நவராத்திரியில், துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி வழிபாடு என, மூன்றாகப் பிரித்து, தமிழகத்தில் விழா கொண்டாடுகிறோம். வடக்கே துர்க்கையை மையமாக வைத்து, துர்கா பூஜை நடத்துகின்றனர்.
இந்த நல்வேளையில், பிரம்மாரி என்ற துர்க்கையின் மறு அவதாரம் பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.தமிழக கிராமங்களிலுள்ள அம்மன் கோவில்களில், பிரம்மரக் ஷி என்ற அம்பாளை பிரதிஷ்டை செய்திருப்பர். இவளை வடக்கே பிரம்மாரி என்பர். பிரம்மனின் படைப்புகளில் அதிசயமானவள்.
தவமிருந்து வரம் பெறுவதில் வல்லவர்கள், அசுரர்கள். அருணாசுரன் என்பவன், பிரம்மாவை நினைத்து செய்த தவத்தால், இரண்டு கால், நாலு கால் ஜீவன்களால் தனக்கு அழிவில்லை என்ற வரத்தைப் பெற்றான். அவனது காலத்தில், இந்த ஜீவன்கள் மட்டுமே இருந்தன.
தான் பெற்ற வரத்தை தவறாகப் பயன்படுத்தி, உலக உயிர்களுக்கு துன்பம் செய்தான். சிவனுக்கு விஷயம் தெரிந்து, அருணாசுரனை அடக்கும் பொறுப்பை, பார்வதியிடம் ஒப்படைத்தார்.
புத்திசாலியான அவள், பிரம்மாவிடம், ஆறு கால் ஜீவன்களைப் படைத்து தன்னிடம் அனுப்ப வேண்டுகோள் விடுத்தாள். ஆயிரக்கணக்கான வண்டுகளையும், தேனீக்களையும் படைத்து அனுப்பினார், பிரம்மா. அவை அம்பாளின் உடலில் ஒட்டிக் கொண்டன. இதனால், அவள் பிரம்மாரி என்று பெயர் பெற்றாள்.
பிரம்மாரி என்றால், தேனீ அல்லது வண்டுகளின் தெய்வம் என பொருள். இவள், அருணாசுரனுடன் போருக்கு சென்றாள். அவளது உடலில் ஒட்டியிருந்த வண்டுகளும், தேனீக்களும் அந்த அசுரனைக் கொட்டித் தீர்த்தன. அவற்றை சமாளிக்க முடியாமல் இறந்தே போனான், அசுரன்.
பிரம்மனின் வாக்குப்படி, இரண்டு கால், நான்கு கால் ஜீவன்களால் அசுரன் அழியவில்லை. அதே நேரம் அநியாயமும் அழிந்தது. பிரம்மனின் வாக்கை காத்தவள் - ரட்சித்தவள் என்பதால், பிரம்மரக் ஷி என்ற பெயரும் ஏற்பட்டது.
இதைத் தான் கிராமத்து கோவில்களில், பிரம்ம ராட்சசி, பிரம்மராட்சி என்றெல்லாம் எழுதி வைத்திருப்பர். பிரம்மரக் ஷி என்பதே சரியானது.பிரம்மாரி என்ற பெயரில், பிராணயாம மூச்சு பயிற்சி ஒன்றும் உள்ளது. கோபம், மன அழுத்தம் உள்ளவர்கள், இந்த பயிற்சியின் மூலம் நிவாரணம் பெறலாம். தேனீக்களும், வண்டுகளும் துளித்துளியாக தேன் சேர்க்கும். இதற்கு அவற்றின் பொறுமை, சுறுசுறுப்பு, மன வலிமை போன்றவையே காரணம்.பிரம்மரக் ஷியை வழிபடும் போது, இந்த நல்ல குணங்கள் எங்களுக்கும் வேண்டும் என, வணங்க வேண்டும்.
பிரம்மாரி என்றால், சுழன்று நடனமாடுதல் என்ற பொருளும் உண்டு. இதனால் தான் நவராத்திரி காலத்தில், அம்பாளை பிரம்மச்சாரிணி என்ற பெயரில் அலங்கரித்து. அவள் முன் கோலாட்டம், தாண்டியா போன்ற சுழன்றாடும் நடனங்களை நிகழ்த்துகின்றனர். ஆந்திர மாநிலம், ஸ்ரீசைலம், மல்லிகார்ஜுன சுவாமி கோவிலில், பிரம்மராம்பா என்ற பெயரில், பிரம்மாரி அருள்பாலிக்கிறாள்.
நவராத்திரி காலத்தில், இவளை வணங்கி, நற்குணங்களைப் பெறுவோம்.
தி. செல்லப்பா