ஆனந்திக்கு காய்ச்சல்; ரெண்டு நாளாக படுக்கையில் இருந்தாள்; ஊசி போட்டால் குணமாகும்; ஆனால், மருத்துவத்துக்கு செலவு செய்ய கையில் பணமில்லை.
தங்கை ஆனந்தி என்றால் அக்கா அமிர்தாவுக்கு பிரியம். இருவரும் ஒரே பள்ளியில் படித்து வந்தனர். அடிக்கடி சண்டை போடுவர்; சிறிது நேரத்திற்குள் சீராகி, தோள் மீது கையை போட்டு, உற்சாகமாக பள்ளிக்கு கிளம்புவர்.இவர்களின் அம்மா பெயர் செல்லம்மா. இளம் வயதில், கணவனை இழந்தவள். குழந்தைகளை காப்பாற்ற கடுமையாக போராடி வந்தாள்.
அன்று மாலை - பள்ளியில் வகுப்பு முடிந்து வீடு திரும்பினாள் அமிர்தா. பிரதான சாலைக்கு வந்தபோது, காலில் ஏதோ தட்டுப்பட்டது. குனிந்து பார்த்தாள். சிறிய பை ஒன்று கிடந்தது. அதை எடுத்து ஆவலோடு திறந்தாள். அதில், 500 ரூபாய் நோட்டு கட்டுகள் மூன்றும், ஆதார் மற்றும் குடும்ப அட்டையும் இருந்தன.பணத்தை பார்த்ததும் முகம் மலர்ந்தாள் அமிர்தா. அதை பத்திரப்படுத்தினாள்.
'இந்த பணத்தில் ஆனந்தியை மருத்துவமனைக்கு அழைத்து போகலாம்' என யோசித்தவாறு வீடு திரும்பினாள். அம்மாவிடம் விஷயத்தை கூறி, பணப்பையை கொடுத்தாள். அம்மா முகம் மாறியது. மிகுந்த பொறுப்புடன், ''தப்பு... இதை தொலைத்தவங்க, என்ன வேதனையில் இருப்பாங்க... அடுத்தவங்க கஷ்டத்தில் கிடைக்கிற பணம் நமக்கு தேவையில்லை. இந்த பையை தவற விட்டவங்க கிட்ட சேர்க்கணும்...'' என்று அறிவுரை கூறினார்.
உடனே, ஆதார் அட்டையில் இருந்த முகவரியைத் தேடி சென்று, பணத்தை உரியவரிடம் சேர்த்து திரும்பினர்.
செல்லங்களே... பிறர் வேதனையால் வரும் செல்வம், மகிழ்ச்சியை தராது; உழைத்து பெறும் செல்வமே நிம்மதியை தரும்!
அகரம் எம். சித்ரா