வணக்கம்... நான் க.ராஜேஸ்வரி. திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லுார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை. 2004ல் இருந்து தமிழ் ஆசிரியையா இயங்குறேன்; நடப்பு கல்வியாண்டுல இருந்து இந்த தலைமை பொறுப்பு!
'அம்மா'வாக...
வாழ்க்கைக்கு ஆரோக்கியம் தருமென்றாலும், மாணவர்கள் கசப்பாய் உணரும் கல்வியை சுவையாக மாற்றித்தர வேண்டியது ஆசிரியரோட கடமை! 'டீச்சர்'னு என்னை கூப்பிடாம 'அம்மா'ன்னு மாணவர்கள் என்னை கூப்பிடுற போதும், பாடல்களா பாடங்களை அவங்க ரசிக்கிற போதும் எனக்கு என் கடமையை சரிவர செஞ்ச திருப்தி!
அர்ஜுன பார்வை
காலையில பள்ளிக்கு வந்துட்டா என் சொந்த வாழ்க்கையை மறந்துடுவேன். மகாபாரதத்துல அர்ஜுனன் கண்ணுக்கு கிளி மட்டும் தெரிஞ்ச மாதிரி, பணி நேரத்துல எனக்கு இந்த பள்ளி மட்டும்தான் மனசுல நிறைஞ்சு இருக்கும். 'இது சரியா, தவறா'ங்கிறதை தாண்டி, இப்படி இயங்குறதுலதான் எனக்கு மகிழ்ச்சி!
அழகு
பொலிவற்ற இந்த பள்ளி கட்டட சுவர்களை வண்ணமூட்ட என் வளையல்களை வங்கியில அடகு வைச்சேன். 'இதுக்காகவாவது நாம நல்லா படிக்கணும்டி!' - இப்படி ஒரு மாணவியோட வார்த்தைகளை கேட்டப்போ, மனசுல அப்படி ஒரு நிறைவு! அந்த கணம் என்னை யாராவது படம் பிடிச்சிருந்தா, மகிழ்ச்சியின் அடையாளமா அந்த புகைப்படம் இருந்திருக்கும்!
நிஜ 'கொரோனா'
'கொரோனா' ஏற்படுத்திய உயிர் இழப்புகள், பொருளாதார பாதிப்புகளைவிட, மனித மனசுல ஏற்பட்டிருக்கிற பாதிப்புகள் ஆபத்தானதா இருக்கு. 'தொப்புள் கொடி' உறவா இருக்க வேண்டிய 'ஆசிரியர் - மாணவர்' உறவுல யுத்தம்; மாணவர்கள் மனசுல... ஊரடங்கு ஏற்படுத்தின வெற்றிடம்! ஆசிரியர்களே... இந்த 'கொரோனா'வை ஒழிக்க நாம கடுமையா உழைக்கணும்!
செல்வங்களே...
தாய் தற்கொலை செய்து கொள்ள, தந்தை வேறொரு உறவை அமைத்துக் கொள்ள, உறவுகள் கைவிட, வாழ்விடம் கொடுத்த தாத்தாவோ போதையுடன் வசைச்சொல் பொழிய... 'நான் படிக்கணும்'னு என்கிட்டே வந்து நின்னா ஒரு மாணவி. மாணவச் செல்வங்களே... உங்கள் கஷ்டங்களுக்கான வடிகால் தேடுங்கள்; தவறான முடிவு எப்போதும் வேண்டாம்!
என் திட்டம்
'பணி ஓய்வுக்குப் பிறகு என்ன பண்ணலாம்னு யோசிக்கிற அளவுக்கு எனக்கு ஓய்வு நேரம் இல்லை'ங்கிறது தான் நிஜம். 'நிகழ்கால கடமைகளை சரியா செஞ்சா எதிர்காலம் நிச்சயம் பாதுகாப்பா இருக்கும்'னு நம்புறேன்!
என் ஆசை
பயண அனுபவங்கள் உள்ளவங்க தனித்துவத்தோட இருப்பாங்க. பாதுகாப்பான பயணங்கள் பெண்களுக்கு சாத்தியப்படணும். என் மாணவியருக்கு இந்த சூழல் அமையணும்னு ஆசைப்படுறேன்.