'வறுமை தரும் பரிதாபத்திலும் ஆண் - பெண் பேதம் உண்டு' என்கிறது ப.நாராயணம்மாளின் வாழ்வனுபவம்!
'டீ வியாபாரத்துக்காக என்னோட செல்போன் நம்பர் கொடுத்திருப்பேன்; ஆனா, நேரம் காலம் பார்க்காம அழைப்பாங்க! 40 ரூபாய் பாக்கி இருக்குறப்போ, 20 ரூபாய் ஏற்கெனவே தந்துட்டதா சொல்லி ஏமாத்துவாங்க. 'இந்த பக்கம் எல்லாம் வராதேம்மா'ன்னு முகத்துல அடிக்கிற மாதிரி டீக்கடைக்காரங்க திட்டுவாங்க. கடந்த ஆறு ஆண்டுகள்ல இதுமாதிரி நிறைய அனுபவங்கள்!'
சைக்கிள் கேரியரில் 10 லிட்டர் டீ கேனை சுமந்தபடி ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தின் சாலைகளில் வலம் வரும் இவருக்கு பள்ளி செல்லும் இரு மகள்கள், ஒரு மகன்!
ஓய்வுக்கு நேரம் இருக்குதா?
வயசு கூடுறதனால ஓய்வுக்கு அடிக்கடி உடல் கெஞ்சுது. பத்து நிமிஷம் கண்ணயர்ந்தா, 'நீ இப்படி துாங்கினா பிள்ளைகளோட பசி தணிக்க என்ன பண்ணுவே'ன்னு மனசு சத்தம் போடுது; அடுத்த நிமிஷமே துாக்கத்தை உதறிட்டு சைக்கிள் மிதிக்க ஆரம்பிச்சிடுறேன்!
பிள்ளைகள் என்ன சொல்றாங்க?
'போன தீபாவளிக்கு வாங்கின சட்டையே புதுசாத்தான் இருக்கு; இந்த வருஷம் புதுசு வேண்டாம்மா'ன்னு மகன் சொல்றான்! 'கொடி வரைஞ்சது போக கோலப்பொடி நிறைய இருக்கு; பொங்கலுக்கு தனியா வாங்க வேண்டாம்'னு பொண்ணுங்க சொல்றாங்க! 'போதும்'ங்கிற மனசால அவங்க நிறைவா இருக்குறதா நம்புறேன்!
கடந்த 2017ல் ரயில் மோதி கணவர் பன்னீர்செல்வம் இறந்துவிட, மூன்று பிள்ளைகளுக்கு தந்தையுமாகி நிற்கிறார் அரக்கோணம் கைனுார் கிராமத்தின் 38 வயது நாராயணம்மாள்.
அப்பா இருந்திருந்தால்...?
மூத்த மகள் கலைவாணி: ஸ்கூல்ல 'பேரன்ட்ஸ் மீட்டிங்' நடக்குறப்போ வந்திருப்பார்! எங்க ஸ்கூலுக்கும் டீ கொடுக்குறதால அம்மா வர்றதில்லை!
அம்மா டீ விற்கிறது...
இளைய மகள் ஷாலினி: அவங்க விற்பனை பண்ற இந்த டீ தான் எங்களுக்கு வாழ்வாதாரம்; அவங்களைவிட ஒருபடி மேல இந்த தொழிலை நாங்க நேசிக்கிறோம்!
உங்க விருப்பப்படி ஒருநாள் முழுக்க அமைந்தால்...
எங்களோட ஒருநாள் தேவைங்கிறது ரொம்பவே சின்னது; அதுக்கான பணம் கையில இருக்குதுன்னா, அந்த ஒருநாள் முழுக்க அம்மாவை எங்க பக்கத்துலேயே வைச்சுக்குவோம்!
கலைவாணி சொல்ல ஷாலினியும், உதயாவும் தலையாட்ட, பொங்கி வரும் தன் உணர்வை மறைக்க தலைகுனிந்து கொள்ளும் நாராயணம்மாள், தினமும் 300 டீ விற்கிறார். ஆதரவற்றோர் கேட்டால் இலவசமாகவும் தருகிறார். அதை ஆச்சரியமாகப் பார்த்தால், 'கொடுத்து உதவ பணம் இல்லை... இதை கொடுக்கிறேன்' என்கிறார்.
'நாங்க நல்லா படிச்சு அம்மா படுற கஷ்டத்துக்கு அர்த்தம் கொடுக்கணும்!' - மூன்று பிள்ளைகளின் ஆசை இதுதான்!
கைகூடட்டும் கனவுகள்.