* அதிக வரி செலுத்தியவர்களுக்கு 'விருது' வழங்கி விளம்பரப்படுத்தி, வரி கட்டுறதை ஊக்கப்படுத்துறது எல்லாம் சரி; ஆனா, 'விருது வாங்கின அத்தனை பேரும் தங்களோட மொத்த சம்பாத்தியத்துக்கும் நேர்மையா கணக்கு சொல்லி வரி செலுத்தி இருக்காங்க'ன்னு உத்தரவாதம் தர முடியுமா; 'முடியாது'ன்னா அப்புறம் இந்த 'விருது' எதுக்காக?
* 'தேசிய விருது செய்தி வந்தப்போ வெளிநாட்டுல இருந்தேன்; என் மகளுடைய கல்விக்காக போயிருந்தேன்'னு நடிகர் சூர்யா மேடையில சொன்னதும்... விசில்; கைதட்டி கூவுன அந்த கூட்டத்துக்கிட்டே கேட்குறேன்; ஏன் தமிழா... கல்விக்காக உன் வீட்டு குழந்தையை வெளிநாடு அழைச்சுட்டுப் போக உன்னால முடியுமா?
* மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையிலான வசதிகளுடன் பொது/ தனியார் நிறுவனங்கள் இருக்குறதை உறுதிப்படுத்த வேண்டிய அரசு, அந்த வசதிகளோட இருக்குற நிறுவனங்களை மட்டும் தேர்ந்தெடுத்து பதக்கம் தந்து பாராட்டுறதுனால என்ன பலன்; திருந்தாதவங்களுக்கு 'சாக்லேட்' காமிச்சு திருத்த அவங்க என்ன பச்சை மண்ணா?
* எனக்குப் புரியலைங்க... பள்ளிக் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் தொடர்ந்துட்டே இருக்குற சூழல்ல, இன்னும் பள்ளிக் குழந்தைகளுக்கு 'குட் டச், பேட் டச்' சொல்லிக் கொடுத்திட்டு இருக்குற காவல் துறை, இதுக்கு காரணமா இருக்குற ஆசிரியர்களை உட்கார வைச்சு, 'போக்சோ' பற்றி எச்சரிக்க ஏன் தயங்குது!
ஜெய்ஹிந்த்!