனோட நண்பர்கள் தருண், ஜோஷ் மற்றும் வாட்ச்மேன் ரத்தினத்தை அடிச்சு போட்டது யாரு... நாலு பேரும் இப்ப எப்படி இருக்காங்க?'' கேட்டார், தாஹிர்.
தனக்கு முன் இருந்த காலியான நாற்காலியைக் காட்டி, ''முதல்ல உட்காருங்க மிஸ்டர் தாஹிர்,'' என்றார், டாக்டர் உமாபதி.
தாஹிர், உடல் நடுக்கத்தோடு உட்கார, தான் யார் என்பதை அறிமுகப்படுத்தி, நிதானமான குரலில் பேச ஆரம்பித்தார், செழியன்.
''இதோ பாருங்க தாஹிர்... உங்க மகன் இக்பாலையும், மத்த மூணு பேரையும், யாரும் தாக்கலை. அவங்க முகங்களிலும், அணிந்திருந்த உடைகளிலும் ரத்தக்கறைகள் இருந்தது உண்மை தான். சுய உணர்வு இல்லாம, விழுந்திருந்த நாலு பேரையும் உடனடியாய் ஹாஸ்பிடலுக்கு கொண்டு வந்து சேர்த்தோம்,'' என சொல்லி, ஒரு விநாடி பேச்சை நிறுத்தினார், செழியன்.
''நான் தான் நாலு பேரையும், 'அட்டெண்ட்' பண்ணி சோதிச்சுப் பார்த்தேன். யார் உடம்பிலும் ஒரு சின்ன ரத்தக் காயம் கூட இல்லை,'' என்றார், டாக்டர் உமாபதி.
தாஹிர் குறுக்கிட்டு, ''அப்புறம் எப்படி ரத்தக்கறைகள் இருந்ததாய் போலீஸ் என்கிட்ட போன்ல சொன்னாங்க?''
''ரத்தக்கறைகள் இருந்தது உண்மை. ஆனா, அந்த ரத்தம் ஒருத்தர் தாக்கியதால் வந்தது இல்லை.''
''அப்புறம்?''
''நாலு பேரும், ரத்த வாந்தி எடுத்திருக்காங்க. காரணம், அவங்க சாப்பிட்ட விஸ்கி தான்,'' என்ற டாக்டர் உமாபதி, தனக்கு முன் இருந்த ஒரு அட்டைப் பெட்டியைத் திறந்து, உள்ளே ஒரு பாலிதீன் பேப்பரால் சுற்றி வைக்கப்பட்டிருந்த காலியான அந்த இரண்டு பெரிய விஸ்கி பாட்டில்களை மேஜை மீது எடுத்து வைத்தார்.
'ரெட் பாரஸ்ட் விஸ்கி' என, லேபிள் ஒட்டப்பட்ட அந்த வெளிநாட்டு பாட்டில்களின் அடிப்பாகத்தில், பொன்னிறத்தோடு, 5 மில்லி அளவுக்கு மீதி விஸ்கி தேங்கியிருந்தது.
''இதுமாதிரியான வெளிநாட்டு விஸ்கியை தினசரி ஒரு ஸ்மால் என்ற அளவில் எடுத்துக்கிட்டா பிரச்னையில்லை. ஒரே நேரத்துல அளவுக்கு மீறி சாப்பிட்டா, உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு, ரத்த நாளங்கள் சிதைய வாய்ப்பு அதிகம்.
''மூக்கிலும், வாயிலும், ரத்தம் கொட்டும். காரணம், பெரும்பாலான வெளிநாட்டு மதுபானங்களில், 40 சதவீதத்துக்கும் அதிகமாய் ஆல்கஹால் சேர்க்கப்படுவது தான்,'' என்றார், உமாபதி.
''டாக்டர்... என் மகனுக்கு குடிப்பழக்கம் இருக்குன்னு எனக்குத் தெரியும். அவன் எப்பவுமே ஆரோக்கியம் பாதிக்காத அளவுக்கு தான் குடிப்பான். இதுவரையிலும் அவனுக்கு மது சம்பந்தமாய் எந்த பிரச்னையும் வந்ததில்லை,'' என, அவசரமாய் இடைமறித்தார், தாஹிர்.
''இப்படியொரு பிரச்னை, நேத்து ராத்திரி உங்க மகன் உட்பட நாலு பேருக்கும் வந்ததுக்கு காரணம் என்ன தெரியுமா, மிஸ்டர் தாஹிர்?''
''என்ன?''
''அவங்க சாப்பிட்ட, விஸ்கி, காலாவதியானது. ஆறு மாசத்துக்கு முன் சாப்பிட வேண்டிய விஸ்கியை, நேத்து ராத்திரி சாப்பிட்டிருக்காங்க.''
''சாரி டாக்டர்... நீங்க சொல்றது நம்பும்படியாய் இல்லை. காரணம், விலை உயர்ந்த மது பானங்களுக்கு, 'எக்ஸ்பயரி டேட்' இல்லை. 10 வருஷத்துக்கு முன் தயாரிக்கப்பட்ட விஸ்கிக்கு என்னிக்குமே, 10 வயசு தான். அது கெட்டுப் போகவோ காலாவதியாகவோ வாய்ப்பில்லை.''
டாக்டர் மெல்லச் சிரித்தபடியே, ''அந்த உண்மை எனக்கும் தெரியும். பாட்டிலோட மூடியை திறக்காத வரைக்கும் மதுபானம் கெட்டுப் போக வாய்ப்பில்லை. ஆனா, பாட்டிலைத் திறந்த பிறகு சரியாக மூடப்படாத நிலையில் இருந்தா, மது கெட்டுப்போய் நஞ்சாக மாற வாய்ப்பு ரொம்பவும் அதிகம்.
''மருத்துவரீதியாய் இந்த உண்மை நிரூபிக்கப்பட்டும் இருக்கு. நான் சொல்றதுல உங்களுக்கு நம்பிக்கை இல்லேன்னா, 'கெஸ்ட் ஹவுஸ்' வாட்ச்மேன் ரத்தினம், அரை மயக்க நிலையில், தன்னையும் அறியாம, எல்லா உண்மைகளையும் ஒரு வாக்குமூலமா சொல்லியிருக்கான். அதைக் கேட்டுப் பாருங்க. உங்களுக்கு நம்பிக்கை வரும்.''
''வாக்குமூலமா?''
''ஆமா...'' என்று சொல்லி தலையசைத்த செழியன், தாஹிரை ஏறிட்டார்.
''ராத்திரி, 'கெஸ்ட் ஹவுசில்' சுய உணர்வு இல்லாம கிடந்த நாலு பேரையும் ஹாஸ்பிடலுக்கு கொண்டு வந்து சிகிச்சை அளித்தோம், அதில், வாட்ச்மேன் ரத்தினத்துக்கு மட்டும் லேசாய் சுய உணர்வு வந்தது. அவனை நான் தான் விசாரணை பண்ணினேன். அதை வீடியோவாய் நீங்க இப்ப பார்க்கலாம்.''

தன் மொபைல்போனை எடுத்து, அந்த வீடியோ பதிவை, 'ஆன்' செய்தார், செழியன். பாதி விழிகள் செருகிய நிலையில் ஹாஸ்பிடல் கட்டிலில் மல்லாந்து படுத்திருந்தான், ரத்தினம். டியூப் வழியாக ட்ரிப்ஸ் துளித்துளியாய் பயணித்துக் கொண்டிருந்தது. ஒரு ஸ்டூலில் உட்கார்ந்து குனிந்தபடி கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார், செழியன்.
'உம் பேர் என்ன?'
'ர... ரத்தினம்...'
'டாப்ஸ்லிப் கெஸ்ட் ஹவுசில் உனக்கு என்ன வேலை?'
'வாட்ச்மேன்ய்யா...'
'உன்னை யார் அடிச்சாங்க?'
'என்னை யாரும் அடிக்கலீங்கய்யா...'
'அப்புறம் எப்படி இவ்வளவு ரத்தம். மயக்கம் போட்டு விழுந்திருக்கே?'
'அது... வந்துங்கய்யா...'
'எதையும் மறைக்காம சொல்லு. அப்பத்தான் உன் உயிரைக் காப்பாத்த முடியும்...'
'இக்பால் தம்பி, தன் நண்பர்களோடு சீமைச் சரக்கு சாப்பிடறப்ப, எனக்கும் ஊத்தி குடுத்து, சாப்பிடுடான்னு சொல்வார். இன்னிக்கும் அப்படித்தான் குடுத்தார். நானும் வாங்கி சாப்பிட்டேன். ஆனா, கொஞ்ச நேரத்திலேயே வித்தியாசம் தெரிஞ்சுது...'
'என்ன வித்தியாசம்?'
'வயித்துக்குள்ளே லேசாய் எரிச்சல். அந்த எரிச்சல் கொஞ்சம் கொஞ்சமாய் அதிகமாகி வாந்தி வர்ற மாதிரி இருந்தது. அந்த நேரம் பார்த்து தான், இக்பால் தம்பி என்னைக் கூப்பிட்டு, 'அந்தப் பொண்ணு தப்பிச்சுப் போக பார்க்கிறா. அவளைப் போய் பிடி'ன்னு சொன்னார்.
'நானும் அவ பின்னாடியே ஓடினேன். ஆனா, ஓட முடியலை. தலை சுத்தி ரத்த வாந்தி எடுத்து, அப்படியே சாய்ஞ்சுட்டேன். அதுக்கப்புறம் என்ன நடந்ததுன்னு எனக்கு தெரியலைங்கய்யா...'
'நீ துரத்திக்கிட்டு ஓடின அந்தப் பொண்ணு யாரு?'
இந்த கேள்விக்கு, ரத்தினம் மவுனம் சாதிக்க, அவனுடைய தோளைத் தட்டினார், செழியன்.
'இதோ பார், நீ உண்மையைச் சொன்னாத்தான், பெரிய டாக்டர் சிகிச்சை அளித்து, உன்னை காப்பாத்துவார். இல்லேன்னா, நீ கோமா நிலைக்கு போய் கொஞ்சம் கொஞ்சமாய் உயிரை விட வேண்டியது தான்...'
'என்னைக் காப்பாத்துங்கய்யா... நான் எல்லா உண்மையையும் சொல்லிடறேன். அந்தப் பொண்ணோட பேரு, முகிலா. தருண் தம்பியோட சிநேகிதர், புவனேஷ். அந்தப் பெண் முகிலாவை கல்யாணம் பண்ணிக்க இருந்தார்.
'யாராவது ஒருத்தர் சந்தோஷமாயிருந்தா, இந்த மூணு பேருக்கும் பிடிக்காதுங்கய்யா. அது யாராயிருந்தாலும் சரி. 'கெஸ்ட் ஹவுசு'க்கு கொண்டு வந்து வெச்சுக்கிட்டு, கொஞ்சம் கொஞ்சமாய் சித்ரவதை பண்ணி, உயிர் போனதும், தண்ணி இல்லாத, 500 அடி ஆழ போர்வெல் குழிக்குள்ளே போட்டுடுவாங்கய்யா...'
'இதுவரைக்கும் இப்படி எத்தனை பேர் அவங்களோட மன வக்கிரத்துக்கு பலியாகி இருக்காங்க?'
'ஏழெட்டு பேர் இருப்பாங்கய்யா...'
'அத்தினி பேரும் பெண்களா?'
'இல்லீங்கய்யா... அதுல மூணு பேர், வயசுப் பசங்க...'
'அவங்க மேல, இவங்களுக்கு என்ன கோபம்?'
'தெரியல்லீங்கய்யா. ஒருத்தர் அழகாயிருந்தா பிடிக்காது; ஒருத்தர் நல்லா பாட்டுப் பாடினா பிடிக்காது; ஒருத்தர் சிரிச்சு பேசினா, பிடிக்காது...'
'இப்ப நீ சொன்னதெல்லாம் இக்பாலோட அப்பாவுக்குத் தெரியுமா?'
'தெரியாதுங்கய்யா. அவரு, அபுதாபியில் இருந்து மாசத்துக்கு ஒரு தடவை கோயமுத்துார் வந்து, இக்பால் தம்பியைப் பார்ப்பார். அதுவும் உக்கடத்தில் இருக்கிற வீட்டுக்குத் தான் வருவார். டாப்ஸ்லிப்ல இருக்கிற, 'கெஸ்ட் ஹவுசு'க்கு வர மாட்டார்...'
'மனநிலை சரியில்லாத மூணு பேர், இத்தனை நாளா ஏழெட்டு பேரை கொடூரமான முறையில் கொலை பண்ணியிருக்காங்க. நீ, ஏன் போலீசுக்கு சொல்லலை?'
'அய்யா... இக்பால் தம்பி, அந்த, 'கெஸ்ட் ஹவுசை' நான் பார்த்துக்க, மாசம் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் கொடுத்தார். காட்டிக் கொடுக்க மனசு வரலீங்கய்யா...'
'சரி... இப்ப நான் கேட்கப் போற கேள்விக்கு உண்மையான பதிலைச் சொல்லணும். இன்ஸ்பெக்டர் முத்துக்குமரனை கொலை பண்ணினது, இந்த மூணு பேர் தானே?'
'ஆமாங்கய்யா... குடிபோதையில அதுபற்றி பேசிட்டிருந்ததை நான் கேட்டேன்யா...'

வீடியோ பதிவு இந்த உரையாடலோடு நின்று போனது. இறுகிப் போய் உட்கார்ந்திருந்த, தாஹிரை ஏறிட்டார், செழியன்.
''மிஸ்டர் தாஹிர்... உங்களுக்கு இப்ப எல்லாமே புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்.''
கண்களில் நீர் மின்ன, ''வெரி சாரி சார்... 'பைபோலார் மென்ட்டல் டிஸ்ஆர்டரால்' பாதிக்கப்பட்ட இந்த மூணு பேருக்குள்ளும் இப்படியொரு மன வக்கிரம் இருக்கும்ன்னு நான் நினைச்சு கூட பார்க்கலை. உங்க சட்டப்படி அவங்களை தண்டிங்க.''
''சட்டத்துக்கு அப்படியொரு வாய்ப்பு கிடைக்காதுன்னு நினைக்கிறேன்,'' என்றார், டாக்டர் உமாபதி.
''என்ன சொல்றீங்க டாக்டர்?''
''காலாவதியான மதுவைச் சாப்பிட்டதால, நாலு பேரோட ரத்த நாளங்களும் மோசமான அளவில் சிதைஞ்சு போயிருக்கு. இன்னும் ஒரு வாரம் வரை கோமாவில் இருந்துட்டு, ஒவ்வொருவரா உயிரை விட ஆரம்பிச்சுடுவாங்க.
''ஆனா, வாட்ச்மேன் ரத்தினம் கொஞ்சம் குறைவா மதுவைச் சாப்பிட்டதால, அவன் மட்டும் பிழைக்க வாய்ப்பிருக்கு. அப்படி அவன் உயிர் பிழைச்சுட்டா, அவன் மூலமா இந்த கேஸ் சம்பந்தப்பட்ட பல உண்மைகள் வெளியே வரும். இவர்களால் பலியான அந்த ஏழெட்டு பேர் யார், யார் என்ற விபரங்களும் தெரிய வரலாம்.''
தாஹிர் சில விநாடிகள் மவுனமாய் இருந்து, செழியனிடம் திரும்பி, ''குட்ஹோப் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ள புவனேஷோட உடல்நிலை இப்போ எப்படியிருக்கு சார்?''
''அபாய கட்டத்தை தாண்டி, நார்மலான நிலைமைக்கு வந்துட்டார், புவனேஷ். அவருக்குப் பக்கத்திலேயே இருந்து, கவனிச்சுட்டு இருக்கா, முகிலா. புவனேஷோட அண்ணனும், அண்ணியும், முகிலாவோட அப்பாவும், சித்தியும், பரஸ்பரம் பேசி, ஒரு ஒற்றுமையான மனநிலைக்கு வந்துட்டாங்க. அநேகமாய் அடுத்த முகூர்த்தத்துல கல்யாணம் நடக்கலாம்.''
''என்னோட மகனை போய் பார்க்கலாமா... ப்ளீஸ் அனுமதிங்க...''
''பொதுவா இப்படி யாரையும் அனுமதிக்கிறதில்லை. ஆனா, நீங்க போய்ப் பார்த்துட்டு வாங்க.''
டாக்டர் உமாபதிக்கு நன்றி சொன்ன, தாஹிர், ஒரு நர்சின் உதவியோடு ஐ.சி.யூ., சென்று, சலனமில்லாமல் படுத்து கண் மூடியிருந்த மகனை நெருங்கி, நின்றார். நர்ஸ் வெளியேறி விட, இக்பாலையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த தாஹிரின் உதடுகளில், ஒரு புன்சிரிப்பு மெல்லப் பரவியது.
'சாரி, மை சன்... உன்னை இந்த நிலைமையில் பார்க்க மனசுக்கு கஷ்டமாயிருக்கு. உன் மன நோயை குணப்படுத்த எவ்வளவோ முயற்சிகளை எடுத்துகிட்டேன். ஆனா, நீ ஒத்துழைப்பு தரலை.
'ஒத்துழைப்பு தராதது மட்டுமில்லை, அதே மனநோயால் பாதிக்கப்பட்டு, பாதி மிருகங்களாய் மாறிட்ட தருணையும், ஜோஷையும் உன் கூடவே வெச்சுக்கிட்டு, மனித உயிர்களை வேட்டையாட ஆரம்பிச்சது தான் எனக்குப் பிடிக்கலை.
'இனிமேலும், உங்க மூணு பேரையும் விட்டு வைக்கக் கூடாதுன்னு, மது பாட்டில்களின் மூடி வழியாய் விஷ ஊசி போட்டு, அந்த மதுவை, காலாவதியான மதுவாய் மாத்தினேன். இந்த விஷயம் என்னைத் தவிர வெளியுலகத்துல யாருக்கும் தெரியப் போறதில்லை.
'சட்டத்தோட பார்வைக்கு நான் பண்ணினது, தப்பு தான். அது தப்பாய் இருந்தா, போலீஸ் என்னைக் கண்டுபிடிச்சு தண்டிக்கட்டும். சரியாய் இருந்தா, கண்டுபிடிக்க முடியாத எத்தனையோ வழக்குகளில் இதுவும் ஒரு வழக்காக மாறி பைலிலேயே துாங்கட்டும். குட் பை இக்பால். போயிட்டு வா...' என, மனசுக்குள் பேசி முடித்து, நிம்மதி பெருமூச்சொன்றை விட்டபடி, ஐ.சி.யூ.,வை விட்டு வெளியே வந்து, சந்தோஷத்தோடு நடக்க ஆரம்பித்தார், தாஹிர்.

இரண்டு வாரங்கள் கரைந்து போயிருக்க, அன்று காலை, 11:00 மணி.
கமிஷனர் பொய்யாமொழி முன், உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார், செழியன்.
''சார்... டாக்டர் உமாபதி சொன்ன மாதிரியே, இக்பால், ஜோஷ், தருண் மூணு பேரும் கோமா நிலையிலிருந்து மீளாமலேயே இறந்துட்டாங்க. வாட்ச்மேன் ரத்தினம் மட்டும் சுய உணர்வுக்கு திரும்பிட்டிருக்கான். முழுமையான உணர்வுக்கு வந்த பிறகு தான், அவனை விசாரிக்க முடியும்.''
''இட்ஸ் ஓ.கே., முகிலா - புவனேஷ் கல்யாணம், நேத்திக்கு அதே ரத்தின விநாயகர் கோவில்ல விமரிசையா நடந்தது போலிருக்கே?''
''ஆமா சார்... நானும் கல்யாணத்துக்கு போயிருந்தேன்.''
''எப்படியோ இந்த வழக்கு நல்லபடியா முடிஞ்சுது.''
''சாரி சார்... இந்த வழக்கு இன்னும் முடியலை.''
நிமிர்ந்து உட்கார்ந்தார், பொய்யாமொழி.
''என்ன சொல்றீங்க செழியன்?''
தன் பாக்கெட்டுக்குள் பத்திரப்படுத்தி வைத்திருந்த மூன்று அலுமினிய மூடிகளை எடுத்து மேஜையின் மீது வைத்தார், செழியன்.
''சார்... இந்த மூணு மூடிகளுமே உயர்ந்த அலுமினியத்தால் செய்யப்பட்ட விஸ்கி பாட்டில் மூடிகள். அன்னிக்கு 'டாப்ஸ்லிப் கெஸ்ட் ஹவுசு'க்கு போனபோது, இந்த மூடிகளையும் எடுத்துட்டு வந்தேன். இன்னிக்கு காலையில், 'பாரன்சிக் லேபில்' சோதனைக்கு உட்படுத்தி பார்த்தபோது தான், ஒரு உண்மை வெளியே வந்தது.''
''என்ன உண்மை?''
''குற்றவாளிகள் சாப்பிட்ட மது காலாவதியான மது இல்லை சார்.''
''அப்புறம்?''
''அலுமினிய மூடிகள் வழியாய் யாரோ விஷத்தை செலுத்தி, அந்த விஸ்கியை விஷமாய் மாத்தியிருக்காங்க. இந்த லென்ஸ் வழியா மூடிகளோட மேற்புறத்தைப் பாருங்க, புள்ளிகள் தெரியும்.''
செழியன், லென்ஸைக் கொடுக்க, வாங்கிப் பார்த்தார், பொய்யாமொழி.
அலுமினிய மூடிகளின் மேலே அந்த மைக்ரோ புள்ளிகள் பார்வைக்கு கிடைக்க, அதிர்ந்தார்.
''மை குட்னஸ்... இது, யாரோட வேலைன்னு தெரியலையே... எப்படி கண்டுபிடிக்கப் போறோம்?''
''சார்... நான் விசாரணை செய்த எந்த வழக்கிலும், இதுவரை குற்றவாளிகள் தப்பிச்சதே இல்லை. அதேமாதிரி இந்த வழக்கிலும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும், எங்கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது. கூடிய விரைவில் அந்த குற்றவாளியை உங்க முன்னாடி கொண்டு வந்து நிறுத்தறோம்.''
''ஆல் த பெஸ்ட்...'' என்று சொல்லி, செழியனின் கைகளை பிடித்து, குலுக்கினார் கமிஷனர்.

நிறைந்தது
ராஜேஷ்குமார்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X