அத்தனையும் ஒரு தாயாகுமா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2022
08:00

மகாதேவனும் அவர் மனைவி பானுமதியும் அடுத்த வாரம் போகவிருக்கும் காசி யாத்திரைக்கான முன்னேற்பாடுகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அழைப்பு மணி ஒலித்தது. ஓடிப் போய் கதவைத் திறந்த மகாதேவனுக்கு, பகீரென்றது.
சுரத்தில்லாமல் நின்ற மகள் சுதாவை, ''வாம்மா,'' என்று, அழைத்தார்.
எதுவும் பேசாமல் விடுவிடுவென அறைக்குள் சென்று, எடுத்து வந்த சூட்கேசை எறிந்து, மெத்தையில் குப்புற படுத்து, விசும்பினாள்.

மனைவியிடம் சைகை காட்டி, ''உன் பொண்ணு, திரும்பவும் கோவிச்சுண்டு வந்திருக்கா போலிருக்கு. வந்ததும், எதுவும் பேசாம உள்ளே போய் படுத்துண்டு அழறா. கொஞ்ச நேரம் எதுவும் கேட்க வேண்டாம். அப்புறம் விசாரிச்சுக்கலாம்,'' என்று, பானுமதியின் காதில் மெலிதான குரலில் கூறினார், மகாதேவன்.
பானுமதிக்கு இதைக் கேட்டதும், வருத்தமும், ஆதங்கமும் பொங்கியது.
'அடடா, என்ன இந்த பொண்ணு அடிக்கடி இப்படி வந்து நிக்கிறாளே... இத்தனைக்கும் தானே பார்த்து, காதலிச்சவனை தான கல்யாணம் பண்ணிக்கிட்டா. மாப்பிள்ளையும் நல்லவராத்தான் இருக்கார்.
'துளிக்கூட, 'அட்ஜெஸ்ட்' செஞ்சிக்காம, எடுத்ததுக்கெல்லாம் இப்படி சண்டை போட்டுட்டு வந்தா, இவளுக்கு எப்படி புத்தி சொல்றதுன்னே தெரியலையே. மகமாயி தாயே, நீதான் அவ மனசை மாத்தணும்...' என புலம்பி, கண்ணீர் விட்டாள்.
''ஏய், அசடாட்டமா நீயும் அழாத. கொஞ்சம் பொறுமையாதான் இதை, 'டீல்' செய்யணும். எல்லாம் சரியாயிடும்,'' என்று, மனைவியை சமாதானம் செய்தார், மகாதேவன்.

சுதாவிற்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகளாகிறது. ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தவள், ரவியை காதலித்து, எல்லார் சம்மதத்துடன், அவனுக்கு வாழ்க்கைத் துணை ஆனாள்.
ஒரு ஆண்டு காலம் வசந்த காலமாகத்தான் சென்றது. ரவியின் மூத்த அண்ணனிடம், மாமியார் இருந்த காலகட்டங்களில், சுதாவிற்கு எந்த சங்கடமும் இல்லை. அவரின் வீட்டிலேயே மாமியார் காலம் பூராவும் கிடந்து விடுவாளென்ற எண்ணத்தில் இருந்தவளுக்கு, பெட்டி, படுக்கையுடன் அந்த முதியவளை மைத்துனர் கொண்டு வந்து விட்டபோது, பகீரென்றது.
'டேய் ரவி, இனிமே எங்கிட்டே அம்மாவை வச்சிக்க முடியாதுடா. உன் மன்னி, ரொம்பவும் கேவலமாக பேச ஆரம்பிச்சுட்டா. அம்மாவும் ரொம்ப பொறுமையா, அவ சொல்றதையெல்லாம் காதில் வாங்காமத்தான் இருக்கா.
'ஆனா, அம்மா இப்படி அவமானப்படறது எனக்கு பொறுக்க முடியல. 'ஏன், நாமத்தான் இத்தனை வருஷமும் வைச்சுண்டு இருந்தோமே... உங்க தம்பிகிட்டே இனி இருக்கட்டுமே'ன்னு அம்மா காதுபடவே கத்தறா.
'அம்மாவுக்கு இப்படி ஒரு நிலை வந்துடுத்தேன்னு கவலையா இருக்கு. உன்கிட்ட கொஞ்ச நாள் இருக்கட்டுமேன்னு கூட்டிண்டு வந்தேன். அவ மனம் கோணாம, பக்குவமா, சுதா நடத்துப்பாள்னு நினைக்கிறேன்...' என்று, தன் இயலாமையை சொல்லி, அம்மாவை விட்டுச் சென்றார்.
அடுத்த நாள் மைத்துனர் கிளம்பும் வரை, சுதா மனதில் உருவான பூகம்பம், வெடிக்காமல் அடங்கியிருந்தது.
'புதுசா கல்யாணமானவங்கன்னு கூட இங்கிதம் தெரியாம, உங்க அண்ணன் நம் தலையில கிழவியை கொண்டு வந்து கட்டிட்டு போறாரே...' என்று, அதுவரை இந்த பூனையும் பால் குடிக்குமா என்பதுபோல் இருந்தவள், அவளுடைய அகங்காரத்தையெல்லாம் வார்த்தைகளால் வெளிப்படுத்தினாள்.
அண்ணன் சொல்லிச் சென்றது போல், ரவிக்கு, தன் அம்மாவை அவள் மனம் கோணாமல் பார்த்துக் கொள்ள இயலவேயில்லை.
தாய், தன்னிடமும் எதையும் கூறாமல் பொறுமையாக இருக்கிறாள் என்பதை உணர்ந்தவன், அவள் தனியே உட்கார்ந்து, கண்ணீரை துடைத்துக் கொள்வதை, பல சந்தர்ப்பங்களில் பார்த்து வருந்தினான்.
'சுதா, அம்மா நம்மள என்ன தொந்தரவு பண்றா சொல்லு... இது வேணும், அது வேணும்ன்னு கேட்கறாளா... நம்ப விஷயத்திலே மூக்கை நுழைச்சி எதையாவது பேசறாளா... உனக்கு வீட்டு வேலை எல்லாத்திலயும் ஒத்தாசையாதானே இருக்கா...' என்று பக்குவமாக மனைவியிடம் எடுத்துச் சொன்னான்.
'இதோ பாரு, உங்க அம்மா ஒத்தாசை எதுவும் எனக்கு வேண்டாம். என்னால கொஞ்சம் கூட பிரியா இருக்க முடியல. அவளை ஏதாவது, 'ஹோம்ல' கொண்டு சேர்க்கப் பாரு...' என்று நிர்தாட்சண்யமாக பேசி, பிரச்னை எழும்போதெல்லாம் சண்டை போட்டு, தன் தாய் வீட்டிற்கு கோபத்துடன் புறப்பட்டு விடுவாள்.

ஒவ்வொரு முறையும் சுதா இப்படித்தான் வந்திருந்தாள். எப்பவும் போல் ஒரு வாரம் அடமாக இருந்துவிட்டு, பெற்றோரின் சமாதான வார்த்தைகளை கேட்டு, திரும்பி விடுவாள்.
இந்த முறையும் சுதாவின் கோபம் நீர்த்து போய்விடுமென்று நினைத்திருந்த மகாதேவனுக்கு, ''அப்பா, என்னை சமாதானம் செய்ய ரெண்டு பேரும் நினைக்காதீங்க. மாமியார், அந்த வீட்ல இருக்கிற வரைக்கும் நான் போறதா இல்ல. அப்படியே வீம்பா ரவி இருந்தான்னா, அவனோட இனிமே வாழறதான்னு யோசனை செய்யணும்,'' என்று, அவள் ஆவேசமாக பேசியதில், கொஞ்சம் ஆடிப்போய் விட்டார்.
இதைக் கேட்ட பானுமதியும் பதட்டமடைந்து, ''இந்நிலையில், எப்படி காசி யாத்திரைக்கு மன நிம்மதியோடு சென்று வரமுடியும்,'' என கேட்டாள்.
''அதுக்குன்னு யாத்திரையை தள்ளி போடுவாளா என்ன... எல்லாம் காசி விஸ்வநாதர் காப்பாத்துவார். கவலைப்படாதே, ஒண்ணு தோன்றது, யாத்ரா சர்வீஸ்காரர்கிட்டே இன்னொருத்தர் கூட வரலாமான்னு கேட்கறேன்.
''அவர் சரின்னா, சுதாவையும் அழைச்சுண்டு போகலாம். ஏதாவது பிதுர்களுக்கு செய்யாம விட்டுப் போன தோஷமா இருந்தாலும், சரியா போயிடும். நம்பிக்கையா இரு,'' என்றவர், அதன்படியே ஏற்பாடுகளை செய்தார்.
''சுதா, நாங்க வயசானவங்க. தனியா காசிக்கு போகிறோமேன்னு இருந்தது. கூட நீ வந்தா ரொம்ப ஒத்தாசையாவும், உனக்கும் ஒரு மாறுதலாகவும் இருக்கும்,'' என்று, சுதாவை சமாதானம் சொல்லி, சம்மதிக்க வைத்து, தங்களுடன் பயணிக்க வைத்து விட்டார்.

அலகாபாத் திரிவேணி சங்கமத்தில், மகாதேவன் மூதாதையர்களுக்கான சடங்குகள் செய்த போதும், தம்பதி சமேதராய் நீராடும் போதும், அவர்களுடைய உடைமைகளை கவலையின்றி சுதாவிடம் விட்டுச் செல்ல முடிந்தது.
''நல்லவேளை சுதா நம்மோட வந்தா. அவ இல்லேன்னா இந்த கூட்டத்திலே எது எது தொலைஞ்சிருக்குமோ. என் தம்பி பாஸ்கர், மொபைல் போனை தொலைச்சுட்டதா சொன்னான்,'' என்றார், மகாதேவன்.
''ஆமாங்க... 'பானுமதி நகையெல்லாம் பத்திரமா பார்த்துக்கோ. அங்கே கூட்டமா இருக்கும் ஜாக்கிரதை'ன்னு கமலா மாமி சொல்லி அனுப்பினா,'' என்று, தங்களுடன் சுதா வந்ததற்கு, நன்றி சொல்லிக் கொண்டிருந்தனர்.

இரண்டு நாட்களில் கயா வந்தடைந்தனர்.
வாழையடி வாழையாக இருந்து வரும் நம்பிக்கை இன்னும் அழியாமல் இருப்பதை கயாவில் குவிந்திருக்கும் கூட்டம் சாட்சி சொன்னது.
சிரார்த்தம் எனும் மூதாதையர்களுக்கான வழிபாடு செய்ய, வரிசையாக ஆடவர்கள் உட்கார்ந்திருக்க, அவர்கள் பின் மனைவியர் நின்றனர். மகாதேவனும் அமர்ந்திருக்க, இதையெல்லாம் வேடிக்கை பார்த்தபடி, ஓரமாக அமர்ந்திருந்தாள், சுதா.
பகல், 2:30 மணி. சடங்குகளை செய்து வைக்கும் குருஜி, எல்லார் காதிலும் விழும் வகையில் சத்தமாக, ''எல்லாரும் அவங்க அவங்க குடும்பத்திலே இறந்து போனவங்க அத்தனை பேரையும் நினைச்சுக்கலாம். இதிலே நண்பர்களும், வீட்டு வேலைக்காரர்கள்னு யார் வேணும்னாலும் இருக்கலாம்.
''அவங்க எல்லாரும், நீங்க வருவீங்க, பிண்டம் போட்டு கரை ஏத்துவீங்கன்னு காத்துக்கிட்டு இருக்கிறதா ஐதீகம். இப்போ ஒவ்வொரு பிண்டமா எடுத்து வைங்க, முதல்ல தகப்பனார் பேரை சொல்லுங்கோ,'' என்று, தாத்தா, கொள்ளு தாத்தா என்று, ஒவ்வொருவருக்கும் பிண்டம் எனப்படும் சாத உருண்டையை வைக்கும்படி சொல்ல, எல்லாரும் வைத்தனர்.
இறந்த உறவினர்கள், நண்பர்கள் என்று சொல்லிவிட்டு திரும்பவும், ''இப்போ பெத்த தாயாருக்காக விசேஷமாக, 16 பிண்டங்கள் போடணும்,'' என்று சொல்லி, ஒவ்வொரு பிண்டத்துக்கும், ''தாயே, நான் கருவாய் வளரப் போகிறேன் என்று தெரிய ஆரம்பித்தபோது அது உண்மையாய் இருக்க வேண்டுமே... தாய்மை பேற்றை நான் அடைய வேண்டுமே என்று தவித்தாயே, அதற்கு இந்த பிண்டம்.
''அடுத்து, கரு நிலைக்க வேண்டுமே என்று தெய்வங்களையெல்லாம் வேண்டி நான் உன் வயிற்றில் நிலைத்து விட்டேன் என்று தெரிந்தவுடன் பரவசம் அடைந்தாயே, அதற்கு இந்த பிண்டம்...''
இப்படி துவங்கி, 10 மாதங்கள் தாய் பட்ட அவஸ்தைகள், வேதனைகள், உடல் ரீதியான உபாதைகள், பின் பிரசவ காலத்தில் மறுபிறவி ஏற்ற உயிர்போகும் வலிகள், பெற்ற பின் இரவு பகல் துாக்கமில்லாமல் காத்த பொறுமை, மலம், சிறுநீர் என, அருவருப்பை தாங்கிய தியாகம்...
குழந்தையாய் உடல் நலம் குன்றியபோது பட்ட கவலை, செய்த சேவை என, தாயின் அருமையை ஒவ்வொரு பிண்டத்திற்கும் சொல்ல சொல்ல, அதை வைத்துக் கொண்டிருந்த அத்தனை ஆடவருக்கும் அது நெகிழ்ச்சியூட்டும் விதமாக அமைந்தது.
எல்லார் கண்களிலும் நீர் துளிகளாக நிறைந்திருக்க, மகாதேவன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த முதியவர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு, 'ஓ'வென அழத் துவங்கினார்.
அப்படி சத்தம் போட்டு அழுதவர் மயங்கி சாய்ந்துவிட, எல்லார் கவனமும் அவர் மேல் விழுந்தது. அவர் பின்னால் மனைவி இல்லை. தனியாக வந்திருப்பார் போலும்.
உடனே மகாதேவன், ''சுதா, அந்த தண்ணீர் பாட்டிலை கொண்டா,'' என்று, அவர் முகத்தில் தண்ணீரை தெளித்தார்.
முகத்திலும், வாயிலும் பட்ட தண்ணீரால் அவர் மூர்ச்சை தெளிந்து, அமர்ந்தார். எல்லாரும் கூடி நிற்பதைக் கண்டு, சற்றே வெட்கமடைந்தார்.
''என்னை மன்னிச்சுடுங்க, கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன். பண்டிதர், தாயைப் பற்றியும், தாய்மையோட அருமையையும் சொல்ல சொல்ல, எனக்கு ரொம்ப குற்ற உணர்ச்சியா போச்சு.
''என் தாயாருக்கு நான் ஒண்ணுமே செய்யல. என் மனைவி என்னை செய்ய விடல. என் இயலாமையால அம்மாவை, 'ஹோம்'ல சேர்த்தேன். கடைசி காலத்திலே படுத்த படுக்கையா இருந்தபோதும் என் கோழைத்தனத்தால, மனைவியோட பேச்சுக்கு அடங்கி, அம்மாவை கவனிக்காம விட்டுட்டேன்.
''இப்போ என் மனைவியும் போய் சேர்ந்துட்டா. இப்பேர்பட்ட அருமையும் பெருமையுமான தாய்மைக்கு, இந்த ஜன்மாவிலே ஒண்ணும் செய்ய முடியாத பாவி ஆயிட்டேனேன்னு நினைச்சு அழுதுட்டேன்,'' என்று கண்களை துடைத்து, இயல்பு நிலைக்கு வந்தார்.
கூடியிருந்த எல்லாரும் உணர்ச்சி வசப்பட்டவர்களாய் கேட்டுக் கொண்டிருக்க, மகாதேவனுக்கு, தன் பெண்ணின் மனதில், இது துளியேனும் சலனம் ஏற்படுத்தி இருக்காதா என்ற எதிர்பார்ப்பும், ஆவலும் எழுந்தது.
தன்னை அப்பா பார்ப்பதை அறிந்தவுடன், சுதாவிடமிருந்து அடக்க முடியாத அழுகை பீறிட்டது.
''டேக் இட் ஈஸி... அந்த பெரியவர் சொன்னதில, 'மூவ்' ஆயிட்டே போலிருக்கு...'' என்று சமாதானமாய் சொன்னவரிடம், ''இல்லப்பா, ரவி, 'மெசேஜ்' அனுப்பி இருக்காம்பா,'' என்று தேம்பி அழுதபடி, அப்பாவிடம் அந்த தகவலை காட்டினாள்.
பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்து ஆளாக்கும் போது, படும் எல்லா கஷ்டங்களுக்கும் மேலாக, முதுமையில் தான் ஒரு சுமையாகி, பெற்ற பிள்ளைகளுக்கு தர்மசங்கடம் கொடுக்காமல் விரைவில் உயிரை விடவேண்டுமே என்ற தவிப்பும், தாய்மையின் அருமைகளுள் சேர்க்கப்பட வேண்டிய அம்சம் என்பதை காட்டுவது போல், அந்த தகவல் வந்திருந்தது.
நேற்று இரவு நெஞ்சு வலி வந்ததில் ஆஸ்பத்திரியில் சேர்த்த மாமியார், பகல், 2:00 மணியளவில் காலமாகி விட்டதாக, அதில் இருந்தது.
''ரொம்பவும் தப்பு பண்ணிட்டேன்ப்பா,'' என்று இன்னும் அழுதுகொண்டே இருக்கிறாள், சுதா.

அகிலா கார்த்திகேயன்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SURESH M - madurai,இந்தியா
09-ஆக-202213:02:55 IST Report Abuse
SURESH M அனைவருக்குமான சிறுகதை முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம் நன்றி
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
07-ஆக-202220:34:19 IST Report Abuse
Girija மிகவும் நல்ல கதை, இதுவரை அறிந்திராத சாஸ்திரங்களை பற்றி மிக எளிமையாக கதாசிரியர் எழுதியுள்ளார்.
Rate this:
Cancel
P.Subramanian - Chennai,இந்தியா
07-ஆக-202210:36:38 IST Report Abuse
P.Subramanian முதியோர்களை எந்த நிலையிலும் பெற்ற மகன்கள் காப்பாற்ற வேண்டும். அதற்கு அவரவர் மனைவியர் துணையோடு நின்று காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு உள்ள சிறுகதை. அருமை. பாராட்டுக்கள். - பூ.சுப்ரமணியன், பள்ளிக்கரணை, சென்னை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X